காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியால் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட பாரத் ஜோடோ யாத்திரை கிட்டத்தட்ட அதன் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த யாத்திரையில் கடைசி மாநிலமாக வரும் வெள்ளிக்கிழமையன்று ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் நுழைகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தீபிகா புஷ்கர் நாத், கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தீபிகா புஷ்கர் நாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``சவுத்ரி லால் சிங் பாரத் ஜோடோ யாத்ராவில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதையடுத்து காங்கிரஸ் அதற்கு அனுமதியளித்திருக்கிறது. அதனால், கட்சியிலிருந்து நான் ராஜினாமா செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
2018-ம் ஆண்டில் கதுவா பாலியல் வன்கொடுமை வழக்கில் பாலியல் வன்கொடுமையாளர்களைப் பாதுகாத்து, வழக்கை சீரழித்ததற்குக் காரணமாக இருந்தவர் லால் சிங். பாலியல் வன்கொடுமையாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரையும் லால் சிங் துண்டாக்கினார்.
தத்துவார்த்த ரீதியாக பாரத் ஜோடோ யாத்திரை இதற்கு முற்றிலும் எதிர்மாறானது. எனவே தத்துவார்த்த அடிப்படையில் அத்தகைய நபருடன் என்னால் மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கதுவா பாலியல் வன்கொடுமை விவகாரமும், லால் சிங்கும்!
ஜம்மு காஷ்மீரின் மனித உரிமை வழக்கறிஞரான தீபிகா புஷ்கர் நாத், 2018-ம் ஆண்டு கதுவாவில் எட்டு வயது சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்ட வழக்கை கையிலெடுத்தார். ஆனால் அப்போதைய பா.ஜ.க-பிடிபி கூட்டணி ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்த லால் சிங், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தின் பின்னணியில் லால் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. பின்னர் 2019-ல் பா.ஜ.க-விலிருந்து விலகிய லால் சிங், டோக்ரா ஸ்வாபிமான் சங்கதன் கட்சி (டி.எஸ்.எஸ்.பி) என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். இவர் ஏற்கெனவே 2014-ல் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/3dMXRkU
0 Comments