FIFA 2022-ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டிகள் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறவிருக்கிறது.
நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து வருகிற நாட்களில் , 32 நாடுகளின் அணிகள் தொடர் எலிமினேஷன் சுற்றுகளில் போட்டியிடுவார்கள். இறுதியில் வெற்றி பெறுகிற அணி வருகின்ற டிசம்பர் மாதம் 18-ம் தேதி உலகக் கோப்பையைக் கைப்பற்றும்.
FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கியதை அடுத்து, ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். அதோடு தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களின் கட்-அவுட்கள் வைப்பது, போஸ்டர்கள் ஒட்டுவது என தெருக்களை அலங்கரித்து கொண்டாடி வருகின்றனர். கால்பந்தாட்டத்தின் மீது தீராத காதல் கொண்ட கேரள ரசிகர்கள் 17 பேர் செய்த செயல் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்திட்குட்பட்ட முண்டக்காமுகள் எனும் கிராமத்தில் அனைவரும் இணைந்து பார்க்கும் வகையில் 17 ரசிகர்கள் இணைந்து ரூ. 23 லட்சத்துக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். அந்த வீட்டை சுற்றிலும் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் 32 நாடுகளின் கொடிகள் மற்றும் கால்பந்து வீரர்களான மெஸ்ஸி, கிரிஸ்டியானோ ரெனால்டோ ஆகியோரின் உருவம் வைத்து அலங்கரித்துள்ளனர். அதோடு அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாட்டு போட்டிகளைப் பார்க்கும் வகையில் பெரிய திரை கொண்ட தொலைக்காட்சி ஒன்றும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த 17 பேர்களில் ஒருவரான ஷஃபீர் கூறுகையில், "இந்த 2022 உலகக் கோப்பை போட்டிகளின் போது ஏதேனும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி ஏற்கெனவே விற்பனைக்காக இருந்த வீட்டை 17 பேர் இணைந்து ரூ. 23 லட்சத்துக்கு வாங்கினோம். நாங்கள் பெரிய தொலைக்காட்சி ஒன்றை வாங்க முயற்சிக்கிறோம். எதிர்காலத்தில் எங்கள் அடுத்த தலைமுறையும் ஒற்றுமையாக இங்கு போட்டிகள் காண இணைந்து வருவார்கள். பார்வையாளர்கள் , ரசிகர்கள் என அனைவரும் இணைந்து பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறோம் ", என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/kQzFa8M
0 Comments