உ.பி: தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி - ஆசிரியரின் வெறிச்செயல் அம்பலம்

உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவனம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் யமுனை நதியில் குதித்து தற்கொலை செய்துக்கொள்ள முயன்றிருக்கிறார். அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு மாணவியை காப்பாற்றி வெளியே கொண்டுவந்திருக்கின்றனர். மேலும், அந்த சிறுமியின் குடும்பத்தாருக்கும் தகவல் அளித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து சிறுமியிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்திருக்கிறது.

பாலியல் தொல்லை

சிறுமி, "பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நான் கல்வி கற்க பயிற்சி மையம் செல்கிறேன். பயிற்சி மையத்தின் விருது நிகழ்ச்சி ஒன்றில் நான் குடித்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்திருக்கிறார்கள். அதை குடித்த பின் என் பயிற்சி மையத்தில் ஆசிரியராக இருப்பவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் பிறகு பயிற்சி மையத்தில் இருந்த மற்ற இளைஞர்களும் என்னை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். மேலும், அதை வீடியோவாக பதிவு செய்து அதை காண்பித்து மிரட்டி கடந்த சில வாரங்களில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்கள்.

இது போல அந்த பயிற்சி மையத்தில் படிக்கும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், யாரும் அச்சப்பட்டு வெளியே சொல்லவில்லை. என்னால் அவர்களை சமாளித்துக்கொண்டு வாழ முடியாது. அதனால் தான் தற்கொலைக்கு முயன்றேன்" எனத் தெரிவித்திருக்கிறார். இது பற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் சிறுமியை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர்.

காவல்துறை

ஆனால் காவல்துறை அதிகாரி புகார் பதிவு செய்யாமல், `அவர்கள் கொடுத்த குளிர்பானத்தை நீ ஏன் குடித்தாய்?’ என அந்த புகாரை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினர் ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடியிருக்கிறார்கள். அந்த தொண்டு அமைப்பு, இந்த புகார் பற்றி விசாரிக்கும்படி கோரிக்கை விடுத்திருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/KDTMQBk

Post a Comment

0 Comments