Ambedkar : நாட்டின் உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு; அதன் அவசியமென்ன? - ஒரு விரிவான பார்வை!

இளஞ்சிவப்பு வானத்தில் இன்றைய விடியலின் ஒளி படர்ந்தபோது, ஹைதராபாத் உசைன் சாகர் ஏரியின் கரையில் வெண்கலச் சிலையொன்று மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

அது வேறொன்றுமல்ல, ஏற்றத்தாழ்வுகளால் இருள் படர்ந்த தேசத்தில் தன் அறிவொளியால் வெளிச்சத்தைத் தந்த சமத்துவ சூரியனாகும். பன்னெடுங்காலமாக எரிபடும் சேரிகளில் உடைபடும் சிலைகளாக இருந்த அந்த சூரியன், இன்று மாநகரத்தின் இதயத்தில் கம்பீரமாக உச்சத்தில் உதித்துக் கொண்டிருக்கிறது. ஆம், தெலங்கானா மாநிலத் தலைநகரம் ஹைதராபாத்தில் என்டிஆர் தோட்டம் அருகே 125 அடி உயரத்தில் பிரமாண்டமாகத் திறக்கப்படுகின்ற அம்பேத்கர் சிலையைப் பற்றித்தான் பேசுகிறேன்.

உலகம் முழுவதும் உள்ள சிலைகளெல்லாம் வெறும் சிலைகள் மட்டுமல்ல. அமெரிக்காவில் தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் சுதந்திர தேவி, ரியோவில் இரு கைகளை விரித்து கீழ் நோக்கி மக்களைப் பார்க்கும் இயேசு, குமரி முனையில் கடலின் நடுவே எழுதுகோலோடு நிற்கும் வள்ளுவன், சென்னை கடற்கரையில் கால் சிலம்பைக் கையில் ஏந்தி நிற்கும் கண்ணகி மற்றும் தனக்கே உரிய அடையாளத்தில் இருக்கும் பல அரசியல் தலைவர்கள் என ஒரு சிலை வெறும் கல்லாக மட்டும் இருப்பதில்லை.

அம்பேத்கர்

அந்த நிலத்தில் வாழும் மக்கள் அடைந்த எழுச்சியின் குறியீடாக, பெற்ற சமத்துவத்தின் அடையாளமாக, பெருமித வரலாற்றின் வெளிப்பாடாக, மொழியின் பெருமிதமாக, மதத்தின் வெளிப்பாடாக என்று ஏதோ ஒரு சித்தாந்தத்தின் கொள்கையை நிறுவுகிறது.

ஆறடி நிலத்தில் முடியும் மனித வாழ்வில், ஒரு கல்லறை மட்டுமே பலர் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியமாகும். அதே ஆறடி மனிதனின் வாழ்வை நூறடி தாண்டி நிமிரவைத்து, அரசியலுக்கும் கொள்கைக்கும் சொந்தமாக்குவது சிலைகளாக இருக்கிறது. தற்போது திறக்கப்படுகின்ற சிலையைக் குறித்து தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதோடு இதனை ஒப்பிடலாம்.

அம்பேத்கர்

“அம்பேத்கரால் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 3வது பிரிவின் மூலம் தெலங்கானா மாநிலம் உருவாகியுள்ளது. அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக நகரத்தின் நடுவே இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது” என்கிறார் அவர். ஆக, இந்த சிலை 60 ஆண்டு கால தனிமாநிலப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்த ஜனநாயகத்தின் அடையாளம் எனலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை அதிக சிலைகள் உள்ள தலைவர் என்ற பெருமை அம்பேத்கருக்கு உரியது என்றால், அதிகம் உடைபடும் சிலை எனும் வேதனைக்குரிய புள்ளிவிவரமும் அந்த சிலைகளுக்குச் சொந்தமாக இருக்கிறது. ஆனால் யார் தனது சிலைகளை உடைக்கிறார்களோ அவர்களுக்காகவே வாழ்வின் இறுதிவரை போராடினார் அந்த மகத்தான போராளி.

அம்பேத்கர்

பிற்படுத்தப்பட்ட OBC மக்களின் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டபோது தனது அமைச்சர் பதவியைத் துச்சமெனத் தூக்கி எறிந்தார். 14 மணி நேரம் மாடாக உழைத்துக் கொண்டிருந்த இந்தியக் குடிமகன்கள் அனைவருக்கும் 8 மணிநேர வேலை என்ற சட்டத்தை இயற்றினார். பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை மற்றும் சம ஊதியம் என்ற பாலின சமத்துவத்தை நிலை நாட்டினார். இன்று மருத்துவர், பொறியாளர் எனப் பட்டதாரிகள் பலர் போடும் கையெழுத்து அவரின் ஒற்றைக் கையெழுத்தால் உருவானவை.

‘காட்டாற்றில் அடித்துச் செல்லும் களிமண் அல்ல நான், அந்த ஆற்றையே திசை திருப்பும் கரும் பாறையாக இருப்பேன்’ என்றவர். எப்போதும் தன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்குத் துவண்டு போனவர் அல்ல, அதனை வென்று காட்டியவர். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர். முதல் சட்ட அமைச்சர் என்பதைத் தாண்டி, வெளிநாடு சென்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பட்டதாரி அவர்.

அம்பேத்கர்

அம்பேத்கர் பெற்ற முதுகலைப் பட்டங்கள் மட்டும் 64. பிறர் 8 ஆண்டுகள் படித்து வாங்கிய பட்டங்களை இரண்டரை ஆண்டுகளில் பெற்றவர். 50,000 நூல்களை உள்ளடக்கிய அவரது ராஜ்யகிரி நூலகமே, அந்தக் காலத்தில் தெற்காசியாவில் இருந்த மிகப்பெரிய தனியார் நூலகமாகும். லண்டன் அருங்காட்சியகத்தில் கார்ல் மார்க்ஸ் அருகே சிலை வைக்கப்பட்டுள்ள ஒரே தலைவர் அம்பேத்கர். அவரது ‘விசாவுக்காக காத்திருக்கிறேன்’ எனும் புத்தகம், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் உள்ளது. அதே பல்கலைக்கழகம் வெளியிட்ட உலகின் 100 அறிவாளிகளின் பட்டியலில் அம்பேத்கருக்கு முதலிடம்.

மேலும் ஒன்பது மொழிகளைப் பேசவும் எழுதவும் தெரிந்தவர். ஒரு மனிதரின் பெயரை வைத்து எழுதப்பட்ட பாடல்களிலும், பாடப்பட்ட பாடல்களிலும் இவரது பெயர் முதலிடத்தில் உள்ளது. குடிக்கின்ற தண்ணீருக்காகச் சத்தியாகிரக போராட்டத்தைத் துவங்கிய முதல் தலைவர், 10 வருடச் சட்ட போராட்டத்தில் அதை வென்றும் காட்டியவர்.

அம்பேத்கர்

உலகத்தை மாற்றிய மனிதர்கள் என்று ஆக்ஸ்போர்ட்  பல்கலைக்கழகம் வெளியிட்ட 100 ஆளுமைகள் பட்டியலில் நான்காம்  இடம் பிடித்தவர். தான் வாழும் காலத்திலே தனக்காகச் சிலை வைக்கப்பட்டத்தை நேரில் பார்த்தவர். இன்று இந்தியப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய ரிசர்வ் வங்கியைத் தொடங்கக் காரணமாக இருந்தவர். இப்படி அனைவருக்குமாக போராடிய தலைவரை, ஒப்பற்ற அறிவாளியை, இந்த சமூகம் குறிப்பிட்ட சாதியின் தலைவராகச் சுருக்கி வைத்திருக்கிறது.

அம்பேத்கர், ‘ஒவ்வொரு சாதியத் தாக்குதலும் என்னைக் கலங்கடிக்கும், அரசியல்படுத்தும். ஆனால் ஒருபோதும் அச்சப்படுத்தாது’ என்றார். அவ்வாறு அச்சப்படாது வாழ்ந்த வரலாற்றின் சாட்சியங்களே மேல் கூறிய சாதனைகள். இவ்வளவு உயரங்களை அடைந்த மனிதர் மீது சாயம் பூசுவது, அவர் சிலைகளை கூண்டுக்குள் அடைப்பது, சிலைகளை உடைப்பது என மற்றொரு வரலாறும் வார்த்திருக்கிறது இந்த சமூகம். ஆனால் வரலாறு எப்போதும் விடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும். அவ்வாறு கூண்டுக்குள் அடைபட்டிருந்த அந்த சிலையின் வரலாறு இன்று விடுதலை உணர்வாக 125 அடி வானுயர்ந்து நிற்கிறது, நாட்டிலேயே மிக உயரமான அம்பேத்கரின் சிலை என்ற பெருமையைக் கொண்டு!

அம்பேத்கர்

சுமார் 11 ஏக்கர் நிலப்பரப்பில் 125 அடியில் உருவாகியுள்ள இந்த சிலையினை நாட்டின் மிக உயரமான சிலையான படேல் சிலையை வடிவமைத்த 98 வயதான ராம் வி.சுதர் தனது மகனின் உதவியோடு வடிவமைத்துள்ளார். 125 அடி உயரம், 45.5 அடி அகலம் என 474 டன் எடையோடு உருவாக்கி இருக்கும் இந்த சிலைக்கு 114 டன் வெண்கலமும், 360 டன் எஃகும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட சிலையில் இருக்கும் பீடம் 50 அடி உயரமும் 172 அடி அகலமும் கொண்டது. இந்த பீடம் இந்திய நாடாளுமன்ற வடிவில் கட்டப்பட்டுள்ளது. அதனைச் சுற்றி தீம் பூங்கா, நூலகம், அருங்காட்சியகம், அறிவு மண்டபம், புகைப்படக் கண்காட்சியகம் என அறிவாயுத பூங்காவை உருவாக்கியுள்ளது தெலங்கானா அரசாங்கம்.

ஒரு சிலை என்ன செய்து விட முடியும் என்று கேட்டால், அடுத்த தலைமுறைக்கு சித்தாந்தத்தின் விதையினை விதைத்திட முடியும். வரலாற்றினை கூர்ந்து கவனித்தால் சிலைகளை நிறுவுதல், அகற்றுதல் தான் அரசியல் மொழியாக இருந்துள்ளது. அவ்வாறு இப்போது நிறுவப்பட்ட சிலைதனில் அம்பேத்கர், மாற்றத்தின் நவீன முகமாக கோட் சூட் போட்டுக் கொண்டு, கையில் அரசியல் சாசன புத்தகத்தை வைத்துக் கொண்டு, முன்னோக்கி கையை நீட்டி சமத்துவ அரசியல்  மொழியைப் பேசிக்கொண்டிருக்கிறார்.

அம்பேத்கர்

அதனை இருவிதமாகப் பார்க்கலாம். ஒன்று, ‘ஆதிக்கவாதிகளே, இனி வரும் காலங்களில் எவ்வகையிலும் என் மக்களைக் கொடுமைகளுக்கு உட்படுத்தினால் நான் உருவாக்கிய சட்டங்கள் உங்கள்மீது பாயும்’ எனும் எச்சரிக்கை. மற்றொன்று, ‘நான் உருவாக்கிய அரசியல் சாசனத்தைப் பிடித்துக் கொண்டு எப்படியாவது முன்னேறி விடு. கற்பி, ஒன்று சேர், புரட்சி செய். அதுவே நான் உனக்கு அமைத்திருக்கும் வழித்தடம். அதனைப் பின்தொடர்ந்திரு’ எனும் நம்பிக்கையின் வழிகாட்டியாகவும் பார்க்கலாம்.  

இது சிலையல்ல, சித்தாந்தம்; குரலற்ற மக்களின் அறிவாயுதம்!



from India News https://ift.tt/SqJYVhW

Post a Comment

0 Comments