``இது சாமி கட்சி...” - என்.ஆர்.காங்கிரஸ் தொடக்க விழாவில் உருகிய முதல்வர் ரங்கசாமி

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 13-ம் ஆண்டு தொடக்க விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் செயலாளர் ஜெயபால் தலைமை வகிக்க, துணை சபாநாயகர் ராஜவேலு வரவேற்றார். முதலமைச்சரும், கட்சியின் நிறுவன தலைவருமான ரங்கசாமி கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமிக்கும், காந்தி, காமராஜர் உருவப்படங்களுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார். தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கிய அவர், “13  ஆண்டுக்கு முன்பு கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்தோம். அதன்பின் எதிர்கட்சியாக இருந்தோம். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறோம். மாநிலம் வளர்ச்சியடைந்து மக்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதுதான் கட்சியின் நோக்கமே.

முதல்வர் ரங்கசாமி

அந்த நோக்கத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.கவோடு கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று இம்முறை ஆட்சியில்  உள்ளோம். கடந்த ஆட்சியில் முடக்கப்பட்ட, நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளோம். ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மாணவர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நாம் கொண்டுவந்த திட்டங்கள் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை மீண்டும் செயல்படுத்த தேவையான  நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த ஆட்சியில் முதியோர் உதவித்தொகையை ஒரு ரூபாய்கூட உயர்த்தவில்லை.

 5 ஆண்டுகளாக கேட்டுப் பார்த்தும் நயா பைசா கிடைக்கவில்லை என்றும் முதியோர்கள் கூறிவந்தனர். நாம் ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதியோர்  உதவித்தொகையை ரூ.500 உயர்த்தினோம். அதுமட்டுமின்றி 10,000 புதிய விண்ணப்பதாரர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கினோம். விடுபட்ட 17,000 பேருக்கும் சமீபத்தில் உதவித்தொகை வழங்கியுள்ளோம். ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் 27,000 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.  இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்குகிறோம். மத்திய அரசு உதவி திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்துகிறோம்.  மாணவர்களுக்கான திட்டங்களையும் செயல்படுத்த உள்ளோம். சைக்கிள், லேப்டாப் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 

முதல்வர் ரங்கசாமி

பட்ஜெட் கூட்டத்துக்கு முன்பு லேப்டாப், சீருடை வழங்கப்படும். குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதுதான் அரசின்  எண்ணம். அதனடிப்படையில் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தையும் செயல்படுத்துவோம். தாழ்த்தப்பட்டோர் சிறப்புக்கூறு நிதியையும் ஒதுக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது ரூ.300 கோடியில் பணிகள் நடந்து வருகிறது. பொதுப்பணித்துறையிலும் உரிய நிதி ஒதுக்கி உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அரசின் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்படும். அனைத்து துறையிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க மத்திய அரசு துணையுடன் தொழிற்சாலைகளை கொண்டுவரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கட்சியின் நோக்கமே மாநில அந்தஸ்து வேண்டும் என்பதுதான். மத்திய அரசிடம் தொடர்ந்து கேட்டு வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எனக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் மாநில அந்தஸ்து பிரச்னையை கையில் எடுப்பதாக குற்றம் கூறுகின்றனர். எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. மாநில அந்தஸ்தை என் சுயநலத்திற்காக கேட்கவில்லை, புதுவை மக்களின் நலனுக்காகத்தான் கேட்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். நிர்வாகம் எளிதாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் மாநில அந்தஸ்தை கேட்கிறேன். மாநில அந்தஸ்து கிடைத்தால் நிர்வாகத்தில் உள்ள தேக்கநிலையை போக்கி வேகமாக செயல்படலாம். மத்திய அரசு புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. மக்கள் நலனுக்காக எதையும் செய்வோம். மாநில வருவாயை பெருக்கி, வளர்ச்சி காண வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

விற்பனை வரி, கலால் வரி மூலம்தான் பட்ஜெட்டையே சமர்ப்பிக்கிறோம். மக்களுக்கு எந்த சுமையும் ஏற்றாமல் வருவாயை உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்துகிறோம். கட்சி வளர்ச்சியிலும் கவனம் செலுத்த உள்ளோம். இந்த கட்சி இருக்குமா? தொடருமா? என்ற கேள்வி பலரிடம் இருக்கலாம். இது சாமி கட்சி. இந்த கட்சி பெரியளவில் வளர்ச்சி காணும். கட்சியின் அமைப்புகளை பலப்படுத்த உள்ளோம். இதற்காக அமைப்பு ரீதியாக நிர்வாகிகளை நியமித்து பொறுப்பு வழங்க உள்ளோம். கட்சியினருக்கு ஊக்கமும் அளிக்கப்படும். வரும் தேர்தல்களை கட்சியின் பலத்தோடு சந்திப்போம்” என்றார்.



from India News https://ift.tt/YE5KsNj

Post a Comment

0 Comments