எடப்பாடி அசைன்மென்ட்; முடித்துக்கொடுத்த காமராஜ் - அதிமுக-வில் ஒரத்தநாடு மா.சேகர் இணைந்த பின்னணி!

அமமுக-வின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் மா.சேகர். இவர் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராக இருந்து வருகிறார். அ.ம.மு.கவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் டி.டி.வி.தினகரன் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து அதிலிருந்து விலகி அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட மாற்று கட்சிகளில் சேர்ந்து வந்தனர். அந்த நிலையிலும் மா.சேகர் டி.டி.வி.தினகரனுக்கு விசுவாசமாக இருந்தார். அ.ம.மு.க பலமாக இருக்க கூடிய மாவட்டங்களில் தஞ்சாவூரும் ஒன்று. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மா.சேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரத்தநாடு மா.சேகர்

உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மா.சேகர் அ.தி.மு.க, தி.மு.க என்ற இரு கட்சிகளின் பலத்திற்கு இடையே தன் சொந்த செல்வாக்கில் பேரூராட்சியை கைப்பற்றினார். தமிழகத்திலேயே அ.ம.மு.கவை சேர்ந்த ஒரே ஒரு பேரூராட்சி தலைவராக மா.சேகர் மட்டுமே இருந்து வந்தார்.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த மா.சேகர் அதிலிருந்து விலகி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்திருப்பது டெல்டா அரசியலில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

டி.டி.வி.தினகரன்

இது குறித்து கட்சி வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம், ``ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்த மா.சேகர், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. இவர் ஒரத்தநாடு பகுதியில் அ.தி.மு.க-விற்காக அர்ப்பணிப்புடன் கட்சி பணியை செய்து வந்தார். ஒரத்தநாடு நகர செயலாளர், தஞ்சை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்ளிட்ட பதவிகள் வகித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக அதிகார பலத்துடன் வலம் வந்த வைத்திலிங்கத்தின் ஆதரவாளராகவே தொடக்கத்தில் இருந்தார் மா.சேகர். இருந்தாலும் ஒரத்தநாடு பகுதியில் மா.சேகருக்கு என தனி செல்வாக்கு உயர்ந்தது. அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள் மற்றும் அப்பகுதியினர் தங்கள் சொந்த பிரச்னைகளுக்கு சேகரிடம் சென்றால் தீர்வு கிடைக்கும் என செல்லத் தொடங்கினர். இதனை விரும்பாத வைத்திலிங்கம் மா.சேகரை ஓரம் கட்டத்தொடங்கினார் என்ற பேச்சும் எழுந்தது.

எடப்பாடி பழனிசாமியுடன் மா.சேகர்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மா.சேகர் சீட் கேட்டார். ஆனால் வைத்திலிங்கம் பரசுராமனுக்கு சிபாரிசு செய்து அவரை போட்டியிட வைத்து எம்.பியாக்கினார். உண்மையாக உழைத்த தனக்கு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சீட் வாங்கி தரவில்லை என்பதை உணர்ந்தார் சேகர். அப்போதிலிருந்தே வைத்திலிங்கத்தை நேரடியாக எதிர்த்தார். அ.தி.மு.கவில் இருந்து கொண்டே இருவருக்கும் முட்டல், மோதல்கள் தொடர்ந்தன. 2016 சட்டமன்ற தேர்தலில் வைத்திலிங்கம் தோல்வியடைவதற்கு சேகரும் முக்கிய காரணம் என இப்போது வரை பேசப்படுவதுண்டு.

இந்த நிலையில் அ.தி.மு.க-விலிருந்து சசிகலா ஓரம்கட்டபட்ட போது சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டார் சேகர். இதனை தொடர்ந்து அ.ம.மு.கவில் இணைந்த அவருக்கு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்தார் டி.டி.வி.தினகரன். வைத்திலிங்கத்தை எதிர்த்து சரிக்கு சமமாக மல்லுக்கட்ட சரியான நபர் மா.சேகர் தான் என டி.டி.வி.தினகரனே புகழ்ந்தார்.

சசிகலா

ஒரு முறை டி.டி.வி.தினகரன் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த போது பெரும் வரவேற்பு கொடுத்து, நூறு கார்கள் அணிவகுக்க தினகரனை அழைத்து சென்ற சேகரின் விசுவாசத்தை பார்த்து மெய்சிலிர்த்தார் தினகரன்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க சார்பில் சேகரும் போட்டியிட்டதால் தொடக்கத்தில் வைத்திலிங்கம் தோல்வியடையும் சூழல் நிலவியது. இதை உணர்ந்த வைத்திலிங்கம் இந்த முறை தோல்வியடைந்தால் தன் அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான் என்பதை அறிந்து, பல்வேறு வழிகளில் முயன்று பெரும் போட்டிக்குப் பின்னே வெற்றியை தன் வசப்படுத்தி கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

வைத்திலிங்கம்

இந்த நிலையில் சசிகலாவிற்கும், டி.டி.வி.தினகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது இப்போது வரை தொடர்கிறது. சசிகலாவை சந்திக்க கூடாது, அவர் படத்தை பயன்படுத்த கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் அ.ம.மு.கவினருக்கு மறைமுகமாக விதிக்கப்பட்டது. சசிகலா ஆதரவாளரான மா.சேகர் இதனை விரும்பவில்லை. சமீபத்தில் ஒரத்தநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு மா.சேகர் டி.டி.வி.தினகரனை அழைத்து சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகளில் தினகரனுக்கு இணையாக சசிகலா படமும் இருந்தது.

இதை பார்த்த தினகரன் கோபமாகி நிகழ்ச்சியில் பேசாமலேயே திரும்பி விட்டாராம். காரில் வரும் போதே மாநில பொருளாளரான முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமி, ஏன் சேகர், சின்னம்மா படத்தை போட்டீங்க, தினகரன் உங்க மேல் கடும் கோபமாகி விட்டார் என சொல்ல நிர்வாகிகள் பயன்படுத்துவதை நான் எப்படி தடுக்க முடியும் என வெள்ளந்தியாக கேட்டிருக்கிறார் சேகர்.

இதனை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் சொன்னதன் பேரில் சேகருக்கு பல நெருக்கடிகள் கொடுத்து வந்தாராம்ம் ரெங்கசாமி. இந்த சம்பவம் சசிகலாவிற்கு தெரிந்தும் அவர் தொடர்ந்து மெளனமாக, அமைதி காத்தார். இது மேலும் சேகரை அதிருப்தியடைய செய்தது. சசிகலா ஆதரவாளர்களாக அ.ம.மு.கவில் தொடரும் முக்கிய நிர்வாகிகள் பலர் இது போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த சூழலில் டி.டி.வி.தினகரன் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து விமர்சனம் செய்து பேசி வருகிறார். இதனால் அவரது பலத்தை குறைத்து அ.ம.மு.கவில் கோலோச்சி கொண்டிருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலரை தன் பக்கம் இழுக்க நினைத்து அதனை ஆர்.காமராஜிடம் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக மா.சேகர் அதிருப்தியில் இருக்கிறார் அவரை பேசி அழைத்து வாங்க என ஆர்.காமராஜிடம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி, ஆர்.காமராஜ், மா.சேகர்

வைத்திலிங்கத்தின் சொந்த ஊரில் அவருக்கு எதிராக கோலோச்சுவதற்கு மா.சேகர் தான் பொருத்தமாக இருப்பார். இதன் மூலம் டி.டி.வி.தினகரன், வைத்திலிங்கம் இருவருக்கும் ஒரே நேரத்தில் நெருக்கடி கொடுக்கலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி கணித்தார். அதனை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் ஆர்.காமராஜ். இதையடுத்து பேச்சு வார்த்தை முடிந்த பிறகு நேற்று எடப்பாடி பழனிசாமியை, சந்தித்த மா.சேகர் முறைப்படி தன்னை அ.தி.மு.கவில் இணைத்து கொண்டார்.

கேகரிடம், `கவலை படாதீங்க நீங்க கட்சி உண்மையாக உழைத்ததும் வைத்திலிங்கத்தால் ஓரம்கட்டப்பட்டதும் எனக்கு தெரியும். நான் இருக்கேன். இனி உங்களை பார்த்து கொள்கிறேன்’ என எடப்பாடி தட்டி கொடுக்க நெகிழ்ந்து விட்டாராம் சேகர். இதனை தொடர்ந்து தஞ்சாவூரிலோ அல்லது ஒரத்தநாட்டிலோ விரைவில் இணைப்பு விழா விமர்சையாக நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர். அப்போது டெல்டாவை சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகிகாள் பலர் அ.தி.முகவில் இணைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து அ.ம.மு.க தரப்பில் பேசினோம், கட்சி கட்டுப்பாட்டை மீறி மா.சேகர் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருந்தார். டி.டி.வி. தினகரனால் அவருக்கு கிடைத்த செல்வாக்கை தனக்காக கிடைத்தது என நினைத்து கொண்டார். கட்சியின் உத்தரவை மதிகாமல் செயல்பட்ட போக்கை மாற்றி கொள்ளாததால் கட்சியிலிருந்து நீக்கி விட்டோம் என்பதோடு முடித்துக்கொண்டனர்.



from India News https://ift.tt/9t6b752

Post a Comment

0 Comments