2024 -ம் வருடம் பொது தேர்தல் நடைபெற உள்ளதை எதிர்கொள்வதற்காக பாஜக இப்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் மக்கள் தொகையில் பாதி அளவுக்கு உள்ள பெண் வாக்காளர்களை கவரும் விதமாக பாஜக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் பல திட்டங்களின் மூலம் பயனடைந்த ஒரு கோடி அளவிலான பயனர்களை கண்டறிந்து அவர்களோடு செல்ஃபி எடுக்கும் பணி தொடங்கப்படுகிறது.
இது தொடர்பாக பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனை தொடர்பு கொண்டு பேசினோம், “மத்திய அரசாங்க திட்டத்தில் கோடிக்கணக்கான பயனாளிகள் இருக்கிறார்கள். அதில் பெரும் பகுதி பெண்களாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு பத்து கோடி கழிப்பறை, ஒன்பது கோடி உஜ்வாலா கனெக்ஷன், ஜன்தன் வங்கி கணக்கில் 55 சதவீத பெண்கள், மாத்ரவந்தன யோஜனாவில் இரண்டரை கோடி பெண்கள், செல்வ மகள் திட்டத்தில் இரண்டு கோடி பெண் குழந்தைகள் என கோடி கணக்கான பெண்கள் பயனாளிகளாக இருக்கிறார்கள். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து ஒரு கோடி பெண்களிடம் பேசி, பிரதமர் மோடி திட்டத்தின் மூலம் அடைந்த பலனை புரிய வைத்து, அவர்களை செல்ஃபி எடுத்து நமோ ஆப் என்கிற செயலில் பதிவு செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த மாதம் 27-ம் தேதியில் ஆரம்பித்து அடுத்தாண்டு பிப்ரவரி வரை திட்டமிட்டுள்ளோம்.
பா.ஜ.க-வில் முப்பது கோடி பெண்கள் இருந்தால் கூட ஏன் ஒரு கோடி வைத்திருக்கிறோம் என்றால், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு இருபதாயிரம் பெண்கள். அவர்களிடம் பொறுமையா மகளிரணி சார்ந்தவர்கள் பேசி ஒவ்வொருவரையும் கன்வீன்ஸ் செய்து அதன் பின் செல்ஃபி எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த காலக்கட்டம் கொடுத்திருக்கிறோம்.
க்ரூப், க்ரூப்பாக எடுத்தாலும் எந்த திட்டத்தில் பயனடைந்திருக்கிறார்கள் என்பதை குறிப்பிடுகிறோம். இன்று செல்ஃபி எடுக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அந்த ஆர்வத்தை கட்சி ரீதியாக பயன்படுத்த வேண்டும். அதோடு பயனடைந்த பெண்கள் அந்த திட்டம் பற்றி சொல்லும் போது மற்ற பெண்களுக்கும் அதன் பயன் தெரியவருகிறது. தங்களுடைய திட்டத்தில் என்னென்ன திட்டங்களில் பயனடைந்திருக்கிறார்கள் என்று தெரியும் போது நாளை எளிதாக வேலை செய்ய முடிகிறது. எனவே ஒரு தொடர்பை உருவாக்கவும், பிரதமர் இத்தனை திட்டம் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
கட்சி பார்த்து திட்டங்கள் அறிமுகப்படுத்துவதில்லை. எனவே மற்ற கட்சியில் பயனடைந்த பெண்களும் இருப்பார்கள். அவர்களிடம் திட்டம் குறித்து சொல்லி, புகைப்படம் எடுக்கலாமா என்று அனுமதி கேட்போம். அவர்கள் சரி என்று சொன்னால் அவர்கள் புகைப்படம் எடுக்கும் போது, எங்களுக்கும் அவர்களுக்குமான உணர்வு ரீதியான பிணைப்பு ஏற்படுத்துவதாக நினைக்கிறோம். இதன் அடிப்படையில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்தியா முழுவதும் ஒரு பிரச்சார யுத்தியாக கையில் எடுக்கிறோம். இதன் அறிமுக விழா மதுரையில் தொடங்கியிருக்கிறோம். அதற்கும் காரணம், ‘பெண் தலைமை ஏற்கின்ற மாற்றம் முன்னேற்றம்...’ என்று பிரதமர் மோடி பேசுகிறாரோ, அதை தமிழ்நாட்டில் மீனாட்சியுடைய வடிவத்தில் பார்க்கிறோம். அதை தொடர்புப்படுத்துவதற்காக மதுரையில் ஆரம்பித்திருக்கிறோம்” என்றார்.
from India News https://ift.tt/X5gSRQj
0 Comments