ராஜ்ய சபாவில் தி.மு.க-வைச் சேர்ந்த திருச்சி சிவா எம்.பி, "2022-23-ம் ஆண்டில் அரசின் கவனத்துக்கு வந்த சட்டவிரோத ரயில் இ-டிக்கெட் விற்பனை குறித்து மண்டல வாரியாக பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை என்ன... இவ்வாறு சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்யப்படுவதை தடுக்க ரயில்வே ஏதேனும் பயனுள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறதா... அப்படியானால் ஐ.ஆர்.டி.சி-யின் இணையதளம் பாதுகாப்பானதா?" எனக் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். அதில், ``இந்தியாவில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்ததாக, 2022-ம் ஆண்டில் மட்டும் 4,430 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இதில், அதிகபட்சமாக வடக்கு ரயில்வேயில் - 633, மேற்கில் - 608, மத்திய கிழக்கில் - 514, தெற்கில் - 392; தெற்கு மத்திய ரயில்வேயில் - 350 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
இதேபோல் நடப்பு 2023-ம் ஆண்டில் ஜன.22-ம் தேதி வரை 267 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இதில் அதிகபட்சமாக கிழக்கு மத்திய மண்டலத்தில் - 70; மேற்கில் - 33; வடக்கில் - 29; கிழக்கில் - 23; தென் கிழக்கு மத்திய, மத்திய மண்டலங்களில் தலா 16 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற 'இ-டிக்கெட்' முறைகேடுகளை தடுக்கும் வகையில் இந்திய ரயில்வே பல தடுப்பு மற்றும் தண்டனை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக சுருக்கமான பெயர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருகின்றன. ஒதுக்கப்பட்ட வகுப்பில் பயணம் மேற்கொள்ளும்போது பயணிகள் பரிந்துரைக்கப்பட்ட அடையாளச் சான்றை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
அங்கீகரிக்கப்படாத டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்கிரிப்டிங் மென்பொருளின் பயன்பாடு ஆகியவற்றை தடுக்க பயணிகள் முன்பதிவு அமைப்பு, (PRS) மையங்கள், முன்பதிவு அலுவலகங்கள், தளங்கள், ரயில்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது.
மேலும் பண்டிகைகள், விடுமுறை நாள்களில் இதுபோன்ற சோதனைகளும் தீவிரப்படுத்தப்படுகின்றன. பயணிகள் தங்களது விவரங்களை பதிவுசெய்வதற்கும், ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்துவதற்கும் குறைந்தபட்ச நேரத்துடன் CAPTCHA பயன்படுத்தும் வகையில் இருக்கிறது.
அதாவது 2 பயணிகள் வரை தங்களது விவரங்களை முன்பதிவு படிவத்தில் பூர்த்தி செய்வதற்கான கால அளவு 20 வினாடிகள்; 3 - 4 பயணிகளுக்கு 25 வினாடிகள்; 5 - 6 பயணிகளுக்கு 30 வினாடிகள் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. எந்த முன்பதிவுக்கான குறைந்தபட்ச கால வரம்பு, படிவத்தை நிரப்புவதற்கு இடைவெளியுடன் 40 வினாடிகளாகவும், வங்கிகள் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு 20 வினாடிகளாகவும் கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
அட்வான்ஸ் ரிசர்வேஷன் பீரியட் (ARP) முன்பதிவு மற்றும் தட்கல் துவங்கும் பதினைந்து நிமிடங்கள் வரை IRCTC-ன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முதலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் பொதுமக்களும் கல்வி, மீடியா மூலமாக சட்டவிரோதமாக டிக்கெட்களை பெறுவதன் மூலம் ஏற்படும் பாதிப்பை உணர்ந்திருக்கிறார்கள்.
IRCTC பயனர் ஐடி-யை உருவாக்குவதற்கும், ஒரு பயனருக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. தனிப்பட்ட பயனர்களுக்கு ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படும், அங்கீகரிக்கப்படாத வரை ஆதார் அட்டையில் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
அட்வான்ஸ் ரிசர்வேஷன் பீரியட் (ARP) மற்றும் தட்கல் நேரத்தில் வெளிநாட்டு ஐபி-க்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது நெட்வொர்க் மட்டத்தில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. பொது பிரிவில் ARP முன்பதிவின்போது 08:00 மணி முதல் 08:15 மணி வரையிலும், தட்கல் பதிவின்போது 11:00 மணி முதல் 11:15 மணி வரையிலும் முகவர் முன்பதிவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
இ - டிக்கெட் அமைப்பில் தரப்படுத்தல் சோதனை மற்றும் தர சான்றிதழின் மூலம் பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் வழக்கமான தணிக்கை உள்ளிட்ட அனைத்து நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. தினந்தோறும் பாதுகாப்பற்ற ஐடி-கள் களையெடுக்கப்படுகின்றன.
அனைத்து அட்டை அடிப்படையிலான கட்டணங்களும் 3D-Secure மூலம் பாதுகாக்கப்படுகின்றன. இது ஆன்லைனுக்கான கூடுதல் பாதுகாப்பு அடுக்கு ஆகும். சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்யும் நபர்கள்/ஏஜென்சிகளுக்கு எதிராக ஆர்.பி.எஃப் மூலம் வழக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ரயில்வே டிக்கெட்டுகளை வாங்குதல் மற்றும் விநியோகம் செய்யும் வணிகத்தை அங்கீகரிக்காமல் மேற்கொண்டால், ரயில்வே சட்டம் 143-வது பிரிவின்கீழ் குற்றவாளிகள்மீது வழக்கு பதிவுசெய்யப்படும். இந்த விவகாரத்தில் தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.
from India News https://ift.tt/dzy1l9m
0 Comments