தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் காரில் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்து நேற்று நள்ளிரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குமுளி மலைச் சாலையில் உள்ள இரைச்சல் பாலம் அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. காரை கட்டுப்படுத்த முடியாததால் இவர்களது கார் சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து வந்த தமிழக-கேரள மாநில போலீஸார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுமார் 50அடி பள்ளத்தில் உள்ள முல்லைப் பெரியாறு நீர் செல்லும் ராட்சத குழாய்களான பென்ஸ்டாக் குழாய்களுக்கு இடையே சிக்கியிருந்த காருக்குள் இருந்த அய்யப்ப பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் சிவக்குமார் (45), வினோத் (43), நாகராஜ் (50), கோபால கிருஷ்ணன் (42), கன்னிச்சாமி, கலைசெல்வன், தேவதாஸ் ஆகிய 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். முனியாண்டி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். ராஜா மற்றும் ஹரிஹரன் என்ற 7 வயது சிறுவன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் உயிரிழந்த ஐயப்ப பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அனைவரது சடலங்கள் பிரேதப்பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து விபத்துக்குள்ளான கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து குமுளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/vjCYdhJ
0 Comments