ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அ.தி.மு.க தரப்பில் வேட்பாளரை தேர்வு செய்து, தேர்தல் ஆணையத்தில் விவரங்களை சமர்பிக்க வேண்டிய பொறுப்பு, எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு சென்றிருக்கிறது. இதையடுத்து, வேட்பாளர் விவரங்கள் கொண்ட சுற்றறிக்கையை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி, ஒப்புதல் பெறுகின்ற பணியை தமிழ்மகன் உசேன் தொடங்கிவிட்டார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``உச்ச நீதிமன்ற ஆணைப்படி எல்லோருக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. இமெயில், வாட்ஸ்அப் , ஸ்பீடு போஸ்ட் மூலமும், தலைமைக் கழக பணியாளர்கள் மூலமும் நேரடியாக கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 100 சதவிகிதம் இந்தப் பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஓ.பி.எஸ் தரப்புக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது. அவர்கள் பரிந்துரைத்த வேட்பாளரை வாபஸ் பெறுவது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது.
அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க-வும் இருக்கிறது. இடைத்தேர்தலைப் பொறுத்தவரை 7-ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள். அதற்குள் பா.ஜ.க அதன் நிலைப்பாட்டை அறிவிக்கும். ஓ.பி.எஸ் இரட்டை இலையை ஆதரிப்போம் எனச் சொல்கிறார். உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் வழிமுறையின்படிதான் அ.தி.மு.க எல்லோருக்கும் அந்தக் கடிதத்தை முறையாக அனுப்பியிருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஓ.பி.எஸ் பிரசாரம் செய்தால் ஒப்புக்கொள்வதா... வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது கட்சி. நான் கிடையாது.
பா.ஜ.க, அ.தி.மு.க-வின் இருதரப்பும் ஒன்றிணைய வேண்டும் என்று சொல்கிறது. கூட்டணியில் இருப்பதால் சில கருத்துகளை அவர்கள் சொல்லலாம். கருத்துகளைச் சொல்லக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. கருத்துகள் சொல்வது வேறு, தலையீடு என்பது வேறு. ஆனால், அந்த கருத்துகளை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் கட்சியின் விருப்பம்" என்றார்.
from India News https://ift.tt/e0KGatj
0 Comments