``பாஜக-வின் நோக்கம் வாக்கு வங்கி அரசியல் அல்ல... வளர்ச்சி!" - கர்நாடகாவில் பிரதமர் மோடி பேச்சு

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதத்துக்குள் தேர்தல் நடக்கவிருப்பதால், பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என அனைத்துக் கட்சியினரும், தீவிர பிரசாரத்தில் களமிறங்கியிருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் தேசியத் தலைவர்கள், ‘ஷெட்யூல்’ போட்டு, கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து, வாக்குச் சேகரித்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கர்நாடகா வந்து சென்ற நிலையில், கடந்த 12-ம் தேதி ஹப்ளி பகுதியில் நடந்த, 26-வது தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

இசைக்கருவி இசைத்த பிரதமர்.

பழங்குடியினரை குஷிப்படுத்திய பிரதமர்!

இந்த நிலையில், இன்று யாத்கிர், காலபுராகி மாவட்டங்களில் இரண்டாவது முறையாக சுற்றுப்பயணம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, சாலைகள், அடிப்படை கட்டமைப்புகளுக்காக, 10,800 கோடி ரூபாய்க்கான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். ‘கல்யாண கர்நாடக’ என அழைக்கப்படும் பிதார், யாத்கிர், ராய்ச்சூர், கொப்பல், காலபுராகி, பல்லாரி, விஜயநகரம் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த, 51,000 பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி, பழங்குடியின பெண்களிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

அதைத் தொடர்ந்து, பழங்குடியின மக்களை கவரவும், அவர்களை குஷிப்படுத்தவும், பழங்குடியின மக்களின் பாரம்பர்ய இசைக்கருவியை இசைத்து, அவர்களிடம் பேசினார். இதில், முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

‘டபுள்இன்ஜின்’, ‘டபுள்’ வளர்ச்சி...

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘பா.ஜ.க அரசாங்கத்தின் நோக்கம் வாக்கு வங்கி அரசியல் அல்ல; வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி... ‘டபுள் இன்ஜின்’ அரசாங்கம் இருக்கும்போது, ‘டபுள்’ வளர்ச்சி இருக்கும். இதை, நீங்கள் கர்நாடக மாநிலத்தில் காணமுடியும். ‘டபுள் இன்ஜின்’ அரசாங்கம் நுண்ணீர் பாசன திட்டத்தை வலுப்படுத்துவது, நீராதாரங்களை காப்பதுடன், ஒவ்வொரு வீட்டிலுள்ள மக்களுக்கும் போதிய நீரை வழங்கி வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி

கர்நாடகத்தை ஆட்சி செய்த மற்ற கட்சியினர், யாத்கிர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் கைகழுவி விட்டனர். வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டிய நேரத்தில், வாக்கு வங்கி அரசியலிலுக்கான பணியை மேற்கொண்டு வந்தனர். வளர்ச்சியில் நாட்டின் ஒரு மாவட்டம் பின்தங்கியிருந்தால்கூட, நாடு வளர்ச்சியை அடையாது.

இன்று கர்நாடகத்திலுள்ள, பஞ்ஜரா (பழங்குடியினர்) சமூக மக்களுக்கு முக்கியமான நாள். 50,000 பஞ்ஜரா மக்கள் விரைவில், தங்கள் சொந்த வீட்டில் வசிக்கப்போகிறார்கள். கர்நாடகத்தில் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தும் ‘டபுள் இன்ஜின்’ அரசாங்கத்தால், இந்த மாநிலம் முதலீட்டாளர்களின் விருப்பமான இடமாக மாறியிருக்கிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பஞ்ஜரா பழங்குடியினர்

அடுத்த, 25 ஆண்டுக்காலம் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் அமிர்த காலமாக இருக்கப்போகிறது. இதற்காக, நாம் இந்தியாவை வளர்ந்த நாடாக கட்டமைக்க வேண்டும். விளைநிலங்களில் நல்ல பயிர் சாகுபடி நடந்து, தொழில்கள் விரிவடையும் போது, இந்தியாவை நன்றாக மேம்படுத்த முடியும்’’ என்றார்.

தேர்தல் நெருங்க நெருங்க, ஒவ்வொரு சமூக வாக்கு வங்கியை வலுப்படுத்த, லிங்காயத், ஒக்கலிகா; பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அறிவிப்பு என, பா.ஜ.க-வினர் வியூகம் வகுத்து பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/5UspzmE

Post a Comment

0 Comments