கஷாயத்தில் விஷம் கலந்து இளைஞர் கொல்லப்பட்ட வழக்கு; கேரளா போலீஸிடமிருந்து தமிழக போலீஸுக்கு மாறுகிறது!

பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் என்ற கல்லூரி மாணவன் கொலைசெய்யப்பட்ட வழக்கில் அவர் காதலியான் கிரீஷ்மா கைதுசெய்யப்பட்டுள்ளார். தனக்கு வேறு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கிரீஷ்மா தன் காதலனை கடந்த மாதம் 14-ம் தேதி களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன்சிறையில் உள்ள வீட்டுக்கு வரவழைத்து கொலைசெய்யும் நோக்கத்தில் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிசையில் இருந்த ஷாரோன்ராஜ் கடந்த மாதம் 25-ம் தேதி மரணமடைந்தார். இந்த வழக்கில் கிரீஷ்மாவுக்கு உடந்தையாக இருந்து ஆதாரங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கிரீஷ்மாவின் வீட்டுக்கு அருகே உள்ள குளத்திலிருந்து அவர் பயன்படுத்திய பூச்சி மருந்து பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிரீஷ்மாவின் தாய் சிந்து

இந்த நிலையில், பாறசாலை போலீஸார் ஆரம்பத்திலேயே இந்த வழக்கில் நடவடிக்கை எடுப்பதில் வேகம் காட்டவில்லை என ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இது கிறித்து ஜெயராஜ் கூறுகையில், "சந்தேகத்துக்கு இடமாக ஏதோ காதலி வீட்டில் வைத்து கொடுத்திருப்பதாக நாங்கள் போலீஸிடம் தெரிவித்தோம். அவர்கள் கிரீஷ்மாவின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தவோ, அவர் அம்மாவிடம் விசாரணை நடத்தவோ, ஷாரோனுக்கு விஷம் கொடுத்த பாட்டிலை எடுக்கவோ இல்லை. பாட்டிலை ஆக்கர் கடையில் போட்டதாக கிரீஷ்மா சொன்னதையே எங்களிடமும் கூறினார்கள். அதுபோல கிரீஷ்மா வீட்டில் ஷாரோன் வாந்தி எடுத்த பகுதியை ஆய்வு செய்யவில்லை.

கிரீஷ்மாவிடம் ஆரம்பத்திலேயே தீவிரமாக விசாரித்திருந்தால் பூச்சி மருந்து கொடுத்தது தெரியவந்திருக்கும். அதன்மூலம் அதற்கு ஏற்றவகையில் சிகிச்சை அளித்து ஷாரோனை காப்பாற்றியிருக்கலாம். கிரீஷ்மாவின் வீட்டிலிருந்து கஷாயம் குடித்தது வாக்குமூலத்தில் இருந்தது. கிரீஷ்மாவின் போனை கைப்பற்றி ஆய்வு செய்திருந்தால் அவர் ஸ்லோ பாய்சன் குறித்து கிரீஷ்மா இணையதளத்தில் தேடியதை முன்கூட்டியே கண்டறிந்திருக்கலாம். கிரீஷ்மா கூகுள் ஹிஸ்டரியில் அதை டெலிட் செய்திருந்ததை பின்னர்தான் சைபர் செல் உதவியுடன் குற்றப்பிரிவு போலீஸார் கண்டறிந்திருந்தனர். மொத்தத்தில் பாறசாலை போலீஸார் இந்த வழக்கில் ஆரம்பத்திலேயே விசாரணையில் முழுமனதோடு ஈடுபடவில்லை" என்றார்.

கஷாயத்தில் கலக்கப்பட்ட பூச்சி மருந்து இருந்த பாட்டில்

அதேசமயம் ஷாரோனின் குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகளுக்கு பாறசாலை போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி கேரள போலீஸார் கூறுகையில், "ஷாரோன்ராஜூக்கு கஷாயத்தில் விஷம் கலந்துகொடுத்தது கடந்த மாதம் 14-ம் தேதியே நடந்துவிட்டது. அதுபற்றி அவர் குடும்பத்தினர் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் கடந்த 20-ம் தேதி சந்தேகத்துக்கு இடமான வகையில் விஷம் உடலுக்குள் சென்ற நிலையில் இளைஞர் ஒருவர் அட்மிட் செய்திருப்பதாக இன்ட்டிமேஷன் கொடுத்தார்கள். அதனடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுத்ததால், கடந்த 21-ம் தேதி மஜிஸ்திரேட் ரகசிய வாக்குமூலம் பெற்றார்.

ரகசிய வாக்குமூலத்தில் கிரீஷ்மாவுக்கு எதிராக சந்தேகத்துக்கு இடமாக எதுவும் சொல்லவில்லை. அதன் பிறகு விசாரணைக்கு வரும்படி ஷாரோன்ராஜின் குடும்பத்தினரை மூன்று முறை அழைத்தும் அவர்கள் விசாராணைக்கு ஒத்துழைக்கவில்லை, புகாரும் தரவில்லை. கடந்த 25-ம் தேதி ஷாரோன்ராஜ் இறந்த பிறகுதான் புகார் அளித்தனர். குற்றவாளிகளைப் பிடித்து உடனடியாக தூக்கில் போட வேண்டும் என ஷாரோனின் வீட்டில் உள்ளவர்கள் கூறுகின்றனர். நாங்கள் சட்டப்படிதானே நடவடிக்கை எடுக்க முடியும்" என்றனர்.

கிரீஷ்மா

இறந்த ஷாரோன்ராஜின் வீடு அமைந்திருக்கும் பாறசாலை பகுதி கேரள மாநிலத்தில் உள்ளது. ஷாரோனுக்கு கஷாயத்தில் பூச்சிமருந்து கலந்துகொடுத்த கிரீஷ்மாவின் வீடு தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பூச்சிமருந்து கலந்துகொடுத்த ராமவர்மன்சிறையில் உள்ள கிரீஷ்மாவின் வீடு குமரி மாவட்டம், பளுகல் காவல் நிலைய லிமிட்டுக்குள் வருகிறது. குற்றம் நடைபெற்றது பளுகல் காவல் நிலைய எல்லைக்குள் வருவதால் விரைவில் இந்த வழக்கு தமிழக போலீஸ் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. கிரீஷ்மாவை காவலில் எடுத்து விசாரணை நடத்திவிட்டு அனைத்தையும் முழு அறிக்கையாக தயாரித்து தமிழக காவல்துறை வசம் ஒப்படைக்க கேரள போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/ETDIFJQ

Post a Comment

0 Comments