உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2020-ம் ஆண்டில், ஹத்ராஸில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போது இந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்று கைதான கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன், இரண்டாண்டுகளுக்கு மேலாகச் சிறையிலடைக்கப்பட்டிருப்பது இன்றுவரை பேசுபொருளாகவே இருக்கிறது.
மேலும், இந்த விவகாரத்தில், இவருடன் சேர்த்து அண்மையில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் சித்திக் கப்பனுக்கு தொடர்பிருப்பதாகச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA), அமலாக்கத்துறையால் பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) ஆகியவை அவர் மீது பாய்ந்தது. இந்த வழக்கில் பலமுறை ஜாமீன் மறுக்கப்படவே உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வேண்டி சித்திக் கப்பன் மேல்முறையீடு செய்திருந்தார். அதில் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கிலிருந்து சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கியிருந்தது.
ஆனாலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் சித்திக் கப்பன் சிறையிலேயே இருந்தார். இந்த நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றம், பணமோசடி தடுப்புச் சட்ட வழக்கில் சித்திக் கப்பனுக்கு இன்று ஜாமீன் வழங்கியிருக்கிறது. தற்போது இரண்டு சட்டங்கள் தொடர்பான வழக்கிலும் சித்திக் கப்பன் ஜாமீன் பெற்றுவிட்டதால், இரண்டாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு விரைவில் வெளியில் வருவார் என்று கூறப்படுகிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/ZJAuNcg
0 Comments