உங்களில் ஒருவன் என்ற பகுதியில் மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். அந்த வகையில் மூன்றாவது முறையாக `உங்களில் ஒருவன்' மூலம் முதல்வர் ஸ்டாலின் பல கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார், அவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.
உங்களில் ஒருவனில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``சிறைச்சாலையில் நூலகம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி வைத்தது. அதற்காக பல்வேறு மக்களும், புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குகிறார்கள். அது எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. சிறைச்சாலையில் தனிமையைப் போக்க சிறந்த நண்பர்கள் புத்தகங்கள்தான். `கள ஆய்வில் முதல்வர்' என்ற திட்டத்தை தொடங்கி வைத்து ஆய்வை மேற்கொண்டுவருகிறேன்.
அதிகாரிகள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பது தெரிந்து மகிழ்ச்சியடைந்தேன். ஒரு சில இடங்களில் சுணக்கம் இருந்தாலும், அது அப்போதே களையப்பட்டது. யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் இந்த ஆய்வுப் பணியை தொடங்கவில்லை. அனைத்தும் சிறப்பாகச் செயல்படுகிறது என்ற மனநிறைவை நான் பெறுவதற்காகவே இந்த ஆய்வுப் பணியை செய்து வருகிறேன்.
புதுமைப்பெண் கல்வித் திட்டத்தின் பயன்களை மாணவிகள் உணர்வதை என்னால் கவனிக்க முடிகிறது. உதவித்தொகை பெற வரும் மாணவிகளின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்தேன். இந்தத் திட்டம் எத்தனையோ மாணவிகளின் வாழ்வில் கலங்கரை விளக்கமாக அமைந்திருக்கிறது. தலைமுறை தலைமுறைக்கும் இந்தத் திட்டம் பயனளிக்கும் திட்டமாக அமையும்.
தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுடச் சொல்லிவிட்டு, டிவி-யை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று பொய் சொன்னாரே அந்த எடப்பாடி பழனிசாமிதான், `பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து தி.மு.க வெற்றி பெற்றுவிட்டது' எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். அவர் அப்படித்தான் பேசுவார். தி.மு.க அளித்த வாக்குறுதிகளில் 85 சதவிகிதம் நிறைவேற்றியிருக்கிறோம். சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றிருக்கிறோம். மீதம் இருக்கக்கூடிய திட்டங்களை அடுத்த ஓராண்டுக்குள் நிறைவேற்றுவோம்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதிலிருந்து, யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லாமல் மணிக்கணக்கில் பேசுவது எப்படி என்பதை நான் தெரிந்துகொண்டேன். பா.ஜ.க ஆட்சிமீதும் பிரதமர்மீதும் வைக்கப்பட்ட எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதில் சொல்லாமல், நாட்டு மக்கள் தனக்கு கவசமாக இருக்கிறார்கள் என்று அவராகச் சொல்லிக் கொள்கிறார்.
வார்த்தை ஜாலங்கள்தான் அவருடைய உரையில் இருந்ததே தவிர, பிபிசி ஆவணப்படம் குறித்தோ, அதானி விவகாரம் குறித்தோ விளக்கம் அளிக்காமல், நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்ற எந்த வரிசைப்படுத்துதலும் இல்லாமல் பேசியிருக்கிறார். சேது சமுத்திர திட்டம், நீட், மாநில உரிமைகள், ஆளுநரின் தலையீடுகள், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் ஒப்புதல் அளிக்காதது என எத்தனையோ கேள்விகளை தி.மு.க உறுப்பினர்கள் கேட்டதற்கு, பிரதமர் இறுதிவரை பதிலளிக்கவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டுக்குச் சொல்ல பிரதமரிடம் எதுவும் இல்லை.
`தி.மு.க ஆட்சியைக் கலைத்த காங்கிரஸுடன் கூட்டணி வைக்கலாமா?' என பிரதமர் கேட்கிறார். பா.ஜ.க ஆட்சியைக் கலைத்த அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்திருக்கும் பிரதமர் இதைக் கேட்கலாமா... ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கித் தற்கொலை செய்துகொள்பவர்களின் செய்திகள் தினந்தோறும் வந்தவண்ணம் இருக்கின்றன. இதெல்லாம் தமிழ்நாட்டு ஆளுநருக்கு தெரியவில்லையா... இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் அவர் கையொப்பமிடுவார் அவர்?
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதின்படி, ஒருமனதாக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றி அனுப்பப்பட்டதற்கு மூன்று மாதங்களாக கையொப்பமிடாமல் இருப்பது மர்மமாக இருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால்... ஆன்லைன் ரம்மி விளையாடி வெற்றி பெறும் பணத்துக்கு வரி போடுகிறது மத்திய அரசு. தமிழ்நாட்டுக்காக அறிவித்த ஒரே திட்டம் எய்ம்ஸ் மருத்துவமனைதான். அதைக் கட்டுவதற்குக்கூட இவர்கள் நிதி ஒதுக்கவில்லை என்பதன் மூலம் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லையா?
அதானி குழுமத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பா.ஜ.க அரசின்மீதான நேரடியான குற்றச்சாட்டுகள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிமன்ற அமர்வு இந்த விவகாரத்தை விசாரிக்கிறது என்றால், இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். ராகுல் காந்தி கேட்ட அனைத்துக் கேள்விகளும் ஆணித்தரமானவை. ஆனால், அதற்கான ஒரு வார்த்தைக்குக்கூட பிரதமர் மோடி பதிலளிக்காதது அதிர்ச்சியாக இருக்கிறது.
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே போன்றோரின் பேச்சுகளை நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கியது, நாடாளுமன்ற ஜனநாயகச் செயலுக்கு எதிரானது. அவைக்குறிப்பிலிருந்து வேண்டுமானால் அவற்றை நீக்கலாம். மக்களின் மனங்களிலிருந்து நீக்க முடியாது.
அமலாக்கத்துறைதான் எதிர்க்கட்சிகளை இணைத்திருக்கிறது என பிரதமர் கூறியிருப்பது, அமலாக்கத்துறை எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலம். எதிர்க்கட்சிகள் பழிவாங்கப்படுகிறார்கள் என நாடாளுமன்றத்தில் முதன் முதலாக பிரதமர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இது நாட்டுக்கும் நல்லதல்ல, தன்னாட்சி அமைப்புக்கும் நல்லதல்ல, ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல் என இதற்கு முன்பு நடந்த அனைத்து தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட்ட சின்னம்தான் இரட்டை இலை என்பதை மறந்து விடக்கூடாது. தங்கள் இருப்பை காண்பித்துக் கொள்வதற்காக வீண் அவதூறுகளை யார் சொன்னாலும், அவற்றை நான் பொருட்படுத்துவதுமில்லை, அதற்கு நான் பதில் அளிப்பதுமில்லை" என கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்.
from India News https://ift.tt/9XMmohG
0 Comments