மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் கல்லூரியில் மாணவர்கள் சர்ச்சைக்குரிய மோடியின் பிபிசி ஆவணப்படத்தை ஒரே இடத்தில் கூடி பார்க்கப்போவதாக தெரிவித்திருந்தனர். ஏற்கெனவே நாடு முழுவதும் இந்தப் படத்தை பார்ப்பவர்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டரில் வெளியான இந்த ஆவணப்படத்தை மத்திய அரசு அகற்றிவிட்டது. நாடு முழுவதும் கல்லூரிகளில் மாணவர்கள் இந்தப் படத்தை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வரிசையில், மும்பை கல்லூரி மாணவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து கல்லூரியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. கல்லூரி நிர்வாகம், `இந்தப் படத்தை ஒரே இடத்தில் ஒட்டுமொத்தமாக கூடி பார்க்கவேண்டாம்' என்று எச்சரிக்கை செய்திருந்தது.
ஆனால், மாணவர்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்தனர். இதனால் பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி உட்பட பா.ஜ.க-வினர் சிலர் பிபிசி படத்தை ஒரே இடத்தில் கூடி பார்க்க எதிர்ப்பு தெரிவித்து கல்லூரிக்கு வெளியில் போராட்டம் நடத்தினர். அவர்களிடம், `ஒரே இடத்தில் கூடி பிபிசி-யின் சர்ச்சைக்குரிய படத்தைப் பார்க்க அனுமதிக்கமாட்டோம்' என்று போலீஸார் சொன்னதால், பா.ஜ.க-வினர் கலைந்து சென்றனர். மும்பை பா.ஜ.க தலைவர் அசிஷ் ஷெலாரும் மாணவர்கள் மீது போலீஸார் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது குறித்து மாணவரணி தலைவர் பிரதிக் , ``நாங்கள் பிபிசி படத்தை திரையிட முடிவு செய்யவில்லை. இதற்கு முற்போக்கு மாணவர் அமைப்புதான் ஏற்பாடு செய்திருந்தது" என்று தெரிவித்தார்.
கல்லூரி நிர்வாகமும் ஒரே நாளில் இரண்டு முறை மாணவர்களிடம் சர்ச்சைக்குரிய படத்தைப் பார்க்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. அதோடு படத்தைப் பார்க்க திரை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. இது போன்ற செயல் கல்லூரியின் அமைதியை சீர்குலைக்கும் என்பதால், இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. ஆனால், அதையும் மீறி இரவு 7 மணிக்கு மேல் பிபிசி-யின் படத்தை மாணவர்கள் தங்களுக்குள் கியூஆர் கோடை பகிர்ந்து கொண்டு, அதன் மூலம் தங்களது லேப்டாப், மொபைல் போனில் பார்த்தனர்.
10 லேப்டாப்களில் 200 மாணவர்கள் கல்லூரியில் ஆங்காங்கே அமர்ந்து பார்த்ததாக, அதற்கு ஏற்பாடு செய்த சிவானந்தன் என்ற மாணவர் தெரிவித்திருக்கிறார். `மாணவர்கள் தங்களது தனிப்பட்ட லேப்டாப், மொபைல் போனில் பார்த்திருக்கலாம். ஆனால், அதனை கண்காணிக்க முடியாது' என்று கல்லூரி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தால் கல்லூரியில் காலையிலிருந்து இரவு வரை பரபரப்பு தொற்றிக்கொண்டது.
from தேசிய செய்திகள் https://ift.tt/nMxesGP
0 Comments