மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக்கொண்டதோடு, ஆளுங்கட்சித் தலைவர்களுக்கான பாதுகாப்பை அதிகரித்தது. இது தவிர நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டத்தினரால் அச்சுறுத்தல் இருப்பதால் அவரது பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. இதில் துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் தன் மனைவியின் பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்திருக்கிறார். பட்னாவிஸ் மனைவி பிரபல தனியார் வங்கி ஒன்றில் உயர் பதவியில் இருக்கிறார். அவருக்கு சமீபத்தில் சமூக வலைதளத்தில் அச்சுறுத்தல் வந்தது.
இதையடுத்து அவருக்கு அரசு ஒய்.பிளஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. முதலில் எக்ஸ் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த பாதுகாப்பு இப்போது தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதோடு அம்ருதா பட்னாவிஸ் வெளியில் செல்லும்போது அவரது வாகனத்தின் முன் வேறு வாகனங்கள் குறுக்கிடக்கூடாது என்பதற்காக வாகனங்களை ஒதுங்குபடுத்தும் பிரத்யேக வாகனமும் வழங்கப்பட்டிருக்கிறது. அம்ருதா புறப்படும் முன்பு அவர் செல்லும் வழியில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு இது குறித்து முன்கூட்டியே தகவல் கொடுக்கப்படும்.
இது தவிர போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வாகனம் அம்ருதா பட்னாவிஸ் வாகனத்துக்கு முன்னால் சென்று வேறு எந்த வாகனமும் குறுக்கிடாமல் ஒழுங்குபடுத்திக்கொண்டே செல்லும். இது குறித்து தேவேந்திர பட்னாவிஸ், ``என் மனைவி பாதுகாப்பை அதிகரிக்கும்படி கேட்கவில்லை. பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு உயர்மட்ட கமிட்டி அவரது பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வாகனமும் அவர் கேட்கவில்லை. அது போன்ற வாகனம் தனக்கு தேவையில்லை என்றுதான் தெரிவித்தார். இது போன்ற வாகனம் தாக்கரே குடும்பத்துக்கு மட்டுமல்லாது, பல முக்கிய தனி நபர்களுக்கும் கொடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். எம்.எல்.ஏ-வாக இல்லாதவர்களுக்குகூட இது போன்ற பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று தன் மனைவிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பை பட்னாவிஸ் நியாயப்படுத்தினார்.
பொதுவாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வாகனம் அரசு பதவியில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் ஒதுக்கப்படுவது வழக்கம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அம்ருதா தனக்கு வழங்கப்பட்டிருக்கும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வாகனத்தை இதுவரை பயன்படுத்தவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அம்ருதாவுக்கு எந்நேரமும் ஒரு எஸ்கார்டு, 5 பாதுகாவலர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/QDUJL3S
0 Comments