கர்நாடகாவின் கடாக் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், பெங்களூருவிற்கு 415 கிலோ மீட்டர் பயணம் செய்து, அறுவடை செய்த 205 கிலோ வெங்காயத்தை விற்றுள்ளார். ஆனால் `உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப, இவருக்கு 8 ரூபாய் 36 பைசாவைக் கொடுத்துள்ளனர்.
கர்நாடகா, கடாக் மாவட்டம் திம்மாபூர் கிராமத்தில் வசித்து வருபவர் தான் பவாடப்பா ஹல்லிகெரே என்ற விவசாயி. இவர் மற்ற விவசாயிகளுடன் சேர்ந்து நவம்பர் 26 - ஆம் தேதி பெங்களூரு யஷ்வந்த்பூரில் உள்ள வேளாண் விளைபொருட்கள் சந்தையில், தான் அறுவடை செய்த 205 கிலோ வெங்காயத்தை விற்க 415 கிலோ மீட்டர் பயணித்துச் சென்றுள்ளார்.
205 கிலோ வெங்காயத்திற்கு இவருக்கு 8 ரூபாய் 36 பைசா மட்டுமே என ரசீதை நீட்டியுள்ளனர். விரக்தியடைந்த விவசாயி அதைப் புகைப்படம் எடுத்துப் பதிவிட்டுள்ளார்.
அந்த ரசீதில், ``205 கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 410 ரூபாய். போர்ட்டர் கட்டணம் 24 ரூபாய். சரக்கு போக்குவரத்துக்கான கட்டணம் 377 ரூபாய் 64 பைசா. எனவே 410 ரூபாய் வெங்காய விலையிலிருந்து, போர்ட்டர் கட்டணம், சரக்கு கட்டணம் போக, மீதம் விவசாயிக்கு 8 ரூபாய் 36 பைசாவே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விவசாயி மற்றும் தொழில்முனைவோரான அர்ஜுன் என்ற ட்விட்டர் பயனர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்தை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், ``கடாக் விவசாயி பெங்களூருவில் தனது 205 கிலோ விளைபொருளை விற்க 415 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார். அவருக்கு 8.36 ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. இவ்வாறுதான், நரேந்திர மோடி மற்றும் பசவராஜ் பொம்மை ஆகிய இரட்டை இயந்திர அரசு விவசாயிகளின் (அதானி) வருமானத்தை இரட்டிப்பாக்குகிறது’’ என்று பதிவிட்டுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/twQ80Sa
0 Comments