`எங்களுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் பிரச்னை இருக்கிறது' - காங்கிரஸ் கவுன்சிலர்கள் போர்க்கொடி

சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் சத்தியமூர்த்தி பவனில், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கமிட்டி மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், "அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மல்லிகார்ஜுன கார்கே

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் நாட்டு மக்கள் எழுச்சி பெறும் வகையில் நடைபெற்றது. அதற்காக ராகுல்காந்திக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. நடைபெறவுள்ள "கையோடு கைகோர்ப்போம்" என்ற இயக்கத்திற்கு சென்னை மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து அதனை பொதுமக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பல வெற்றிகளை கண்டு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 67,000 வாக்குகளுக்கும் மேலாக பெற்று வெற்றி பெறச் செய்த அந்த தொகுதி மக்களுக்கும், அனைத்து நிர்வாகிகளுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

மேலும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 39 தொகுதிகளிலும், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உள்ளடங்கிய 3 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கடுமையாக உழைக்க வேண்டும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு வரலாறு காணாத வகையில் ஒரு தனி மனிதர் அதானிக்காக அவர் செய்திருகின்ற ஊழலை மறைக்கின்ற வகையில் நாடாளுமன்றத்தை முடக்கக் கூடிய அளவில் நடந்து கொள்கிறது. இதனை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளும், கூட்டணி கட்சிகளும் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

கௌதம் அதானி

எல்ஐசி, எஸ்பிஐயில் நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பணிகளை சிறப்பாக செயல்படுத்துகிற வகையில் அங்கே அமர்ந்து ஆலோசனை செய்வதற்காக ஒரு அறையை ஒதுக்கித் தர வேண்டும்" என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மாமன்ற குழு தலைவர் திரவியம். ``வரும் மாதத்தில் நடைபெறக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்து ஆலோசித்து இருக்கிறோம். காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு ரிப்பன் மாளிகையில் அறை ஒதுக்கி தருவது உள்ளிட்ட எட்டு தீர்மானங்களை இந்த கூட்டத்தில் நிறைவேற்ற இருக்கிறோம்.

சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் பணியாற்றக்கூடிய சில வார்டுகளில் எங்களுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் பிரச்னை இருக்கின்றது. காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் பணிகளை யார் தடுத்தாலும் அந்த கட்சியின் தலைவரை சந்தித்து முறையிடுவோம்.

ஓராண்டிற்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கிய நிதியை காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் முழுமையாக பயன்படுத்தி இருக்கின்றனர். காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி முழுமையாக கிடைத்திருக்கிறது" என்றார்.

கே.எஸ்.அழகிரி

இதுகுறித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் சிலரிடம் பேசினோம். "சென்னையில் 13 மாநகராட்சி உறுப்பினர்கள் காங்கிரஸுக்கு இருக்கிறோம். இதில் ஒருசில இடங்களின் திமுகவினர் எங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். குறிப்பாக திமுக வட்ட செயலாளர்களின் ஆட்டம் அதிகமாக இருக்கிறது. நிதிகளை அவர்கள் சொல்லும் திட்டங்களுக்கு தான் பயன்படுத்த வேண்டும் என கூறுகிறார்கள்.

நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு மரியாதை கொடுப்பது இல்லை. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைமையிடம் தெரிவித்தோம். அதற்கு அவர்கள், ஒரு சில இடங்களில் அப்படி தான் இருக்கும். கொஞ்சம் அமைதியாக இருங்கள்.

முரண்பாடுகளை சுமூகமாக தீர்த்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கிறார்கள். எவ்வளவு காலத்துக்கு தான் நாங்கள் பொறுமையாக இருக்க முடியும். எங்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை. திமுக வட்ட செயலாளர்கள், அந்த கட்சியின் கவுன்சிலர்களுக்கே நெருக்கடி கொடுக்கிறார்கள். எனவே அந்த கட்சியின் தலைமை இதை தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து திமுக தலைமைக்கு புகார் தெரிவித்திருக்கிறோம்" என்று கொதித்தனர்.



from India News https://ift.tt/Zfv6Ecj

Post a Comment

0 Comments