மார்ச் 1-ம் தேதி நந்தனம், ஒய்.எம்.சி.ஏ திடலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதன் முறையாக தமிழகத்திற்கு வந்தார். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தவருக்கு, காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கும் காமராஜர் இல்லத்திற்குச் சென்று, அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இரண்டாவது நாள் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பேசிய கார்கே, ``ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்கு முன்பு 1991-ல் மே.21-ம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் நமது நாடு அதன் தலைசிறந்த பிரதமர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியை இழந்தது. முன்னாள் பிரதமர் மற்றும் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் மரபு, நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்தியாவை உருவாக்குவது, நமது பாதுகாப்பிற்கான அவரின் முயற்சிகள், தேசிய ஒற்றுமைக்கான பணிகளை ஒருபோதும் மறக்க முடியாது.
40 வயதில், ராஜீவ் காந்தி இந்தியாவின் இளைய பிரதமராக இருந்தார். உலகின் மிக இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலைவர்களில் ஒருவர். அப்போது பிரதமராக இருந்த அவரின் குறுகிய காலமும் தாக்கம் நிறைந்த பதவிக் காலம். இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கும், ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதற்கும் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த காலகட்டம் நவீன 21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் அடித்தளம். மிசோரம், அஸ்ஸாம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கிளர்ச்சி மற்றும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கிளர்ச்சிக் குழுக்களுடன் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். 1985-ம் ஆண்டில், அகாலிதளத்தின் தலைவரான ஹர்சந்த் சிங் லோங்கோவாலுடன் ராஜீவ்-லோங்கோவால் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே ஆண்டு, அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒரு வருடம் கழித்து, மிசோ தேசிய முன்னணியின் நிறுவனர் லால்டெங்காவுடன் மிசோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ராஜீவ் காந்தியும் நாட்டில் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்த சில முக்கிய முடிவுகளை எடுத்தார். இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்க, அவரின் தலைமையில், வாக்களிக்கும் வயது 21 வயதிலிருந்து 18ஆக குறைக்கப்பட்டது. ஜனநாயகத்தை அடிமட்டத்திற்கு எடுத்துச் செல்ல நாட்டில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு அடித்தளமிட்டார்.
1986-ல், சீன எதிர்ப்பையும் மீறி, அருணாச்சல பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்தை வழங்கினார். பின்னர், 1987-ல் தவாங்கில் ராணுவ நிலைப்பாட்டின் போதும் எல்லையில் எங்கள் கோரிக்கைகளை நாங்கள் கைவிட மாட்டோம் என்பதை இந்திய அரசு உறுதி செய்தது. எனவே, ராஜீவ் காந்தியின் தலைமையில் இந்திய ராணுவம் வீரத்துடன் போராடி சீனர்களை பின்னுக்குத் தள்ளியது. நம் நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு வித்திட்ட தலைவர் ராஜீவ் காந்தி என்று எப்போதும் நினைவு கூரப்படுவார்.
அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த பெருமைக்குரியவர். கணினிகளை கொண்டு வந்து தாராளமயமாக்கல் பற்றி பேசினார். 1986-ம் ஆண்டு மஹாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் தொடங்கப்பட்டதன் மூலம் அவரின் அரசாங்கத்தின் கீழ் தொலைத்தொடர்பு துறை ஒரு திருப்புமுனையை கண்டது. அவர் தகவல் தொழில்நுட்பத்தின் தந்தை என்று போற்றப்பட்டார். மேலு அதுவே இந்தியாவின் தொலைத்தொடர்பு புரட்சியாக பார்க்கப்பட்டது.
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் மீண்டும் வலுப்பெற வேண்டியது அவசியம். நவீன மற்றும் முற்போக்கான இந்தியாவை உருவாக்க காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். நவீன மற்றும் முற்போக்கான இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான இந்தப் போராட்டத்தில், ராஜீவ் காந்தி காங்கிரஸ் கட்சிக்கும், நமது நாட்டின் இளைஞர்களுக்கும் எப்போதும் உத்வேகமாக இருப்பார்.
இவ்வளவு குறுகிய காலத்தில், ராஜீவ் காந்தி இந்திய அரசியலில் அழியாத முத்திரையைப் பதித்தார். இந்தியாவுக்காகவும் அதன் ஒற்றுமைக்காகவும் அவர் செய்த உன்னத தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்க முடியாது. இன்று, அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய அஞ்சலி, ஒன்றுபட்ட இந்தியாவுக்காக பாடுபடுவதாகும். அங்கு ஜனநாயகம் இன்னும் காகிதத்தில் மட்டுமல்ல, தரையிலும் உயிருடன் இருக்கும். மேலும் இந்தியா 21-ம் நூற்றாண்டின் முன்னணி வல்லரசாகும்" என தெரிவித்தார்.
பின்னர் சென்னையில் இருக்கும் தனியார் ஓட்டலில் பட்டியலின பிரிவினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் உரையாற்றினார். அப்போது அவர்கள், "திமுக, அதிமுக-வில் பட்டியலினத்தவர்களுக்கு முக்கியமான பதவிகள் வழங்கப்படுவதில்லை. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பொறுப்புகள் அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது. அதை மேலும் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக முக்கிய துறைகளில் வாய்ப்பு வழங்க வேண்டும். அப்போது தான் அந்த சமுதாயத்துக்கு அதிகமாக செய்ய முடியும்" என்பது உள்ளட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதை கவனமாக கேட்ட கார்கே, "நான் 51 ஆண்டுகளாக சட்டமன்ற, மக்களவை உறுப்பினராக தொடர்ந்து இருக்கிறேன். 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியடைந்த போதும், சோனியா காந்தி மாநிலங்களவைக்கு தேர்வு செய்தார். சாதாரண பொறுப்பில் இருந்த நான் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கிறேன். இதை வைத்தே பட்டியலினத்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் என்ன முக்கியத்துவம் கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்" என்றார். நிக்ழ்ச்சி முடிந்த பின்னர் விமானத்தில் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார்.
from India News https://ift.tt/LPaRmIl
0 Comments