திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த பெண் சித்தர் அம்மணி அம்மாள். பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் வடக்கு கோபுரத்தை, பலரது உதவியை பெற்று கட்டி முடித்தவர் இவர்தான் என கூறப்படுகிறது. அதனால், அண்ணாமலையார் கோயிலின் வடக்கு கோபுரமானது, 'அம்மணி அம்மன் கோபுரம்' என்று இவரது பெயரை கொண்டே அழைக்கப்படுகிறது. 17-ம் நூற்றாண்டின் இறுதியில்... ஈசான்ய லிங்க சந்நதிக்கு எதிரில் இவர் ஜீவசமாதி அடைந்துள்ளார். வடக்கு கோபுரத்தின் அருகாமையில் இவரது பெயரில் மடம் ஒன்றும் உள்ளது.
இந்த மடத்தில், வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் தங்கி உணவு உட்கொண்டு, நீராடி, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து வந்தனர். இந்த மடம், சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இந்த மடத்தின் 23,800 சதுர அடி இடத்தை பா.ஜ.க-வின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் டி.எஸ்.சங்கர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியிருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 18-ம் தேதி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த மாடி வீடு போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. மேலும், அம்மணி அம்மன் மடத்தையும் இடிக்கும் பணியை அரசுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இது, உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய செயல் என்று கூறி, மடம் இடிக்கப்படுவதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மடத்தை இடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அம்மணி அம்மன் மடம் இடிப்பு விவகாரம், திருவண்ணாமலை பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், 19-ம் தேதியும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அரசுத்துறை அதிகாரிகள் ஈடுபட்ட போது, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த டி.எஸ்.சங்கர், மடம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர் அறநிலையத்துறை அதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விமர்சனம் குறித்து, அண்ணாமலையார் திருக்கோயிலின் இணை ஆணையர் (பொறுப்பு) குமரேசன் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதனைப் பெற்றுக்கொண்ட போலிஸார்... 6 பேர் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து, காளியப்பன், ஏழுமலை, கார்த்தி, டி.எஸ்.சங்கர் ஆகிய 4 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அம்மணி அம்மன் மடம் இடிப்பு விவகாரம் குறித்து, இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அம்மணி அம்மாளின் மடத்தை இடித்த அறநிலைத்துறையை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்த மடம் தெய்வத்திரு. அம்மணி அம்மாள் குடும்பத்தாரை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது. இவரது குடும்பத்தினர் ஒரு டிரஸ்டை வைத்து நிர்வாகம் செய்து வருகின்றனர். இவர்கள் பெங்களூரில் இருக்கின்றனர். இந்த மடம், அறநிலைத்துறைக்கு சொந்தமானது அல்ல.
இந்த மடத்தை பராமரித்து வந்த வாட்ச்மேனாக இருந்தவர் மடத்தை கைப்பற்றி ஆண்டு அனுபவித்து வந்தார். மடம் தனக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடினார். இந்து முன்னணி பேரியக்கத்தின் கௌரவ தலைவராக இருந்த இராதாகிருஷ்ணன் அவர்கள்... மடத்து டிரஸ்டுக்காக 30 ஆண்டுகள் போராடி, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மடத்தை மீட்டெடுத்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை, அவரது மகன் தான் இருக்கிறார். இந்த மடத்தை நிர்வகிப்பதற்காக ஸ்டேட் இந்து முன்னணி டிரஸ்டையும் ஒரு நிர்வாகியாக, ஓரிஜினல் மடத்தின் டிரஸ்டின் சரத்துப்படி சேர்த்து நிர்வாகம் நடந்தது. பின்னர், திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக இருந்த ஸ்ரீதர் என்பவர் மடத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்தார். இந்து முன்னணி அதை முறியடித்தது.
மேலும் அமைச்சர் ஏ.வ.வேலுவின் ஆட்கள் ஒருமுறை மடத்தை ஆக்கிரமிக்க பார்த்தபோது, கோபால் ஜி பேசியதால் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையின்படி ஏ.வ.வேலு மடத்தை கையகப்படுத்துவதை கைவிட்டார். அதன் பின்னர், இந்த மடத்தை இந்து முன்னணியின் மாவட்ட தலைவராக இருந்த சங்கர் பார்த்து வந்தார். அவரும் சுயநலவாதியாக மாறி மடத்து நிர்வாகிகளை ஏமாற்றி தனக்காக வீடு கட்டிக் கொண்டார். இந்து முன்னணி தவறை சுட்டிக்காட்டிய போதும் தவறை திருத்திக் கொள்ளாத காரணத்தினால், சங்கரை இந்து முன்னணி மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கியது.
தொன்மையான இந்த மடத்தை அபகரிக்க சில முக்கிய அரசியல்வாதிகள் நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றனர். இவர்கள் எல்லோருமே தி.மு.கவை சேர்ந்தவர்கள் என்பதை திருவண்ணாமலை மக்கள் அறிவார்கள். சங்கரின் ஆக்கிரமிப்பு கட்டடத்தினை அகற்றியதை இந்து முன்னணி மனப்பூர்வமாக பாராட்டுகிறது. ஆனால் இந்த மடத்தின் தொன்மையை காப்பாற்ற வேண்டும். நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் அமர்வின் தீர்ப்பின்படி அம்மணி அம்மன் பழமையான கோவிலை பாதுகாக்க வேண்டியது அவசியம்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அம்மணி அம்மன் ஜீவசமாதியை பராமரித்து வரும் ரமேஷ் பேசுகையில், "அம்மணி அம்மன் மடம் மொத்தம் 25,000 சதுர அடி பரப்பளவிலானது. அதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடு கட்டப்பட்டிருந்தது 650 சதுரஅடி தான். நீதிமன்ற உத்தரவுப்படி அந்த ஆக்கிரமிப்பை மட்டும் அதிகாரிகள் அகற்றாமல், மடத்தையும் பாதிக்கும் மேல் இடித்துவிட்டார்கள். மடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றியதை 100% வரவேற்கிறோம். அதேபோல், மடத்தையும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து புராதான சின்னமாக பராமரித்திருக்க வேண்டும்.
ஆனால், அதிகாரிகள் தற்போது அதிகார துஷ்பிரயோகம் செய்துவிட்டனர். இடிக்கப்பட்ட மடத்தின் பகுதிகளை அரசு மீண்டும் மீட்டுருவாக்கம் செய்து பராமரிக்க வேண்டும். அந்த இடத்தை வேறெந்த பயன்பாட்டிற்காகவும் மாற்றி விடக்கூடாது. இந்த மடம் புராதான சின்னமாக பராமரிக்கப்பட வேண்டும்" என்றார்.
இந்த சம்பவம் குறித்து, அண்ணாமலையார் திருக்கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரேசனிடம் விளக்கம் கேட்டோம். "நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் முன்னிலையில் தான் ஆக்கிரமிப்பை அகற்றினோம். மடத்தை நாங்கள் இடிக்கவில்லை. பக்கத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு, கடைகளை தான் இடித்தோம். மடத்தை இணைத்தபடி அந்த நபர் கட்டடத்தை கட்டியிருந்தார். அதை இடிக்கும் போது மடத்தின் சுவர் உடையத்தானே செய்யும். மீதி பகுதிகள் அப்படியேதான் இருக்கிறது. அதோடு பணியை நிப்பாட்டிவிட்டோம்" என்றார்.
from India News https://ift.tt/vDuaCk2
0 Comments