தமிழக அரசியலில் பல அதிர்வுகளைக் கிளப்பிய விவகாரம் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா. பலகட்ட அழுத்தங்களுக்குப் பிறகு ஒருவழியாக ஒப்புதல் வழங்கியிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி. அதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. தமிழக அரசு கொண்டுவந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் வலுவானதுதானா? சட்டத்திற்குப் பாதகங்கள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதெல்லாம் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும், அ.தி.மு.க அரசு சார்பாகக் கொண்டுவந்த தடை மசோதாவுக்கு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் நீதிமன்றம் மூலம் தடை பெற்றன. திமுக ஆட்சியில் அமைந்ததும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு. குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதலில் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் நிராகரிக்கவே, இரண்டாவது முறையும் ஒரு மனதாக மசோதா நிறைவேற்றியதும் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது கவனிக்கதக்கது. மேலும் இதனை நீதிமன்றம் சென்று தடை பெற ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் ஆயுத்தமாகலாம். தமிழ்நாடு இதனை மிக கவனமாக கையாள வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
``ரம்மி என்பது திறமையின் அடிப்படையிலான விளையாட்டு, அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டுதான் சூதாட்டம் என்பது உச்ச நீதிமன்றத்தின் கூற்று. ஆக ரம்மி விளையாடத் தடை கிடையாது. ஆனால் நேரடியாக விளையாடும் விளையாட்டுகளுக்கே நீதிமன்றத்தின் தீர்ப்பு பொருந்துமே தவிர எதிரில் மனிதர்கள் அல்லாது இயந்திரத்தோடு விளையாடுபவர்களுக்கு நீதிமன்றத்தின் கூற்று பொருந்தாது என்பது நீதியரசர் சந்துருவின் தலைமையிலான கமிட்டியின் கருத்து. இக்கருத்தை அடிப்படையாக வைத்துத் தான் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டமே இயற்றப்பட்டுள்ளது” என்கிறார் தராசு ஷ்யாம்.
தொடர்ந்து பேசிய அவர், ``பலவகையாக ஆன்லைன் சூதாட்டங்கள் இருக்கின்றன, எவையெல்லாம் தடை செய்யப்பட வேண்டியது என்ற வரையறைகளையும் தமிழக அரசு இயற்றிட வேண்டும். அதற்கென ஒரு கமிட்டியையும் தமிழக அரசு அமைத்துள்ளது. வரையறைகளை வெளியிடுவதற்கு சில வாரங்களோ, மாதங்களோ எடுத்துக் கொள்ளலாம். தடை செய்யப்படுகிற சூதாட்ட விளையாட்டுகளின் பட்டியலையோ வழிகாட்டு நெறிமுறைகளையோ தமிழக அரசு வெளியிடும்வரை ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் நீதிமன்றங்களுக்குச் சென்றாலும் பயனில்லை. கமிட்டியின் முடிவுகளைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை தெரியவரும்” என்கிறார் அவர்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலாகிவிட்டதாலயே இனி எவராலும் சூதாட்ட விளையாட்டுகளை விளையாட இயலாது எனச் சொல்லிவிட முடியாது. இதனை முழுமையாகத் தடை செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. தமிழக அரசு அமல்படுத்தும் சட்டங்கள் தமிழக எல்லை பரப்புகளிலேயே செல்லுபடி ஆகும். வெளிநாட்டு மற்றும் வெளிமாநில நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை. தமிழகத்தில் நிலப்பரப்புகளில் டவுன்லோடு மற்றும் பயன்படுத்த முடியாதபடி ஜியோ ஃபென்சிங் செய்யலாம். ஆனால், அதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பும் முன்னெடுப்பும் மிக அவசியம். நாம் இருக்குமிடத்தை மாற்றியமைக்கும் அம்சங்களும் வந்துவிட்டதால் பல சிரமங்கள் இருக்கின்றன. எப்படிக் கையாளப் போகிறது தமிழ்நாடு அரசு என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்கிறார்கள் சைபர் வல்லுநர்கள்.
அதிமுக தரப்பில் பேசியபோது, “ஆன்லைன் சூதாட்டங்கள் எந்த வகையிலும் தொடரக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துமில்லை. அதேசமயம் சட்டமாகியுள்ள ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எந்த வகையிலும் பாதிப்புகள் வராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசின் பொறுப்பு. நீதிமன்றத்தை ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் நாடினாலும் தேர்ந்த வழக்கறிஞர்களைக் கொண்டு நிதர்சனத்தை விளக்கி சட்டத்திற்குப் பாதகம் வந்திடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்” என்கிறார்கள்
“ஒருவேளை இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் ரம்மி சார்ந்த நிறுவனங்கள் நீதிமன்றத்துக்குப் போனாலும்கூட, எந்தவொரு சட்ட பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆலோசித்துத்தான் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது” என்கிறார்கள் திமுக பிரமுகர்கள். “இச்சட்டம் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொறுத்தே சொல்ல இயலும்” என்கிறார்கள் வழக்கறிஞர்கள்..
நம்முடன் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “தமிழ்நாடு அரசு நலன் சார்ந்த நோக்கில் இச்சட்டத்தை இயற்றியுள்ளது. சூதாட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லும்பட்சத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை. மேலும் அந்த ஆன்லைன் சூதாட்டங்களை ஆப் வாயிலாகவே விளையாடுகிறார்கள். டிக் டாக் உள்ளிட்ட ஆப்களை தடை செய்தது போல் மத்திய அரசு சூதாட்ட ஆப்களை தடை செய்யவும் முன்வர வேண்டும்.
இதில் நம்பிக்கையளிக்கக் கூடிய விவகாரம் என்னவெனில் இச்சட்டத்தை இயற்றிய போதே நீதியரசர் சந்துரு இதன்மீது எழுப்பப்படும் கேள்விகளை முன்பே ஆராய்ந்து சட்டத்தை செய்திருப்பார். மேலும் அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றி அதனை நீதிமன்றம் நிராகரித்தற்கான காரணிகளையும் அலசிய பின்னரே நீதியரசர் சந்துரு தலைமையிலான கமிட்டி தற்போதைய சட்டத்தையும் இயற்றியிருக்கும் என்பதால் சட்டம் வலுவானதாக இருக்கும் என்பது எனது கருத்து” என்கிறார் அவர்.
from India News https://ift.tt/oSz3cnm
0 Comments