கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் நபர் ஒருவர் அறிமுகமாயிருக்கிறார். தொடர்ந்து அந்த சிறுமிக்கு மெசேஜ் அனுப்பி நட்பாகியிருக்கிறார். சிறுமியை நேரிலும் சந்தித்திருக்கிறார். சிறுமியை மூளைச்சலவை செய்து பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மகளுக்கு நேர்ந்த அத்துமீறலைக் கண்டறிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு போக்சோ வழக்கில் கைது செய்தனர். பாலியல் அத்துமீறல் குறித்து சிறுமியிடம் தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. சிறுமியை அந்த நபர் அழைத்துச் சென்று அத்துமீறலில் ஈடுபட்ட இடங்களுக்கு சிறுமியை நேரில் அழைத்துச் சென்று அம்பலவயல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன் அடிப்படையில் பெண் காவலர் துணையுடன் அம்பலவயல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் என மூன்று பேர் அந்த சிறுமியை ஊட்டிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணை முடிந்து மீண்டும் வயநாடு திரும்பும் போது அம்பலவயல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாபு வாகனத்தில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். மேலும் அதை செல்போனில் வீடியோவும் எடுத்திருக்கிறார்.
உதவி ஆய்வாளரின் அத்துமீறல் குறித்து உடன் வந்த காவலர்களிடம் சிறுமி தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. பின்னர் குழந்தைகள் காப்பகத்திற்கு திரும்பிய சிறுமி தனக்கு நேர்ந்த அத்துமீறலை தெரிவித்திருக்கிறார். காப்பகம் மூலம் வயநாடு காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியிடம் உதவி ஆய்வாளர் பாபு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. பாபுவை உடனடியாக போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த அத்துமீறல் குறித்து தெரிவித்துள்ள வயநாடு காவல்துறை அதிகாரிகள், ``ஏற்கனவே பாலியல் வன்முறைக்கு ஆளாகி குழந்தைகள் காப்பகத்தில் உள்ள சிறுமியை விசாரணை என்ற பெயரில் அம்பலவயல் சப்- இன்ஸ்பெக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.
வயநாடு எஸ்.பி ஆனந்த் உத்தரவின் பேரில் நடைபெற்ற விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டது. கண்ணூர் சரக டி.ஐ.ஜி ராகுல், பாபு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திருக்கிறார். பாபுவை கைது செய்து போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது" என தெரிவித்துள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/vW25jK1
0 Comments