திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ அனிபால் கென்னடி தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், "திருக்குறள் நம் நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒரு அற்புத நூலாகும். 14 ஐரோப்பிய மொழிகள், 10 ஆசிய மொழிகள், 14 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு உன்னத நூல். எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சிறந்த மறைநூல்.
ஒரு மொழிக்குள் திருக்குறளை சுருக்கிவிட முடியாது. மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரைதான் இந்த திருக்குறள் பொதுமறை. வள்ளுவனை பெற்றதால், புகழ் வையகம் பெற்றது. அவருக்கு சிறப்பு செய்யும் வண்ணம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்றார். இந்த தீர்மானத்தை வரவேற்று எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட பலரும் பேசினர்.
இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "மனிதன் செம்மையாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்றால், திருக்குறளை படித்து அதன் கருத்துக்களை ஏற்றால் போதும். திருக்குறளில் இல்லாததே இல்லை. 2 வரியில் அனைத்து கருத்துக்களும் அடங்கியுள்ளது. நமது பிரதமர் எந்த கூட்டத்தில் பேசினாலும் திருக்குறளை சுட்டிக்காட்டாமல் பேசியதே இல்லை. எனவே திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதில் எந்த தயக்கமும் இல்லை. இதை அரசு தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பலாம்" என்றார்.
இதையடுத்து சபாநாயகர் செல்வம், அனிபால் கென்னடியிடம் தனிநபர் தீர்மானத்தை வாபஸ் பெற கேட்டுக்கொண்டார். இதையேற்ற அவரும் தீர்மானத்தை வாபஸ் பெற்றார். பின்னர், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி அரசு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
from India News https://ift.tt/Mu5HFJV
0 Comments