ஈரோடு கிழக்கு தாெகுதிக்கான இடைத்தேர்தலில் கடந்த 31-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டது. 83 வேட்புமனுக்கள் பெறப்பட்டதில், 6 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால், 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது நேற்று இரவு உறுதியானது. இந்த வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது.
100க்கும் மேற்பட்ட சின்னங்களை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்த நிலையில், ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுக்கு தேவையான சின்னங்களை தேர்வு செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளித்தனர். இந்த தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் போட்டியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியதால், அவர்களது குக்கர் சின்னத்தை பெறுவதற்கு சுயேச்சை வேட்பாளர்களிடம் போட்டி ஏற்பட்டது.
குக்கர் சின்னத்தை பெறுவதற்காக 4 சுயேச்சைகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து 4 சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்களையும் சீட்டு குலுக்கி போட்டதில் கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கே.பி.எம்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.
தற்போது 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களில் பெரும்பாலான சுயேச்சைகள் இந்த தொகுதிக்கும், மாவட்டத்துக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் ஆவார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்துவதில் சிக்கல்!
77 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ள நிலையில், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 பேரின் சின்னங்களும், ஒரு நோட்டாவுக்கான பட்டனும் இருக்கும். எனவே 77 சின்னங்களுடன், நோட்டாவுக்கான பட்டனும் இருக்க வேண்டும். எனவே ஒரு வாக்குச்சாவடியில் 6 வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களை பொருத்த வேண்டும். 5 வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு 1 கட்டுப்பாடு கருவி பொருத்தப்படுகிறது. மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் 1,428 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூடுதலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், வாக்கு எண்ணிக்கையில் கால தாமதம் ஏற்பட்டு, தேர்தல் முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கூடுதலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியில் இருந்து தேவைப்படும் அளவில் எடுத்துச் செல்லப்பட்டு, அவற்றை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு அந்த இயந்திரங்களையும் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
சுயேச்சைகளின் அதிக அளவில் மனுதாக்கல் செய்ய என்ன காரணம்?
கடந்த 1996-ல் மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தேர்தலில் கள் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் சுயேச்சையாக வேட்புமனுத்தாக்கல் செய்தனர். அந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாததால், வாக்குச்சீட்டில் முத்திரை பதிக்கும் முறையே கையாளப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிட்டதால் வாக்குச்சீட்டு புத்தக வடிவில் அச்சிடப்பட்டிருந்தது. அந்த தேர்தலில் ஒரு வாக்கு கூட வாங்காத சுயேச்சை வேட்பாளர்களும் இருந்ததுதான் வினோதம்.
அந்த தேர்தல் நடைபெற்ற போது வேட்பாளர்களில் பட்டியல் இனத்தவர்களுக்கு ரூ.250-ம், மற்றவர்களுக்கு ரூ.500 மட்டுமே டெபாசிட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. டெபாசிட் கட்டணம் குறைவாக இருந்ததால் தான் ஆயிரக்கணக்கானோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்று கருதிய தேர்தல் ஆணையம், டெபாசிட் கட்டணத்தை பல மடங்காக உயர்த்தி பட்டியல் இனத்தவர்களுக்கு ரூ.5,000 என்றும், மற்றவர்களுக்கு ரூ.10,000 என்றும் நிர்ணயம் செய்தது. டெபாசிட் கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் விளம்பரத்துக்காக மனுதாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது.
டெபாசிட் கட்டணத்தை உயர்த்தி 27 ஆண்டுகளாகிறது. தற்போது, நடைமுறையில் உள்ள டெபாசிட் கட்டணத்தை எளிதில் கட்டி விடுவதால். வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
from India News https://ift.tt/7bvudnT
0 Comments