``தி.மு.கவுடன் கைகோத்து அ.தி.மு.கவை அழிக்க நினைக்கும் ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் இருவரையும் கண்டிக்கிறோம்" என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தஞ்சாவூரில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரம் தொடங்கிய பின்னர் நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பி.எஸ் தரப்பினர் இதனை எதிர்த்து தனித்து செயல்பட்டு வருகின்றனர். ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படுவதை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில் வைத்திலிங்கத்தின் சொந்தமாவட்டத்திலேயே அவருக்கு நெருக்கமாக இருந்த பல நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்றனர். அத்துடன் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களில் வைத்திலிங்கத்தை விமர்சனம் செய்தனர். சோழமண்டல தளபதி என வைத்திலிங்கத்தை அழைத்தவர்கள் ஆர்.காமராஜை சோழமண்டல தளபதி என தற்போது சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
`வைத்திலிங்கம் கோட்டை காலியாகிவிட்டது’ என்ற விமர்சனத்தை காதில் வாங்கி கொள்ளாமல் புதிய நிர்வாகிகள் நியமனம், ஓ.பி.எஸ் தரப்பை வலுப்படுத்தும் முன்னெடுப்புகளை செய்தார். தனக்காக செல்வாக்கு குறையவில்லை என்பதை காட்டுவதற்காக வைத்திலிங்கம் கடந்த சனிக்கிழமை தஞ்சாவூரில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை விமர்சையாக நடத்தினார். அதில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து பேசினார். இதனை தொடர்ந்தே வைத்திலிங்கத்திற்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம், ``வைத்திலிங்கம் அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றதால் தன்னை வலுப்படுத்தி கொள்ளவும், தனக்கான பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளானார் வைத்திலிங்கம். இந்நிலையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வைத்திலிங்கத்திற்கு `திரும்பி வந்துட்டேனு சொல்லு’ என நிர்வாகிகள் சொல்ல வேண்டும் என்ற ஆளவுக்கு இருக்க வேண்டும் என திட்டமிட்டார்
``கூட்டம் நடக்கும் சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.கவை எட்டு முறை தோல்வி பெற செய்த எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம். கட்சியை விட்டு வெளியேற வேண்டும்” என வைத்திலிங்கம் தரப்பு போஸ்டர் ஒட்டியது. இதனால் தஞ்சாவூரில் உள்ள எடப்பாடி பழனிசாமி அணியினர் கொதிப்படைந்து போஸ்டரை கிழிக்கவும் செய்தனர்.
இந்நிலையில் தான் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், வைத்திலிங்கம் சமாதானப்புறாவை பறக்க விட்டார். இந்த சமாதானப்புறா சசிகலா, டி.டி.வி. தினகரன் தரப்புக்கா அல்லது தன்னிடம் இருந்து சென்றவர்களுக்கா... யாரை சமாதானம் செய்கிறார் என அவரது ஆதரவாளர்ககுள்ளேயே விவாதம் கிளம்பியது. ``சசிகலா காலில் விழுந்து, தவழ்ந்து பதவி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி.
அந்த வீடியோவை எல்லோருமே பார்த்தீர்கள் அ.தி.மு.க பொதுச்செயலாளராக அவர் வரவே முடியாது, சுயநலக்காரரான அவர் கைக்கு கட்சியை செல்ல விடமாட்டோம்” என வைத்திலிங்கம் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இதையடுத்து தி.மு.கவுடன் கைகோத்து அ.தி.மு.கவை அழிக்க நினைக்கும் ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் இருவரையும் கண்டிக்கிறோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உடனடியாக போஸ்டர் ஒட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அந்த போஸ்டரை வைத்திலிங்கம் தரப்பு கிழித்ததாகவும் சொல்லப்படுகிறது. பல மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டாலும் அதனை எதிர்த்து எந்த ஊரிலும் போஸ்டர் ஒட்டப்படவில்லை. இந்நிலையில் வைத்திலிங்கத்துக்கு எதிராக அவரது சொந்த ஊரான தஞ்சாவூரிலேயே போஸ்டர் ஒட்டப்பட்டது அவரது தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக தெரிகிறது என்றனர்.
மேலும் சிலரரோ, தொண்டர்களால் இயங்குகின்ற கட்சி அ.தி.மு.க என இருதரப்பும் தொடர்ந்து வலியுறுத்தி பேசுகின்றனர். எடப்பாடி பழனிசாமி கூறும் போது, `ஒரு சிலரை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானலும் எங்களிடம் வரலாம்’ என்கிறார். `பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனித்து விடப்படுவார்’ என வைத்திலிங்கம் கூறுகிறார். இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தர முடிவு ஏற்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது” என தெரிவித்தனர்.
from India News https://ift.tt/IfTbpXz
0 Comments