கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் மது, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஒரு கும்பல் தாக்கியதில் மரணமடைந்தார். பசிக்கு கடைகளில் இருந்து உணவுபொருள்கள் திருடியதாக குற்றம் சுமத்தி மதுவை அஜமுடி காட்டில் இருந்து பிடித்து கொண்டுவந்த அந்த கும்பல், முக்காலி பகுதியில் கட்டி வைத்து தாக்கியது. அந்த கும்பல் தாக்கும் வீடியோக்கள் அந்த சமயத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மது கொலை வழக்கு மண்ணார்க்காடு பட்டியலினத்தவருக்கான தனி கோர்டில் நடைபெற்றது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். மது கொலை வழக்கில் நேற்று முன் தினம்( ஏப்ரல் 4) தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், நான்காம் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அனீஷ், 11-ம் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அப்துல் கரீம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர். முதல் குற்றவாளியான ஹுசைன் உள்ளிட்ட 14 பேரும் குற்றவாளிகள் என கோர்ட் அறிவித்தது. அவர்களுக்கான தண்டனையை நீதிபதி ரதீஷ்குமார் நேற்று அறிவித்தார்.
அந்த தீர்ப்பில் 13 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. 16-ம் குற்றவாளியான முனீருக்கு 3 மாதம் சிறைத்தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே விசாரணை சமயத்தில் சிறையில் இருந்ததால் 500 ரூபாய் அபராத தொகை மட்டும் செலுத்தியதை அடுத்து விடுவிக்கப்பட்டார். முதல் குற்றவாளியான ஹுசைனுக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற 12 குற்றவாகிகளுக்கும் தலா ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மொத்தமுள்ள அபராத தொகையான 15 லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாயில் 75 சதவீதம் தொகை மதுவின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும், அதில் 50 சதவீதம் தொகை மதுவின் தாய்க்கு வழங்க வேண்டும் எனவும் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆதாரங்கள் இல்லாமலும், கோர்ட் குற்றவாளி என கூறாத நிலையில் மதுவை திருடன் என்று முத்திரைகுத்த முடியாது என கோர்ட் கருத்து தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மது கொலை வழக்கில் நீதி கிடைக்கவில்லை என மதுவின் தாய் மல்லி தெரிவித்துள்ளார். `குற்றம் செய்த அனைவரும் தண்டிக்கப்படவேண்டும், அவர்களுக்கு அளித்த தண்டனை போதாது. எனவே ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்’ என மல்லி தெரிவித்துள்ளார். `மதுவின் குடும்பத்தினர் மேல் முறையீடு செல்ல விரும்பினால் அரசு அவர்களுக்கு உதவி செய்யும்’ என அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
from India News https://ift.tt/bC7QnZs
0 Comments