மகாராஷ்டிராவை சேர்ந்த இந்து மத ஆர்வலர் சாம்பாஜி பிகே, இந்துத்துவ அமைப்பான `சிவ் பிரதிஷ்தான் ஹிந்துஸ்தான்’ என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வருகிறார். எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது இவர் வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு, தனது தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிட்டதால்தான், தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்ததாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சாம்பாஜி பிகே மும்பையில் உள்ள தலைமை செயலகத்திற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை சந்திக்க வந்தார். அவர் ஷிண்டேயை சந்தித்துவிட்டு வெளியில் வந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் சாம்பாஜியிடம் பேட்டியெடுக்க முயன்றார். அவருக்கு பதிலளிக்க மறுத்த சாம்பாஜி, `ஒவ்வொரு பெண்ணும் பாரத் மாதாவை போன்றவர். பாரத் மாதா ஒன்றும் விதவை இல்லை. பெண்கள் விதவை போன்று காட்சியளிக்கக் கூடாது. வெளியில் வரும் முன்பு, நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டுதான் வரவேண்டும்’ என்று தெரிவித்தார். அவர் அவ்வாறு பேசியது சமூக வலைதளத்தில் வைரலாகியது.
சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரும் இந்த சம்பவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், `நெற்றியில் குங்குமம் வைப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்வது எங்களது விருப்பம். இவர்களைப் போன்ற வயதானவர்களுக்கு நாங்கள் மரியாதை கொடுக்கிறோம். ஆனால் அவர்களும் மரியாதைக்குரியவர்களாக இருக்கவேண்டும். நெற்றியில் குங்குமம் வைப்பது எனது தனிப்பட்ட விருப்பம். இது ஜனநாயகம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மகாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணையத் தலைவர் ரூபாலி, சாம்பாஜியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, சாம்பாஜியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சாம்பாஜியின் பெயர் பீமா - கோரேகாவ் வன்முறை சம்பவத்திலும் இடம் பெற்றிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/4oBTDH0
0 Comments