சேலம் மாவட்டம் திருமலைகிரியில் பட்டியலின இளைஞர் கோயிலில் நுழைந்ததைக் கண்டித்து, அவரை அவதூறாகப் பேசிய தி.மு.க முன்னாள் ஒன்றியச் செயலாளர் மாணிக்கம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவருக்கு நிபந்தனை பெயரில் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே, ஜாமீன் வழங்கியிருப்பது விவாதமாகி இருக்கிறது.
என்ன நடந்தது?!
ஜனவரி 26-ம் தேதி, சேலம் மாவட்டம், திருமலைகிரியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் ஒருவர், அந்தப் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்ததாகக் கூறி, மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர், "நீ ஏன்டா கோயிலுக்குள் போன, உங்களை எல்லாம் உள்ளே வரக் கூடாது எனச் சொல்லியிருக்கிறோம்ல" எனச் சொல்லி அடிக்க வந்திருக்கின்றனர்.
அடுத்த நாள் இது தொடர்பாக, தி.மு.க மாவட்டச் செயலாளர் மாணிக்கம், பட்டியலின இளைஞரை அழைத்து விசாரித்திருக்கிறார். அப்போது, அவர் பேசிய வீடியோதான் சமூகவலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில், சில ஆபாச வார்த்தைகளை அடுக்குகிறார்.
பின்பு, ``உன்னை யாருடா கோயிலுக்குள் போகச் சொன்னது, மேளம் அடிக்கற நீங்க கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று எத்தனை முறை சொல்வது?” எனக் கூறி நெஞ்சில் தாக்கியிருக்கிறார். அப்போது பட்டியலின இளைஞர் மற்றும் அவர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கின்றனர். அப்போது கூட, “இனி கோயிலுக்குள் நுழையக் கூடாது. அதையும் மீறி நுழைந்தால் கொலைசெய்துவிடுவோம்” என மிரட்டல் விடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவ, இது பேசுபொருளானது.
இவருக்கு எதிராகப் பட்டியலின இளைஞர் சார்பாகப் புகார் கொடுக்கப்பட்டது. அதில் இரண்டு நாள்களாகக் கடுமையான அச்சம் இருந்ததன் காரணமாக வழக்கு இரண்டு நாள்கள் கடந்து தொடுப்பதாக பட்டியலின இளைஞர் கூறியிருக்கிறார். இதன் அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் மூன்று பிரிவிலும் வழக்கு பதியப்பட்டது.
இந்தக் காணொளி பரவத் தொடங்கியதும், தி.மு.க நிர்வாகியான மாணிக்கம், அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சிப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்த நிலையில், நீதிமன்றம் மாணிக்கத்துக்கு நிபந்தனையுடன் பெயில் வழங்கியிருக்கிறது. குறிப்பாக, 30 நாள்களுக்கு ஊருக்குள் நுழையக் கூடாது என்றும், காலை மற்றும் மாலையில் காவல் நிலையத்தில் கையொப்பம் போட வேண்டும் என்னும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கு பதிவுசெய்த பட்டியலின இளைஞரை தொடர்புகொண்டு பேசினோம். அவர், "மிரட்டியதாகப் புகார் கொடுத்தது உண்மைதான். ஆனால், நீதிமன்றம் செல்வதற்கு முன்பு சமாதானம் பேசப்பட்டது” எனக் கூறினார். இதனால், அரசியல் மற்றும் செல்வாக்கு என எல்லா வகையிலும் ஆதிக்கம் உள்ள ஒருவரை குற்றப்பத்திரிகை போடுவதற்கு முன்பு ஜாமீனில் விடுவிப்பது சரியானதல்ல எனச் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக எவிடன்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர் பேசியதாவது, ”தி.மு.க நிர்வாகி அந்தக் குடும்பத்தை மிரட்டியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்களின் பெற்றோர் புள்ள மாதிரி நினைத்து அவர் திட்டியதாகக் கூறுகிறார்கள். உண்மையாக ஒரு புள்ளையை இப்படித்தான் திட்டுவார்களா... நியாயத்தை தட்டிக் கேட்டதாகச் சொல்கிறார்கள். ஆபாச வார்த்தைகளால் மட்டும்தான் தட்டிக் கேட்க முடியுமா... இவர்களைச் சமாதானம் செய்ய பேரம் நடந்திருக்கிறது. மேலும், இவரைக் கைது செய்யக் கூடாது என பட்டியலின மக்களே போராடும்படி தூண்டியிருக்கின்றனர். பணம், அரசியல், சாதி என மூன்றிலும் செல்வாக்கு உடைய ஒருத்தரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஜாமீனில் வெளியிடுவது ஆபத்து என அரசு சார்பாக நீதிமன்றத்தில் எடுத்துக் கூறப்படவில்லை. அதேபோல், பாதிக்கப்பட்டவர்கள் வார்த்தையை மட்டுமல்லாது, அவர்கள் சூழலையும் நீதிமன்றம் பார்க்க வேண்டும். குறிப்பாக, சாட்சிகளை மிரட்டுவாரா... தடையத்தை அழிப்பாரா... மீண்டும் அதே குற்றத்தைத் தொடருவாரா... என்பதில் உறுதிசெய்த பின்பு ஜாமீன் வழங்க வேண்டும்.
அதேபோல், அந்த அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமையில் அழைத்து ரகசிய விசாரணை நடத்தியிருக்கலாம். அப்போது அவர்கள் உண்மையைச் சொல்லுவார்கள். இந்தச் சம்பவம் நடந்த சில நாள்கள் கடந்து அந்த இளைஞரைத் தொடர்புகொண்டு பேசினேன். அவர்கள் மிரட்டியதாக அவன் சொன்னான். ஆனால், சில நாள்களாக அவனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களுக்கு அழுத்தம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதேபோல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவாகியிருக்கும் பட்சத்தில், அந்த இடத்துக்கு கலெக்டர், எஸ்.பி நேரில் செல்ல வேண்டும். அப்படி யாரும் அங்கு சென்றதாகத் தெரியவில்லை. இப்போது இவருக்கு கிடைத்திருக்கும் ஜாமீன், இனி பட்டியலின மக்களை ஆபாசமாகத் திட்டலாம் பிரச்னை இல்லை என்னும் எண்ணத்தை உண்டாக்கும். ஒரு சட்டம் என்பது குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தணும், ஆனால், இங்கு தலைகீழாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. இது தமிழக அரசின்மீது சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது" என்றார்.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பேசியதாவது, ”தி.மு.க ஒரு கட்சியாக, இதில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. குறிப்பாக, அவரை இடைநீக்கம் செய்தார்கள். அதேபோல், ஜாமீன் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இது அவரின் அடிப்படை உரிமை, அதுவும் நிபந்தனையுடன்தான் ஜாமீன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதும் வெளிப்படையாகத் தெரிந்தது. குறிப்பாக அந்த இளைஞரின் பெற்றோர், `மாணிக்கம் அப்படி சாதிரீதியிலாகப் பேசவில்லை’ என்று சொல்வதும் அச்சுறுத்தலால்தான். அந்த வகையில் மாணிக்கம் எல்லா நிலையிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர் என்பதை காவல்துறை உணர்ந்து நீதிமன்றத்தில் கூறியிருந்தால், ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இதில் காவல்துறை சார்பாக என்ன சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை.
பொதுவாக, விசாரணை முடியும் வரையிலும் அவருக்கு ஜாமீன் கொடுக்காமல் இருக்க முயற்சி செய்வார்கள். ஆனால், இதில் நிபந்தனையுடன்தான் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்கலாம். காரணம், தி.மு.க என்னும் கட்சியே, தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்திய நீதிக்கட்சி, திராவிட இயக்கங்களின் நீட்சிதானே. 2024-ம் ஆண்டு பவள விழா கொண்டாட இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி இப்படி பேசியிருப்பதை ஏற்க முடியாதது” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், ”இன்று பல கட்சிகள் கொள்கைப் பற்றாளராக ஒருவர் இருக்க வேண்டும் என்பதை மாற்றி செல்வாக்கு, பணம் இருக்கும் காரணங்களுக்காகவும் கட்சியில் இணைத்துக்கொள்கிறார்கள். அப்படி இணைக்கப்பட்டவர்களுக்கு சில நாள்களில் பதவியும் வழங்கப்படுகிறது. இது கட்சியின் கொள்கை அடிப்படையில் கொடுக்கப்பட்ட பதவியாக இருக்காது. மாறாக அவரின் செல்வாக்குக்காக மட்டுமே கொடுக்கப்பட்டதாகும். அந்த அடிப்படையில் வந்தவர்களிடம் எப்படி கட்சியின் கொள்கையை எதிர்பார்க்க முடியும். ஆகவே, கட்சியில் இணையும் நிர்வாகிகளுக்கு அவர்கள் கட்சியின் கொள்கை குறித்த தெளிவை கொடுக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இது கட்சி சார்ந்த கொள்கைகள் மட்டுமல்ல, மற்ற அடிப்படைச் சட்டம் குறித்தும் சொல்ல வேண்டும். இதை மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
கடந்த 2001-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி செய்த காலகட்டத்தில் தலைமைச் செயலாளர்கள் தொடங்கி தாசில்தார் வரையிலும் வன்கொடுமைச் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை தமிழக அரசிடம் வைத்திருக்கிறோம். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் கூறினார். தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி ஒடுக்குமுறைச் சம்பவங்கள் நடக்கிறது. இதைத் தடுக்க பயிற்சிக்கான வேகத்தை இந்த நிகழ்வு துரிதப்படுத்தியிருக்கிறது" என்றார்.
இது தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசியதாவது, "தி.மு.க-வில் ஒரு கோடி பேர் தொண்டர்களாக இருக்கின்றனர். ஒரு சில நிகழ்வுகளை வைத்துக்கொண்டு அனைவரையும் குற்றம் சொல்லிவிட முடியாது. அதேபோல், இது எல்லா கட்சிகளிலும் இருக்கும் பிரச்னைதான். பல ஆண்டுகளாக சாதிய பார்வை கொண்டவர்கள் மாற்றமடைய சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். அமெரிக்காவில், 1863-ம் ஆண்டு இன வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும், 2020-ம் ஆண்டு ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்டு என்பவர் காவலரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்.
வளர்ச்சியடைந்த அமெரிக்க நாட்டில் இந்த நிலை என்றால், இந்தியாவில் மாற்றங்கள் வர சில ஆண்டுகள் தேவைப்படும். மேலும், நாங்கள் ஆட்சியில் இருந்தபோதும், எங்கள் கட்சிக்காரர் தவறு செய்ததால் அவரை சிறையில் அடைத்தோம். வேறு எந்த ஆட்சியிலும் இது நடக்காது. தவிர, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எடுத்துரைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அது தமிழக அரசால் நிறைவேற்றப்படும்" என்றார்.
from India News https://ift.tt/5yMx06f
0 Comments