`ஐ.டி பணியாளர்கள் நலன் சார்ந்து சட்ட நடவடிக்கைகள் தேவை’ - கோரும் ஊழியர்கள்; முறைப்படுத்துமா அரசு?

ஐ.டி துறையில் பணியாளர்களின் எதிர்காலம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இன்று பார்த்துக்கொண்டிருக்கும் வேலை, நாளை இருக்குமா என்கிற நிச்சயமற்ற சூழலில், பெரும் துயரத்தை அவர்கள் அனுபவித்துவருகிறார்கள்.

ஐ.டி துறையில் பணிநீக்கம்

அவர்களின் பணிச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய, சட்டவிரோத பணிநீக்கத்தைத் தடுக்க வேண்டிய ஆட்சியாளர்கள் பாராமுகத்துடன் இருப்பதாக ஐ.டி பணியாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறை பெருமளவிலான வேலைவாய்ப்பை வழங்கிவருகிறது. அதிக ஊதிய உயர்வு, பணியாளர் பலன்கள், வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான வாய்ப்பு என சாதகமான பல அம்சங்கள் இருப்பதால், பலரின் விருப்பத் தேர்வாக ஐ.டி துறை இருந்துவருகிறது.

சமீபகாலமாக, ஐ.டி. நிறுவனங்களில் வேலை இழப்பு பிரச்னை பெரும் கவலைக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது. சமீபத்தில், ட்விட்டர், மெட்டா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் திடீரென ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. 2025-ம் ஆண்டுக்குள் ஐ.டி. துறையில் 22 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்று சில அதிர்ச்சி ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

ஐ.டி துறையில் பணிநீக்கம்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் தாக்கம் காரணமாக, இந்தியாவில் ஐ.டி நிறுவனங்களில் வேலையிழப்பு பிரச்னை ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதில் பிரச்னை என்னவென்றால், பணியாளர்களை மிரட்டியும், அழுத்தம் கொடுத்தும் வேலையை ராஜினாமா செய்ய வைப்பதற்கான நடவடிக்கையில் ஐ.டி நிறுவனங்கள் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தியா முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான ஐ.டி பணியாளர்கள் இருந்துவரும் நிலையில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15 சதவித ஐ.டி பணியாளர்கள் வேலையிழந்துவந்தனர். அது, தற்போது 30 சதவிதமாக அதிகரித்திருக்கிறது. ஐ.டி நிறுவனங்களில் தற்காலிக பணிநீக்கம் என்பதைவிட நிரந்தர பணி நீக்கம்தான் நடந்துகொண்டிருக்கிறது.

அழகுநம்பி வெல்கின்

சென்னையிலும் சில முன்னணி ஐ.டி நிறுவனங்கள் அதிகளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றன. ஊழியர்களை நிர்வாகமே வேலையைவிட்டு அனுப்புவதைக் காட்டிலும் ஊழியர்களே நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்தால், தங்களுக்கு சட்டப்பூர்வமான பிரச்னைகள் எதுவும் இருக்காது என்று ஐ.டி நிறுவனங்கள் கருதுகின்றன. பல நூறு கோடி ரூபாய் லாபத்தில் இயங்கிவரும் இந்த நிறுவனங்கள், அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படக்கூடிய பொருளாதார மந்தநிலையைக் காரணம் காட்டி, சட்ட விரோதமாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இது குறித்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை நிறுவனங்கள் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரான அழகுநம்பி வெல்கினிடம் பேசினோம். 

ஐ.டி துறையில் பணிநீக்கம்

``ஐ.டி நிறுவனங்களின் அணுகுமுறை மிகவும் மோசமானதாக இருக்கிறது. பணியாளர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து வேலையை ராஜினாமா செய்ய வைக்கிறார்கள். அப்ரைசலின்போது, ‘நீங்கள் சரியாக வேலை செய்யவில்லை. அதனால், நீங்களே வேலையை ராஜினாமா செய்துவிடுங்கள். இல்லையென்றால், ‘அண்டர் பெர்ஃபார்மர்’ என்று சொல்லி நாங்களே உங்களை பணிநீக்கம் செய்துவிடுவோம்’ என்று மிரட்டுகிறார்கள்.

இதுபோக, நிறையப் பேரை ஒரே நேரத்தில் வேலையிலிருந்து தூக்க வேண்டிவரும்போது வேறொரு முறையைக் கையாளுவார்கள். ‘பெர்ஃபார்மன்ஸ் இம்ப்ரூவ்மென்ட் பிளான்’ என்று ஒன்று கொண்டுவருகிறார்கள். இதை, ‘பி.ஐ.பி’ என்று சொல்வார்கள். அதாவது, நீங்கள் சரியாக ‘பெர்ஃபார்ம்’ செய்யவில்லை. இனி, உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நீங்கள் அடைந்தாக வேண்டும் என்று சொல்வார்கள். அவர்கள் சொல்கிற இலக்கை யாராலும் அடைய முடியாது. எனவே, உங்கள் நல்லதுக்குத்தான் சொல்கிறோம்... நீங்களே வேலையை ராஜினாமா செய்துவிடுங்கள் என்று சொல்வார்கள்.

ஐ.டி வேலையிழப்பு

வேலையைவிட்டு அனுப்புவதற்கான இன்னொரு முறையாக, ‘டெஸ்ட்’ வைப்பார்கள். காரணமில்லாமல் திடீரென்று டெஸ்ட் வைப்பார்கள். அதில் பாஸ் பண்ணவில்லையென்றால், அப்போதும், ‘நீங்களே ராஜினாமா செய்துவிடுங்கள். நாங்கள் பணிநீக்கம் செய்தால், உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்’ என்று சொல்வார்கள். இந்த மாதிரிதான் பணியாளர்களை ராஜினாமா செய்ய வைத்து வெளியே அனுப்புகிற முறையை ஐ.டி நிறுவனங்கள் பின்பற்றிவருகின்றன.

தொழில் தாவா சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி, பணியாளர்களுக்கு எதிராக இப்படியான நடவடிக்கைகளை ஐ.டி நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இங்குள்ள தொழிலாளர் நலச் சட்டத்தின்படி, ஐ.டி பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடியாது. அதாவது, நிர்வாகத்தின் விருப்பத்துக்கு ஏற்ப பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடியாது” என்கிறார் அழகுநம்பி வெல்கின்.

மேலும், “மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஐ.டி நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி ஆள்குறைப்பு செய்ய முடியாத அளவுக்கு சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் ஐ.டி பணியாளர்களின் நலன் சார்ந்து சில சட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை ஆணையர் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பல முறை முறையிட்டுவிட்டோம்.

முதலமைச்சர் ஸ்டாலின்

ஆனால், உரிய நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் வாக்குறுதி அளிக்கும் அமைச்சரும் அதிகாரிகளும், எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும்” என்கிறார் அழகுநம்பி வெல்கின். இதில், தி.மு.க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?



from India News https://ift.tt/2vI9JaV

Post a Comment

0 Comments