மும்பை: சொத்துப் பிரச்னை: அம்மாவை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலைசெய்த மகன் கைது!

மும்பை அந்தேரி ஜுகுவில் கல்பதரு என்ற கட்டடத்தில் வசித்தவர் பீனா கபூர் (74). இவர் தன்னுடைய இரண்டாவது மகன் சச்சினுடன் வசித்து வந்தார். சச்சினுக்கு திருமணமாகவில்லை. அவர்கள் வசிக்கும் வீடு யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நாள்களாகப் பிரச்னை இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி சின்ன சின்னப் பிரச்னைகளுக்காக சண்டையிட்டுக்கொள்வதுண்டு என்று கூறப்படுகிறது. பீனாவின் மற்றொரு மகன் நவீன் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் தினமும் தன்னுடைய தாயாருக்கு போன் செய்து பேசுவது வழக்கம். வழக்கம் போல் அவர் தன்னுடைய தாயாருக்கு போன் செய்தபோது, போன் எடுக்கப்படவில்லை. இதனால் நவீன் தனது சகோதரர் சச்சினுக்கு போன் செய்து பார்த்தார்.

ஆனால் அவரும் போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த நவீன் கல்பதரு கட்டடத்தின் வாட்ச்மேனுக்கு தொடர்பு கொண்டு தங்களது வீட்டுக்குச் சென்று பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். வாட்ச்மேன் சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் இது குறித்து வாட்ச்மேன் கட்டடச் செயலாளருக்கு தகவல் கொடுத்தார். அவர் மூலம் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்து கதவை திறந்து பார்த்தபோது உள்ளே யாரும் இல்லை. இதையடுத்து சச்சினை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சச்சின் செக்யூரிட்டி கார்டு மண்டல் துணையோடு வீல் சேரில் மிகப்பெரிய அட்டை பெட்டியை எடுத்துச் சென்றது தெளிவாக பதிவாகியிருந்தது.

கொலை

இதையடுத்து சச்சின் எங்கிருக்கிறார் என்பதை அவரது மொபைல் போன் மூலம் சோதனை செய்ததில், அருகிலுள்ள மெளலி என்ற கட்டடத்தில் இருப்பது தெரியவந்து கைதுசெய்யப்பட்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சஞ்சய் பவார், ``சச்சினிடம் விசாரித்ததில் வீனாவைக் கொலைசெய்து அட்டைப்பெட்டியில் வைத்து மாதேரான் மலைப்பகுதியில் போட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார். அங்கு சோதனை செய்து பார்த்தபோது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. நவிமும்பை கழிமுகப்பகுதியில் போட்டதாகவும் கூறுகிறார். அடிக்கடி இடத்தை மாற்றி கூறிக்கொண்டிருக்கிறார்.

இதனால் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது" என்று தெரிவித்தார். சச்சின் சென்றதாகக் கூறப்படும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராப் பதிவுகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொலை நடந்த அன்று சச்சின் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது கதவை திறக்க பெல் அடித்திருக்கிறார். ஆனால் கதவை திறக்க சற்று தாமதமானதாகத் தெரிகிறது. இதனால் சச்சின் தன்னுடைய தாயாருடன் சண்டையிட்டிருக்கிறார். இந்தச் சண்டையில் தன்னுடைய தாயாரைப் பிடித்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார். அதோடு கிரிக்கெட் மட்டையை எடுத்து அடித்துக் கொலைசெய்திருக்கிறார்.

கைது

பின்னர் வாட்ச்மேன் மண்டல் என்பவரின் துணையோடு உடலை அட்டைப்பெட்டியில் அடைத்து காட்டில் எடுத்துச்சென்று போட்டிருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சச்சின் தந்தைக்கும், பீனாவுக்கும் இடையே கடந்த 2001-ம் ஆண்டு விவாகரத்தாகிவிட்டது. ஆனால் அவர்கள் வசித்த வீட்டுக்கு சட்டபூர்வ வாரிசாக பீனாவை கோர்ட் நியமித்தது. அதே சமயம் அந்த வீட்டில் பீனாவின் கணவர் வசிக்கலாம் என்று உத்தரவிட்டது.

பீனாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் கணவர் இறந்ததிலிருந்து சச்சின் அந்த வீட்டுக்கு உரிமை கோரி வருகிறார். அதோடு அந்த வீட்டில் பீனாவின் கணவர் வசித்த இடத்தில்தான் சச்சின் வசித்து வந்தார். வீனாவின் மற்றொரு மகன் நவீனுடன் வீனா சுமுக உறவில் இருந்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/McudlKr

Post a Comment

0 Comments