``சிறையில் பாதுகாப்பாக இருக்க ஆம் ஆத்மி அமைச்சருக்கு ரூ.10 கோடி கொடுத்தேன்!" - சுகேஷ் பகீர் புகார்

டெல்லி தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அந்த நடிகைக்காக கோடிக்கணக்கில் செலவும் செய்தார். திகார் சிறையில் சுகேஷ் அடைக்கப்பட்டிருந்தபோது சிறை அதிகாரிகளுக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்தான். இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி ஆளுநர் சக்சேனாவுக்கு தன் வழக்கறிஞர் மூலம் எழுதியிருக்கும் கடிதத்தில், தான் சிறையில் பாதுகாப்பாக இருக்க ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார்.

மேலும், ``எனக்கு சிறையில் கடுமையான துன்புறுத்தலும், அச்சுறுத்தலும் இருந்தது. இதற்காக பாதுகாப்பு கட்டணமாக அமைச்சருக்கு இந்தப் பணத்தை கொடுத்தேன். அதோடு தென்னிந்தியாவில் கட்சியில் முக்கிய பதவி வாங்கி கொடுப்பதாகவும், ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கிடைக்க உதவுதாகவும் தெரிவித்திருந்தார். இதற்காகவும் சேர்த்து மொத்தம் ரூ.50 கோடியை ஆம் ஆத்மி அமைச்சரிடம் கொடுத்தேன்.

ஆளுநருக்கு வந்த கடிதம்

நான் 2017-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டப் பிறகு சத்யேந்தர் ஜெயின் பல முறை சிறைக்கு வந்து என்னை பார்த்துச் சென்றார். 2019-ம் ஆண்டு மீண்டும் என்னை வந்து சந்தித்தார். அவர் செயலாளர் ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு கட்டணமாகவும், சிறையில் தேவையான வசதிகள் கிடைக்கவும் ரூ.2 கோடி கொடுக்கவேண்டும் என்று சொன்னார். சத்யேந்தர் ஜெயினை எனக்கு 2015-ம் ஆண்டிலிருந்து தெரியும். சத்யேந்தர் என்னை சந்தித்து அவர் மீதான புகாரை திரும்பப் பெறும்படி மிரட்டினார். இந்தக் கடிதத்தை டெல்லி தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் அனுப்பி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது டெல்லி திகார் சிறை தொடர்பானது என்பதால் டெல்லி உள்துறை அமைச்சகம்தான் இது குறித்து விசாரணை நடத்தவேண்டும். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பா.ஜ.க நிர்வாகி பூனம் பாண்டே, ``ஆம் ஆத்மி கட்சிக்கு சுகேஷ் சந்திரசேகர் ரூ.60 கோடி கொடுத்திருக்கிறார். இதில் ரூ.50 கோடி ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு சுகேஷ் சந்திரசேகரை நியமிக்க கொடுக்கப்பட்டது" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்திருக்கிறது. இது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ``குஜராத் தேர்தலிலிருந்து

அரவிந்த் கெஜ்ரிவால்

மக்களை திசை திருப்பவும், மோர்பி பாலம் விவகாரத்தை திசை திருப்பவும் ஆம் ஆத்மி கட்சி மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவையாகும். குஜராத் தேர்தலை கண்டு அவர்கள் பயந்துவிட்டனர். குஜராத்துக்காக அவர்கள் இதுவரை எதையும் செய்யவில்லை. ஆம் ஆத்மி கட்சியால் காங்கிரஸ், பா.ஜ.க போராடிக்கொண்டிருக்கின்றன. சத்யேந்தர் சிங்குக்கு எதிராக போலி செய்தியை பரப்புவதற்கு அவர்கள் சுகேஷ் சந்திரசேகரை பயன்படுத்தியிருக்கின்றனர். இதே போன்றுதான் மதுபான மோசடியில் மணீஷ் சிசோடியா மீது குற்றம்சாட்ட முயன்றனர்" என்று தெரிவித்திருக்கிறார்.

சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில் கடந்த மே மாதத்திலிருந்து சிறையில் இருந்து வருகிறார். சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து முக்கிய பிரமுகர்களை மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/v1htRcy

Post a Comment

0 Comments