ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததில் இருந்தே எடப்பாடி பழனிசாமி குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ``மேற்கு மண்டலம் தன்னுடைய கோட்டை என மார்தட்டிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், ஈரோடு கிழக்கில் ஏன் வெற்றி பெற முடியவில்லை. ஆளுங்கட்சி மீதான அதிருப்தி இருந்தும் கூட காங்கிரஸ் கட்சியால் எப்படி 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல முடிந்தது? எடப்பாடியிடம் பணபலம் இருக்கிறது, இரட்டை இலைச் சின்னம் இருக்கிறது. இரட்டை இலைச் சின்னம் இல்லாதிருந்தால் நிலைமை இன்னும் எவ்வளவு மோசமாகியிருக்கும் என யோசித்துப் பாருங்கள், இரட்டை இலையை பழனிசாமியிடம் விட்டுவைத்தால், மேலும் பலவீனமாகிவிடும்” என்றெல்லாம் கடந்த வாரத்தில் டிடிவி தினகரன் கடுமையாகப் பேசியிருந்தார்.
ஜெயலலிதாவுடன் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டுப் பேசுவது சிரிப்பைத்தான் வரவைக்கிறது என்றும் டிடிவி விமர்சித்திருந்தார். இந்த சூழலில், கடந்த 11-ம் தேதி மதுரை விமான நிலைய பேருந்தில் எடப்பாடி பழனிசாமியுடன் பயணம் செய்த, அமமுக-வை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர், ``துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்கிறேன்” என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டு, அதை ஃபேஸ்புக்கில் நேரலையாக பதிவிட்டார்.
அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், ஊடகங்களிலும் விவாதப் பொருளானது. எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன், ராஜேஸ்வரனிடம் செல்போனை பறித்துக்கொண்டு, அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார். இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பு மீதும் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.
திடீரென எடப்பாடி பழனிசாமி மீது அட்டாக் மோடில் இறங்கக் காரணம் என்ன என்பது அமமுக வட்டாரத்தில் விசாரித்தோம். “இடைத்தேர்தலில் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, எப்படியோ கட்சியை முழுமையாகக் கைப்பற்றி விட்டோம் என்ற மிதப்பில் எடப்பாடி இருக்கிறார். முன்னாள் அமைச்சர்களும் அவரிடம் பெற வேண்டியதைப் பெற்றுக்கொண்டு, தனிப்பெரும் தலைவர் போல எடப்பாடியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்களிடத்தில் எடப்பாடிக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பதை ஈரோடு இடைத்தேர்தல் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. இதே நிலை நீடித்தால் 2024, 2026 தேர்தல்களிலும் இரட்டை இலை மலர வாய்ப்பே இல்லாமல் போய்விடும். முதலில் எங்களை எதிர்த்த ஓ.பி.எஸ். அண்ணனுக்கே, ஒற்றுமையாக இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பது இப்போது புரிந்துவிட்டது.
ஆனால் அந்த புரிதல் எடப்பாடிக்கு வருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பொள்ளாச்சி வழக்கு, கோடநாடு வழக்குகளில் தனக்கும், தன்னுடன் நெருங்கியவர்களுக்கும் இருக்கும் நெருக்கடியை எதிர்கொள்ளவும், சொத்துக்களை பாதுகாத்து வைக்கவும் மட்டும்தான் எடப்பாடி தலைமை பீடத்தை தக்கவைத்துக் கொள்ள முயல்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா போல இந்த இயக்கத்தை அவரால் வெற்றிகரமாக நடத்த முடியாது என்பதை 8 தேர்தல்களில் அடைந்த தோல்வி உணர்த்துகிறது. அவரைத் தொண்டர்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, மீண்டும் அதிமுக-வை ஒன்றிணைக்க வேண்டும். அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் இப்போதிருந்தே அப்பணியைச் செய்வது என்று முடிவெடுத்திருக்கிறோம். அதற்காகத்தான் இந்த அட்டாக்” என்கிறார்கள்.
அதேசமயம், எடப்பாடியை நாங்கள் விமர்சித்துப் பேசுவது இப்போது புதிதாக செய்வது அல்ல, அது கூவத்தூர் துரோகத்திலேயே தொடங்கிவிட்டது என்கிறார் அமமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “சிவாஜி கணேசனை விட அதிகமாக நடித்து பெர்ஃபார்மன்ஸ் செய்து, சசிகலா காலில் விழுந்து, முட்டிப் போட்டு முதல்வர் பதவியைப் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு துரோகம் செய்தார். பின்னர் பா.ஜ.க.-வை வைத்து நான்கரை ஆண்டுகள் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டார். இப்போது பாஜக தேவையில்லை என்பதால், மற்றவர்களை வைத்து விமர்சிக்க வைக்கிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமலா அவர்கள் பாஜகவை விமர்சிக்கிறார்கள்? ஆக, பழனிசாமிக்கு எப்போதும் நன்றியுணர்வே இருப்பதில்லை. ஜெயலலிதா-வை விட சிறப்பான ஆட்சியைக் கொடுத்தவர் எடப்பாடி என்கிறார் ஆர்.பி.உதயகுமார். சசிகலா முதல்வராக வேண்டுமென அம்மா சமாதியில் மொட்டை அடித்தவரும் இவர்தான். இப்படி நாளுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுப்பவர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு அதிமுக-வை அழித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்றார் காட்டமாக.
இதனிடையே அமமுக-வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அமமுகவில் மாவட்டச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர், மதுரை மண்டல பொறுப்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவன், சில மாதங்களுக்கு முன்பே அமமுகவில் இருந்து விலகிவிட்டார். சசிகலா ஆதரவாளராக செயல்பட்டு வந்த அவர், தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளருமான கோமல் ஆர்.கே.அன்பரசனும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். இது டிடிவி தினகரனை மேலும் கடுப்பாக்கியுள்ளது. அங்கிருந்து சிலரை இழுக்க இவர்களும் முயற்சித்து வருகிறார்களாம்.
from India News https://ift.tt/39fd6Qn
0 Comments