`காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஏ.டி.எம் தான் கர்நாடகா!’ - தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா

கர்நாடகாவில் வரும் 2023 மே மாதத்துக்குள் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கர்நாடகாவை ஆளும் பா.ஜ கட்சியினரும், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினரும், ஆட்சிக்கட்டிலில் அமர கங்கணம் கட்டிக்கொண்டு, களத்தில் படு ‘பிஸியாக’ தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

ஒரு புறம் காங்கிரஸ் கட்சியினர் ‘ஜோடோ’ யாத்திரை நடத்தி முடித்து, மாவட்டம் வாரியாக வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி விட்டனர். மறு புறம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் ‘பஞ்ச ரத்தின ரத யாத்திரை’ தொடங்கி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். பா.ஜ.க, ‘ஜன் சங்கல்ப’ யாத்திரை நடத்தி, சாதி வாரியான முக்கிய தலைவர்களை சந்தித்தும், ஒவ்வொரு மடாலய தலைவர்களை சந்திப்பதுடன், மாவட்ட வாரியாக மக்களிடம் வாக்கு வங்கியை பலப்படுத்தி வருகின்றனர்.

பொதுக்கூட்டம்.

தென் மாநிலங்கள் ‘டார்கெட்’

இந்த நிலையில், ஏற்கனவே ஆட்சியிலுள்ள கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதுடன், தமிழகம் மற்றும் கேரளாவில் கட்சியை வலுப்படுத்த கடந்த, இரண்டு வாரங்களாக பா.ஜ.க கட்சியின் முக்கிய தலைவர்களான ஜே.பி.நட்டா மற்றும் அமித் ஷா பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று காலை முதல், கார்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிார். அவருடன் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். மாண்டியா மாவட்டம் மத்துாரில், மாண்டியா பால் விற்பனை யூனியன் லிமிடெட் நிறுவனம் சார்பில், 260.9 கோடி ரூபாயில், தினமும் 10 லட்சம் லிட்டர் பால் குளிரூட்டும் வகையில் கட்டப்பட்ட, ‘மெகா டெய்ரி’ மையத்தை துவங்கி வைத்தார்.

தேர்தல் பிரச்சாரத்துக்கான பொதுக்கூட்டம்.

`டபுள் இன்ஜின்’ ஆட்சி...

பின், நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ``கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆட்சியை பார்த்துள்ளோம். இந்த இரண்டு கட்சிகளும் ஊழலின் மூலம் இந்த மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்துவிட்டனர். இரண்டு கட்சியினரும் மக்களுக்கான எந்தப்பணியையும் செய்யாமல், ஊழல் மட்டுமே செய்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடக மாநிலம் டெல்லியின் ஏ.டி.எம் ஆகவும், ஜனதா தளம் ஆட்சியில் அவர்கள் குடும்பத்தின் ஏ.டி.எம் ஆக இருந்தது. இரு கட்சிகளும் கர்நாடகாவை ஏ.டி.எம் போலத்தான் பயன்படுத்தி வந்தனர்.

கர்நாடக மாநிலம் வளர்ச்சியடைய, மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.காவின் ‘டபுள் இன்ஜின்’ அரசால் மட்டுமே முடியும். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஒட்டுமொத்த இந்திய நாட்டையும் பாதுகாப்பான நாடாக மாற்றி வருகிறது, கர்நாடகாவில் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது,’’ எனப்பேசினார். மாண்டியாவில் இருந்து புறப்பட்டு இன்று மாலை, பெங்களூர் வந்த அமித் ஷா, இங்கும் தொண்டர்களை சந்தித்ததுடன், நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா.

லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமூக மக்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவதாக நேற்று, முதல்வர் பசவராஜ் பொம்மை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமூக மக்கள் அதிகம் வாழும் மாண்டியா மாவட்டத்தில் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தை துவங்கியுள்ளது, தேர்தலுக்கான பா.ஜ.கவின் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

‘தேர்தலுக்கு ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே, தங்களின் முக்கிய வாக்கு வங்கியான லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமூகத்தை கவர, பா.ஜ.க காய் நகர்த்தி வருகிறது,’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.



from தேசிய செய்திகள் https://ift.tt/B3fdxws

Post a Comment

0 Comments