ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற குழப்பத்துக்கிடையில், அ.தி.மு.க பொதுக்குழு ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் `அ.தி.மு.க சார்பில் ஒree வேட்பாளர் நிற்கவேண்டும்' என்றும், `எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளருக்கு ஆதரவு தரவேண்டும் என ஓ.பி.எஸ்ஸுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும்’ தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ``கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அ.தி.மு.க போட்டியிடுகிறது. எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு கூட தொலைபேசியில் என்னை அழைத்து 31-ம் தேதி வரை நான் காத்திருக்கிறேன், அதன்பிறகு நான் வேட்பாளரை அறிவிக்கப் போகிறேன் என்று சொல்லி அறிவித்தார். அதேபோல ஓ.பி.எஸ்ஸும், `எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவித்திருக்கிறார், அதனால் நானும் அறிவிக்கின்றேன்’ என்று சொல்லி வேட்பாளரை அறிவித்தார்.
எல்லா நேரத்திலும் பா.ஜ.க-வின் உறுதியான நிலைப்பாடு, நம்முடைய கூட்டணி கட்சியினுடைய கட்சி பிரச்னையில் எப்பொழுதுமே தலையிட மாட்டோம் என்பதுதான். ஒரு வேட்பாளரை நிறுத்துவது தான் முறை. அதனால் ஓ.பி.எஸ்ஸுக்கு நாங்கள் ஒரு வேண்டுகோள் வைத்தோம். வேண்டுகோள் என்னவென்றால் கட்சியினுடைய நலனுக்காக, தமிழக மக்களுடைய நலனுக்காக நாம் அனைவருடன் இணைந்து ஒரு வேட்பாளர்... குறிப்பாக எடப்பாடி பழனிசாமியினுடைய வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்றோம். சில நிபந்தனைகளையும் ஓ.பி.எஸ் சொன்னார். எங்களுடைய ஒரே நோக்கம் ஒரு வேட்பாளர், குறிப்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும்.
22 மாதங்களாக தி.மு.க-வின் ஆட்சி மக்கள் மன்றத்தில் மிகப்பெரிய அவப்பெயரைச் சம்பாதித்து இருக்கிறது. இப்பவே பணபலம், படைபலம் எல்லாத்தையுமே ஈரோடு கிழக்கு தொகுதியில் இறக்கி விட்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியிடமும், ஓ.பி.எஸ்ஸிடமும் தேர்தல் அறிவித்த உடனே பா.ஜ.க நிற்கப்போவது கிடையாது என்று சொல்லிவிட்டோம். இந்தப் பிரச்னையை சரிசெய்து ஒரு வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும். அதனால் இன்று மாலைக்குள் நல்ல முடிவுகள் வரும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கு.
கட்சியினுடைய பிரச்னையை அவர்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுடைய பிரச்னை. அதற்கும் பா.ஜ.க-வுக்கும் சம்பந்தமில்லை. கூட்டணி கட்சியினுடைய வேட்பாளர் வெற்றி பெற எங்களால் என்ன உழைக்க முடியுமோ சக்திக்கு மீறி உழைக்கப்போறோம். காரணம் கூட்டணி.
நேற்று அதனால்தான் சி.டி.ரவிக்கு இதையெல்லாம் சொல்லவில்லை. அவருடைய தாய்மொழி கன்னடம். அதனால் தான் அறிக்கையை ஆங்கிலத்தில் படித்தார். தெளிவாக சொல்லிவிட்டு போய்விட்டார். அறிக்கையோடு நிறுத்திக்கிட்டாங்க. இதுதான் நிலைப்பாடு என்று. அதன் பிறகு என்னுடைய பயம் என்னவென்றால், இரண்டு கட்சிகளுமே இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் கொடுக்கிற அறிக்கைகள். என்ன பேசினோம், என்ன நடந்தது என்றே தெரியாமல் நிறையபேர் கருத்துகளைச் சொல்ல ஆரம்பிக்கிறாங்க" என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து பேசிய அண்ணாமலை, ``வேலைப்பளு மறுபடியும் அதிகரித்திருக்கிறது. அகில இந்திய தலைவர் பொறுப்பு கொடுத்திருக்கிறார். மே மாதத்தில் தேர்தல் வரவிருக்கிறது. பா.ஜ.க மறுபடியும் அங்கு வெற்றி வாய்ப்பை கொண்டுவரும்" என்றார்.
from India News https://ift.tt/YkrpUI1
0 Comments