சிறிய வீட்டில் வாழ பிடிக்காமல் மனஅழுத்தம்; குழந்தைகளைக் கொலைசெய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்!

மும்பையையொட்டி இருக்கும் நவிமும்பை கன்சோலியில் வசித்தவர் புஷ்பா குர்ஜார் (32). இவர் கணவர் வெனிராம் குர்ஜார். இவர் கைவண்டியில் ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு 3, 1 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. வெனிராம் வழக்கம் போல் ஐஸ்கிரீம் விற்று விட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டு கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்தன. புஷ்பா மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே இது குறித்து வெனிராம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இரண்டு குழந்தைகளும் கழுத்தை அறுத்து கொலைசெய்யப்பட்டிருந்தன. புஷ்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். என்ன காரணத்திற்காக குழந்தைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸார் விசாரணை

விசாரணையில் புஷ்பா தீவிர மன அழுத்ததில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து புஷ்பாவின் உறவினர் ஒருவர் கூறுகையில், ``புஷ்பா ஓர் அறை கொண்ட வீட்டில் வசித்ததால் மிகவும் மன அழுத்ததில் இருந்தார். இது குறித்து தன் கணவரிடமும் தெரிவித்தார். புஷ்பாவின் கணவர் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அடைக்க இங்கேயே இருப்பது என்று முடிவு செய்தார். ஆனால் புஷ்பாவின் மனநிலையை புரிந்து கொண்டு அவரை சொந்த ஊருக்கு அனுப்ப முடிவு செய்தார். இதற்காக யாராவது ராஜஸ்தான் செல்கிறார்களா என்று விசாரித்து பார்ப்பதாக தெரிவித்தார். தீபாவளி நேரத்தில் வியாபாரம் அதிகமாக இருக்கும் என்பதால் அதனை முடித்துக்கொண்டு நானும் வருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

தற்கொலை

சம்பவம் நடந்த தினத்தன்று புஷ்பா மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் புஷ்பாவை அங்குள்ள கோயில் ஒன்றுக்கு அவர் கணவர் அழைத்து சென்றுவிட்டு வந்தார். புஷ்பாவை வீட்டில் விட்டுவிட்டு வியாபாரத்துக்குச் சென்றார். மதியம் புஷ்பா தன் கணவருக்கு போன் செய்து `சாப்பிட வருகிறீர்களா' என்று கேட்டதற்கு நான் பிற்பகலில் தேநீர் குடிக்கும் நேரத்தில் வருகிறேன் என்று தெரிவித்தார். உங்கள் வேலையிலேயே இருங்கள் என்று கூறிவிட்டு கோபத்தில் போனை வைத்துவிட்டார். உடனே வெனிராம் திரும்ப போன் செய்தபோது போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் எதோ விபரீதம் நடக்கப்போகிறது என்ற பயத்தில் வீட்டிற்கு வந்தபோது குழந்தைகளை கொலை செய்துவிட்டு புஷ்பாவும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் கையில் கத்தியால் வெட்டி இருந்தார். இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/E0fWND8

Post a Comment

0 Comments