புத்தாண்டை வரவேற்க மக்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். புத்தாண்டு இரவை எப்படிக் கொண்டாடுவது என்று திட்டமிட்டு வருகின்றனர். மும்பை, கோவாவில் ஏற்கெனவே புத்தாண்டு களைகட்டி விட்டது. கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து விழா களைகட்டிக்காணப்படுகிறது.
புத்தாண்டையொட்டி நாளை இரவு முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரை மும்பையில் பீர்பார்கள், பப்கள் திறந்திருக்க மும்பை போலீஸார் அனுமதி கொடுத்துள்ளனர். கொரோனா தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டு அதிகாலை வரை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மும்பை போலீஸார் அனுமதி கொடுத்துள்ளனர்.
அதோடு குடியிருக்கும் கட்டடத்தின் மாடியில் இரவு 12.30 மணி வரை பார்ட்டி நடத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. ஒயின் ஷாப்களும் இரவில் கூடுதல் நேரம் திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மாடியில் மியூசிக் பயன்படுத்துவதாக இருந்தால் அப்பார்ட்மென்ட் கமிட்டியிடம் ஒப்புதல் வாங்கியிருக்கவேண்டும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடற்கரைகளில் கூடி புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடவும் இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க மும்பையில் உள்ள ஜுகு, வர்சோவா,பாந்த்ரா, ஒர்லி, மெரைன் டிரைவ், கோராய் போன்ற கடற்கரையில் தேவையான போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்த போலீஸ் அதிகாரி மும்பை முழுவதும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரைக் கைது செய்திருக்கிறோம் என்று தெரிவித்தார். அதோடு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டுபிடிக்க மும்பை முழுவதும் ஆயிரக்கணக்கான போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/uycKj1v
0 Comments