வேலூரில், மூன்று தொழிலதிபர்களைக் குறிவைத்து ஐ.டி ரெய்டு நடந்துகொண்டிருக்கிறது. அம்பாலால் குழுமம், ரங்காலாய குழுமம், 100 நெம்பர் பீடி கம்பெனி ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர்களது வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். வேலூர் மாவட்டத்திலிருக்கும் குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் வசிக்கும் அம்பாலால் குழுமத்தின் தலைவர் ஜவரிலால் ஜெயின் வீட்டிலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் குழுமத்துக்குச் சொந்தமான ‘அம்பாலால் கேவல்சந்த் ஜூவல்லர்ஸ்’ என்ற நகைக்கடை குடியாத்தத்தில் செயல்பட்டுவருகிறது. தந்தை மறைந்தப் பின்னர் இந்தக் குழுமத்தின் சொத்துகளை தன் சகோதரர் உடன் சேர்ந்து ஜவரிலால் ஜெயின் நிர்வகித்துவருகிறார். அதோடு, ரியல் எஸ்டேட் தொழில்களிலும் இந்தக் குழுமம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
வேலூர் அருகேயுள்ள நந்தியாலம் பகுதியில் ‘கிங் கரிகாலா’ என்ற பெயரில் வீட்டு மனைப் பிரிவுகள், காட்பாடி சேவூர் பகுதியில் ‘கிங் அசோகா’ என்ற பெயரில் வீட்டு மனைப் பிரிவுகள், வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில் ‘பிருந்தாவனம்’ என்ற பெயரில் வீட்டுமனைப் பிரிவுகள் என பல்வேறு இடங்களில் வீட்டுமனைப் பிரிவுகளை ஏற்படுத்தி விற்பனைச் செய்துவருகிறார்கள்.
அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையிலும் 20 சென்ட் முதல் 20 ஏக்கர் வரையிலான இடத்தையும் விற்பனைக்கு அறிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஏலகிரி மலையிலுள்ள அத்தனாவூர், மங்களம், நிலாவூர், ராயநேரி போன்ற பகுதிகளில் இந்த நிறுவனம் 300 ஏக்கர் நிலங்களை விலைக்கு வாங்கி, மனைப் பிரிவுகளை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பங்குச் சந்தை முதலீடுகளிலும் இந்த நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
இந்த நிலையில்தான், வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக அம்பாலால் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுவருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் குழுமத்தின் கார்ப்பரேட் அலுவலகம், வேலூர் பழைய பைபாஸ் ரோட்டில் ‘அம்பாலால் கிரீன் ரிச் சிட்டி’ என்ற பெயரில் அமைந்திருக்கிறது. இந்த அலுவலகத்துக்குள்ளும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதேபோல, ‘ரங்காலயா’ குழுமத்தினரும் ஹோட்டல், திருமண மண்டபம், நகைக்கடை உட்பட பல்வேறு தொழில்களை செய்துவருகிறார்கள். இவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. இதைத் தொடர்ந்து, ‘100 நெம்பர் பீடி’ கம்பெனி நிறுவனமும் சோதனை வளையத்துக்குள் சிக்கியிருக்கிறது. சோதனை தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதால், இதுவரை ஏதாவது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறதா..? என்ற தகவல் வெளியாகவில்லை. சோதனை முடிந்த பின்னரே தகவல்கள் வெளியிடப்படும் எனவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
from India News https://ift.tt/TfO4ip5
0 Comments