சிறையில் அமைச்சர்கள்... அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த மூவ் என்ன?!

பா.ஜ.க எதிர்ப்பு நிலையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு, பா.ஜ.க தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரிய தளபதிகளான டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள். ஆம் ஆத்மி அமைச்சரவையில் நிதி, கல்வி, தொழிற்கல்வி, பொதுப்பணித்துறை, தொழிலாளர் துறை, கலால் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தார் மணீஷ் சிசோடியா. சுகாதாரம், சிறைத்துறை அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் இருந்தார்.

சிசோடியா

டெல்லி மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாகவும், அதில் மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வழக்கில், சி.பி.ஐ-யால் அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு முன்பாக, பணப்பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார் சத்யேந்தர் ஜெயின்.

ஆட்சிக்கு பக்கபலமாக இருந்த இருவர் திடீரென கைது செய்யப்பட்டது கெஜ்ரிவாலுக்கு பெரிய பாதிப்புதான். ஆனாலும், அவர்கள் இல்லாத சூழலிலும் ஆட்சியை சுமூகமாக நடத்த வேண்டும் என்பதற்கான முயற்சியில் கெஜ்ரிவால் ஈடுபட்டிருக்கிறார். அடுத்த வாரம் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கிறது. எந்தவித பிரச்னையும் இல்லாமல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவரும் முதல்வர் கெஜ்ரிவால், இரண்டு புதிய அமைச்சர்களை நியமிக்கவிருக்கிறார். மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் இடங்களில் சுராப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை அமர்த்தப்படுகிறார்கள்.

அதிஷி, சுராப் பரத்வாஜ்

அடுத்ததாக, ‘ஆம் ஆத்மிக்கு இழைக்கப்பட்ட அநீதி’யை மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில், வீடு வீடாகச் சென்று மக்ளைச் சந்திக்க கெஜ்ரிவால் முடிவெடுத்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இந்திரா காந்தி அதீதமாக நடந்துகொண்டார். இப்போது, இவர்களும் (பெயர் குறிப்பிடவில்லை) அப்படி நடந்துகொள்கிறார்கள். எனவே, மக்களிடம் செல்லப்போகிறோம். ஆம் ஆத்மியின் அனைத்து தலைவர்களும் எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திப்பார்கள்” என்றார்.

மேலும், “மதுபான நிறுவனத்திடமிருந்து மணீஷ் சிசோடியா பணம் வாங்கியதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். சிசோடியா வீட்டை சோதனையிட்டார்கள். மெத்தைகளைக் கிழித்தார்கள். சுவர்களை இடித்தார்கள். சிசோடியாவின் பெற்றோர் வீட்டையும் சோதனையிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு புகழை கொண்டுவந்த சேர்த்த இருவரை, பிரதமர் சிறையில் அடைத்துவிட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருந்தால், சில லட்சம் ரூபாயாவது அவரின் வீட்டில் இருந்திருக்கும். சிசோடியாவின் வங்கிக் கணக்கையும் லாக்கரையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அதிலும் எதுவும் கிடைக்கவில்லை. சிசோடியா கோடிக்கணக்கான ரூபாய் வாங்கியிருந்தால், அந்தப் பணம் எங்கே?” என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றதாகக் கூறித்தான், அந்த ஆட்சியை அகற்றுவதற்கு அன்னா ஹசாரேவுடன் இணைந்து வீதியில் போராடியவர் கெஜ்ரிவால். அதன் மூலம் கிடைத்த அறிமுகத்தால் அரசியல் கட்சியை ஆரம்பித்து இரண்டு மாநிலங்களில் ஆட்சி நடத்துகிறார். இப்போது, இவரின் அமைச்சரவையில் இருந்தவர்களே ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றிருக்கும் நிலையில், மீண்டும் மக்களிடம் செல்ல கெஜ்ரிவால் முடிவெடுத்திருக்கிறார். மக்கள் சந்திப்பின் மூலம் பா.ஜ.க-வின் சவால்களை முறியடிப்பாரா கெஜ்ரிவால்? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!



from India News https://ift.tt/LuwG5Kz

Post a Comment

0 Comments