`தனது ரகசியம் வெளிவந்துவிடுமோ என்ற பதற்றத்தில் இருக்கிறார் அண்ணாமலை’ - போட்டு தாக்கும் கடம்பூர் ராஜூ

பா.ஜ.க, ஐ.டி. பிரிவு மாநிலத் தலைவர் நிர்மல்குமார், செயலாளர் திலீப் கண்ணன் உள்ளிட்ட சிலர், பா.ஜ.,வில் இருந்து விலகி, அதிமுக.,வில் இணைந்தனர். இதையடுத்து, கூட்டணி தர்மத்தை மீறி பா.ஜ.க, நிர்வாகிகளை அதிமுக.,வில் இணைப்பதைக் கண்டித்து, கோவில்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பாஜக, நிர்வாகிகள் சிலர் தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., சார்பில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவில்பட்டி டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. கூட்டணியில் இருந்து வரும் அதிமுக., - பாஜக, இடையிலான இந்த மோதலினால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவில்பட்டி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், பா.ஜ.க-வின், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட துணைத் தலைவர் கோமதி, பா.ஜ.க,வில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.  

அ.தி.மு.கவில் இணைந்த கோமதி

பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய கடம்பூர் ராஜூ, “அ.தி.முக., தலைமையில்தான் எந்த கூட்டணியும் அமையும். 234 தொகுதிகளிலும் தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர் ஜெயலலிதா. பாரத பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காகத்தான், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்தது. அதனால்தான் அந்த தேர்தலில் ஒரு கோடி ஓட்டுக்கள் பெற முடிந்தது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க, தனியாக போட்டியிட்டார்கள். அதன் விளைவு, விரல்விட்டு எண்ணக்கூடிய இடங்களில் மட்டுமே பா.ஜ.க, வெற்றி பெற்றது. அவர்களது நிலையை அறிந்த பிறகு, அவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை தொடர்ந்தனர்.

ஒரு கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கட்சி மாறுவது காலம்காலமாக நடப்பதுதான். இது ஏன் அண்ணாமலைக்கு புரியவில்லை என்பது எங்களுக்கு புதிராக இருக்கிறது. கட்சியில் இருந்து வெளியேறுவது என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் அதிமுக-வில் இருந்து விலகி பா.ஜக-வில் இணைந்தார். அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அது அவரது தனிப்பட்ட விருப்பம். தனிமனித விருப்பத்தில் யாரும் தலையிட முடியாது. இதுபோன்ற அடிப்படை அரசியல் கூட தெரியாமல், அண்ணாமலை எப்படி கட்சியை வளர்க்கப் போகிறார் என்று தெரியவில்லை. கூட்டணி என்பது தேர்தலை சந்திப்பதற்கு மட்டும்தான். கட்சியில் இருந்து விலகுவதோ, சேருவதோ அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.

அண்ணாமலை

அண்ணாமலை, படபடப்பின் உச்சியில் இருக்கிறார். ஐ.டி. பிரிவு தலைவர் கட்சியில் இருந்து விலகியதில் இருந்தே ஏதோ ரகசியத்தை வெளியிட்டு விடுவாரோ என்று அண்ணாமலை பயத்தில் இருக்கிறார். அண்ணாமலையின் ரகசியம் வெளிவந்துவிடுமோ என்பதால் தான் பயத்துடனும், பதற்றத்துடனும் இருக்கிறார்.

இதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். ’எதிர்வினையாற்றுவேன்’ என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். அரசியல் நல்வினை ஆற்றினால்தான் வளர முடியும். எதிர்வினையாற்றினால் எதிர்விளைவுகளைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். நல்வினை ஆற்றுவதுதான் அ.தி.மு.க., எதிர்வினையாற்றுவது அ.தி.மு.க.,வுக்கு பழக்கமில்லை.

கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்று சொன்னால் இந்தியாவிலேயே திமுக., ஆட்சிக்குதான் முதலிடம் கிடைக்கும். முதல்வர் ஸ்டாலின், பிரதமராக யார் வர வேண்டும் என்பதை விட, பிரதமராக யார் வரக்கூடாது என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு என்று சொல்லி, அகில இந்திய அளவில் கூட்டணி அமைப்பதற்கு முயற்சி செய்கிறார்.

இதையெல்லாம் பார்த்து, திமுக., அரசுக்கு எதிராக எதிர்வினையாற்றுவதற்கு திராணி இல்லாத அண்ணாமலை, அ.தி.மு.க.,வை பார்த்து எதிர்வினையாற்றுவேன் என்று கூறியிருக்கிறார். ஒரு அண்ணாமலை இல்லை, ஒரு லட்சம் அண்ணாமலை வந்தாலும் அ.தி.மு.க.,வை அசைத்துக்கூட பார்க்க முடியாது. போகிற போக்கைப் பார்த்தால், அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.க,வை காலி செய்துவிடுவார்.

அ.தி.மு.கவில் இணைந்த பா.ஜ.க நிர்வாகி கோமதி

’கட்சியில் இருந்து யார் வேண்டுமானாலும் போகட்டும்’ என்று எந்த தலைவராவது சொல்வார்களா? ஆனால் அண்ணாமலை அவ்வாறு சொல்லியிருக்கிறார். இதை நட்டா, அமித் ஷா வேடிக்கை பார்க்க மாட்டார்கள். கூட்டணியை பற்றியோ, அல்லது வேறு எந்த முக்கிய முடிவு பற்றியோ டெல்லி தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

பா.ஜ.க, மாநிலத் தலைவர்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. இது அண்ணாமலைக்கும் தெரியும். தினமும் செய்தியில் வர வேண்டும் என்று நினைத்து அவ்வாறு சொல்கிறார். இன்று அண்ணாமலை என்றால், நாளை ஒரு உண்ணாமலை தமிழக பா.ஜ.க,வுக்கு தலைவராக வருவார். கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜ.கவில் பல தலைவர்கள் மாறிவிட்டனர். இவர் நிரந்தரம் இல்லை” என்றார் காட்டமாக.



from India News https://ift.tt/ECY1VvZ

Post a Comment

0 Comments