மகாராஷ்டிரா, கர்நாடகா இடையே நீண்ட நாள்களாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. கர்நாடகாவிலிருக்கும் பெலகாவி எனப்படும் பெல்காம் உட்பட சில நகரங்களை தங்களது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு கோரி வருகிறது. ஆனால் அவ்வாறு கொடுக்க முடியாது என்று கர்நாடகா கூறி வருகிறது. இந்தப் பிரசனை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் மீண்டும் விஷ்வரூபம் எடுத்திருக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா எல்லைப் பிரச்னை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களான மகாராஷ்டிரா அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் ஆகியோர் இந்த மாதம் 3-ம் தேதி பெலகாவி செல்வதாக அறிவித்திருந்தனர். ஆனால் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது பயணத்தை 6-ம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தனர். அவர்கள் நாளை பெல்காம் செல்லப்போவதாக அறிவித்திருக்கின்றனர். அவர்களுடன் கமிட்டி தலைவர் எம்.பி.தைரியசீல் மானே என்பவரும் செல்கிறார்.
இதனால் கர்நாடகாவில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது. தற்போது பெல்காம் வரவேண்டாம் என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருக்கிறார். எச்சரிக்கையை மீறி வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார். தற்போது நிலைமை சாதகமாக இல்லை என்றும், எனவே வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று பொம்மை எச்சரித்திருக்கிறார். அதோடு கன்னட அமைப்பினர் பெலகாவிக்கு வரும்படி தங்களது உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். பெங்களூருவிலிருந்து 100 வாகனங்களில் கன்னட அமைப்பினர் பெலகாவி நோக்கி விரைந்திருக்கின்றனர். அவர்கள் மகாராஷ்டிரா அமைச்சர்களை பெலகாவிக்குள் வரவிடாமல் தடுத்து போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் பெலகாவியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. பெலகாவி செல்லும் மகாராஷ்டிரா அமைச்சர்கள் பெலகாவியை மகாராஷ்டிராவுடன் இணைக்கக் கோரி போராடும் மகாராஷ்டிரா ஏகிகரண் சமிதி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசவிருக்கின்றனர். மகாராஷ்டிரா அரசு தொடர்ந்து பெலகாவிக்கு உரிமை கோரி வருவதால் மகாராஷ்டிராவில் கன்னடம் அதிகமாகப் பேசும் மக்கள் வசிக்கும் சோலாப்பூர், அக்கல்கோட் பகுதிகளை கர்நாடகாவுடன் இணைக்கவேண்டும் என்று கோருவோம் என்று அந்த மாநில முதல்வர் பொம்மை தெரிவித்திருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/mByf1xX
0 Comments