`எங்க பிள்ளைகளை ஆபாசமாக பார்க்கும் நிலை மாறும்’ - குறவன், குறத்தி ஆட்டம்... வழக்கும் விவரமும்!

தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் கோயில் திருவிழாக்களின் போது, `குறவன் குறத்தி ஆட்டம்’ என்கிற நடன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குறவன் குறத்தியாக வேடமிட்டு ஆடும் கலைஞர்கள் ஆபாசமாக நடந்து கொள்வதாகவும், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும், இதனால் குறவர் இன சமூகத்திற்கு இழிவு ஏற்படுவதாகவும், தமிழக குறவர், மலைக் குறவர் இன மக்கள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் குறவன் குறத்தி ஆட்டத்தை தடை செய்ய வேண்டுமென இந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் சார்பில் வனவேங்கைகள் கட்சியினர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

இது தொடா்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜன.11-ம் தேதி  பிறப்பித்த உத்தரவில், `சாதியம் சார்ந்த மற்றும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயரில் எந்தவித நடன நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது. மேலும்,  தமிழ்நாடு முழுவதும் திருவிழாக் காலங்களில் ஆடல் - பாடல் நிகழ்ச்சிகளில், குறவன் - குறத்தி எனப் பெயரிட்டு ஆபாச நடனம் ஆடப்படுகிறது. இதற்கு எந்தவித அனுமதியும் தரக்கூடாது எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

நீதிமன்றத்தின்  இந்த உத்தரவைத் தொடர்ந்து, கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சாா்பில் அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில், 'கரகாட்டம் உட்பட ஆடல் - பாடல் நிகழ்ச்சிகள், எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன் குறத்தி ஆட்டம் என்ற கலைநிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து சுற்றுலா, பண்பாடு, அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து உத்தரவு  வெளியிட்டுள்ளார்

இரணியன்

இதுகுறித்து, வனவேங்கைகள் கட்சியின் மாநில தலைவர் இரணியனிடம் பேசினோம்.  ``குறவன் குறத்தி ஆட்டம் கடந்த 40 ஆண்டுகளில்தான் ஆபாச நடனமாக மாறியது.  உண்மையில் இந்த ஆட்டம் ஊசி மணி விற்கும் நரிக்காரர், குருவிக்காரர் சமூகத்தினரையும் மனதில் வைத்து ஆடப்படுகிற  ஆட்டம். இன்றைக்கும் எங்கள் குழந்தைகளையும், எங்கள் வீட்டுப் பெண்களையும் பாலியல் இச்சைகளுக்கு தயாராக இருப்பவர்கள் என்ற பிம்பம் சமூகத்தில் உள்ளது. தேனி அருகே உள்ள கிராமத்தில் திருவிழாவில் குறவன் குறத்தி ஆட்டத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்து, குடி போதையில் ஆடச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள். இதனால் பல பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது. எங்கள் சமூகம் மட்டுமல்ல, மாற்று சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் என எல்லா சமூகத்தினரும் வறுமையின்காரணமாக இந்த ஆட்டத்தை ஆடுகிறார்கள்.  இது நாங்கள் கள ஆய்வில் கண்டறிந்த விஷயம். ஆனால் ஒரு சமூகத்தின் பெயரைச் சொல்லி ஆபாசமாக ஆடும் போது ஒரு சமூகத்தையே அது தாக்குகிறது.

எங்கள் பிள்ளைகள் கல்வி வேலை வாய்ப்பு என எழுந்து நடக்கும் சூழலில், இந்த ஆட்டம் எங்களை பின்னோக்கி இழுக்கிறது. இந்த நிலையில், பத்தாண்டுகளுக்கும் மேலான களப் போராட்டத்திற்கும், 5 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி இது. இந்த தீர்ப்பும் அரசாணையும்  ஒரு குறிப்பிட்ட மக்களுக்கானது அல்ல, அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கானது. பட்டியலினமோ, பழங்குடியினமோ, பிற்படுத்தப்பட்ட இனமோ  எந்த ஒரு சமூகத்தையும் இழிவுபடுத்தி, ஆபாசமாக சித்தரிக்கக் கூடாது. அந்த வகையில் இந்த தீர்ப்பையும் அரசாணையையும் நாங்கள் முழுமனதாக வரவேற்கிறோம். இதற்குக் காரணமான முதலமைச்சருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்" என்றார். 

ரமேஷ்

இதுகுறித்து தமிழ் பழங்குடி குறவர் சங்க மாநில தலைவர் ரமேஷ், "இந்த அரசாணை எங்கள் மீதான இழிவான பார்வையை மாற்றி உள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளையின் தீர்ப்பு ஆறுதல் அளித்த நிலையில், அரசாணை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் மீதான தவறான பார்வை இந்த அரசாணையால் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்த ஆட்டத்தை மட்டும் ஆடுவதில்லை. வேறு பல ஆட்டங்களையும் ஆடுபவர்களாக இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.



from India News https://ift.tt/p8YeNXG

Post a Comment

0 Comments