கருத்து மோதல்: "நம் நடவடிக்கை நம்மையோ, மதத்தையோ வெறுக்கும்படி இருக்கக் கூடாது" - தாலிபன் அமைச்சர்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கான கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக்கிவருகிறார்கள். முகம் முதல் கால் வரை மறையும்படி பர்தா அணிய வேண்டும், ஆண்கள் துணையில்லாமல் பயணிக்கக் கூடாது, செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் நிகழ்ச்சி நேரலையில்கூட பர்தா அணிய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தாலிபன் அரசு விதித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் பெண்கள்

இதற்கெல்லாம் மேலாக, பெண்கள் கல்வி தொடரவும் ஆப்கனில் தடைவிதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில், கல்வி நிலையங்களில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் தொடர்பாக ஆலோசனை செய்து, பின்பு பெண்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறி பெண்களுக்கான கல்வி தடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. அதைத் தொடர்ந்து, தாலிபன் அமைப்புக்குள் சலசலப்பு ஏற்பட்டதாகப் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தாலிபன் அமைச்சர் ஒருவரின் பேச்சால் இந்த சலசலப்பு பொதுவெளிக்கு வந்திருக்கிறது. சமீபத்தில் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆப்கான் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி, "அதிகாரத்தை ஏகபோகமாக மாற்றுவதும், ஒட்டுமொத்த அமைப்பின் பெயரைச் சிதைப்பதும் நமக்கு நன்மை தராது. குறிப்பாக இது (பெண் கல்விக்கு தடை விதிப்பது) பொறுத்துக்கொள்ள முடியாதது. ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருப்பதன் மூலம் நமக்கு பொறுப்புகள் கூடியிருக்கின்றன.

உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி

பொறுமையுடனும், நல்ல அணுகுமுறையுடனும் நாம் நடந்துகொள்வது மிக முக்கியம். மக்களோடு நெருங்கிப் பழகி, அவர்களின் காயங்களைப் போக்க வேண்டும். அதற்கு மாறாக நமது நடவடிக்கை நம்மையோ, நமது மதத்தையோ வெறுக்கும்படியாக இருக்கக் கூடாது" என மறைமுகமாக தாலிபன் ஆட்சியை விமர்சித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, சிராஜுதீன் ஹக்கானி பேச்சு குறித்து கருத்து தெரிவித்த தாலிபன் அரசின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித், "கருத்து வேறுபாடுகள் இருப்பது தவறில்லை. ஆனால், அதைப் பொதுவெளியில் சொல்வது தவறு" என்று தெரிவித்திருக்கிறார்



from India News https://ift.tt/Eufw2XD

Post a Comment

0 Comments