சேலம், ஏற்காடு என்பது தமிழ்நாட்டிலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு மலையில் 70 குக்கிராமங்கள் அமைந்திருக்கின்றன. இங்குள்ள மலைவாழ் மக்கள் பெரும்பாலானோர் காபி தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். பொருளாதாரத்தில் விளிம்பு நிலையிலிருக்கும் மலைவாழ் மக்களுக்கு இன்றளவும் சரியான அடிப்படை வசதிகள் கிடைப்பது என்பது பெரும் போராட்டமாகத்தான் இருந்து வருகிறது.

குழந்தைகளுக்கு சரியான வீடு வசதிகள் இல்லாமல், படிப்பதற்கு பள்ளிக்கூடம் இல்லாமலும் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில், ஏற்காடு அடுத்த புளியங்கடை எனும் கிராமத்தில் 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிக்கூடம் ஒன்றினை மறுசீரமைப்பு செய்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பள்ளிக்கூடத்தின் கட்டுமானப் பணிகள் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்தவித நடவடிக்கை இல்லை என்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய அந்தப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவரின் தந்தை ரமேஷ், ``இந்தப் பள்ளியிலதான் எங்க குழந்தைங்க எல்லாம் படிச்சிட்டு வராங்க. எங்க ஊருக்குன்னு ஒரு கட்டுப்பாடு வச்சிருக்கோம். அதுல எங்க ஊரைச் சேர்ந்தவங்க, இங்க இருக்குற பள்ளியை விட்டுட்டு வேற எங்கேயும் அவங்க குழந்தைகள சேர்க்கக் கூடாது. 5-ம் வகுப்பு வரையிலும் கண்டிப்பாக எங்க ஊர் பள்ளியிலதான் படிக்கணும்'னு கட்டுப்பாடு வச்சிருக்காங்க. அதனால எல்லா குழந்தைகளும், இங்கதான் படிக்க வர்றாங்க. மேற்படிப்புக்காக வெளியூர் போறவங்களத் தவிர, மத்தப்படி 5-ம் வகுப்பு வரைக்கும், இங்கதான் படிச்சாகணும். இதை காலங்காலமா எங்க கிராமத்துல கடைப்பிடிச்சுட்டு வர்றாங்க.
கடந்த 10 வருஷமா பள்ளிக் கட்டடம் ரொம்பவே விரிசல்விட்டு, எப்போ வேணாலும் சுவர் இடிந்து விழும் நிலையில்தான் இருக்கு. ஆனா அதிகாரிகளுக்கு மனு மேல, மனு போட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கல. இது தொடர்பா பத்திரிகையில செய்தி வந்ததும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனே எங்க ஊரு பள்ளிக்கூடத்தைப் பார்த்து, உடனே கட்டடம் கட்டிக்கொடுக்க 25 லட்சம் ரூபா நிதி ஒதுக்கிட்டுப் போயிருந்தாரு. ஆனா, ஒதுக்கப்பட்ட நிதிக்கு எதாவது வேலைகள் பயனுள்ளதா நடந்துருக்கான்'னு பாத்தீங்கனா இல்ல.
இருந்த கட்டடத்தையும் இடிச்சிட்டதால 70 குழந்தைங்க வெயிலிலும், மழைச்சாரலிலும் உக்காந்து படிக்கிறாங்க. சத்துணவுகூட உக்கார்ந்து சாப்பிட முடியாம, மாணவர்கள் அவதியுற்று வராங்க. இப்போ கட்டியிருக்குற பள்ளிக்கூடம் ரொம்ப தரமற்ற முறையில இருக்கு. அரசாங்கம் அவ்வளவு ரூபா நிதி ஒதுக்கியும், இவ்வளவு மட்டமான பள்ளிக்கூடம் கட்டியிருக்காங்க. இது தொடர்பா மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் இல்ல. முதலமைச்சர்தான் நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.
இந்த நிலையில், புளியங்கடை பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்று வெளியிட்டிருக்கின்றனர். அதில், ``முதலமைச்சர் ஐயா, நீங்க எங்களுக்கு புதுசா பள்ளிக்கட்டடம் கட்டித் தருவீங்கன்னு ரொம்பவே சந்தோசஷமா இருந்தோம். ஆனா, இங்க பள்ளிக்கூடம் கட்டுரவங்க, எங்க உயிருக்கே பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கூடத்த கட்டுராங்க.
இதனால எங்க உயிருக்கே ஆபத்து வரும். நீங்க புது கட்டடம் கட்டி தருவீங்கன்னுதான் நாங்க, கட்டடம் கட்டுற வரைக்கும், மழையிலும், வெயிலிலும் உட்காந்து படிக்கிறோம். ஆனா அந்தக் கட்டடம் கட்டி எந்தவித பயன்பாடும் இல்லாம போய்டும் போலிருக்கு. முதலமைச்சர் ஐயா நீங்க இந்தக் கட்டடத்தை பார்வையிட்டு, எங்களுக்கு நல்ல கட்டடம் கட்டித் தரணும்'' என்று கோரிக்கை விடுகின்றனர். இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து ஏற்காடு வட்டாரக் கல்வி அலுவலர் ஷேக் தாவூத்திடம் கேட்டோம். நம்மிடம் பேசியவர், ``சம்பந்தப்பட்ட பள்ளிக் கட்டடத்தில் படிக்கட்டுகளை மட்டும்தான், மாற்றி கட்டித்தருமாறு அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி தரமான நிலையில்தான் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது" என்றார்.
from India News https://ift.tt/pyhvmou
0 Comments