சாமியார் போல வந்து முன்னாள் எம்.பி-யை அரிவாளால் தாக்கிய நபர்; போலீஸ் விசாரணை | அதிர்ச்சி வீடியோ

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த தலைவரும், முன்னாள் எம்.பி-யுமான போல்னாட்டி சேஷகிரி ராவை, சாமியார் போல வேடமிட்டு வந்த ஒரு நபர் அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காக்கிநாடா மாவட்டம், துனி நகரிலுள்ள போல்னாட்டி சேஷகிரி ராவ் வீட்டில் இன்று காலை 6:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

முன்னாள் எம்.பி போல்னாட்டி சேஷகிரி ராவ் மீது தாக்குதல்

இதில், முகத்தை துணியால் சுற்றிக்கொண்டு சாமியார் வேடமிட்டு வந்திருந்த நபர் ஒருவர், சேஷகிரி ராவுக்கு ஆசீர்வாதம் வழங்குவதுபோல் அருகில் வந்து திடீரென மறைத்துவைத்திருந்த அரிவாளால் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறது. மேலும், இந்த தாக்குதலில் கையில் பலத்த காயமடைந்த சேஷகிரி ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதேசமயம் சாமியார் போல வேடமிட்டு வந்து தாக்குதல் நடத்தியவரின் அடையாளத்தை போலீஸார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் போலீஸார் தரப்பில், தாக்குதல் நடத்தியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், தலைமறைவாகிவிட்ட அந்த நபரைக் கண்டுபிடிப்பதற்கு மேற்கொண்டு விசாரணை நடைபெறுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/ZeTm3a4

Post a Comment

0 Comments