தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானிலிருந்து கொண்டு மும்பையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறான். மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பதுங்கியிருந்து மும்பையில் போதைப்பொருள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வரும் தாவூத் இப்ராஹிம், மும்பை தீவிரவாதச் செயல்களுக்குத் தேவையான பணத்தை ஹவாலா முறையில் மும்பைக்கு அனுப்பி இருப்பது தெரியவந்தது. மும்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிரடி சோதனை நடத்தியது. அந்தச் சோதனையில் தாவூத் கூட்டாளிகள் பலரிடம் விசாரிக்கப்பட்டதோடு, சலீம் புரூட், ஆரிஃப் ஷேக், ஷபீர் ஷேக் ஆகியோர் கைதும்செய்யப்பட்டனர்.
தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டாசகீல் கூட்டாளிகளும் ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி வழக்கும் பதிவுசெய்திருக்கிறது. இந்த வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அதில் கைதுசெய்யப்பட்டிருக்கும் மேற்கண்ட மூன்று பேரின் பெயர்களும் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.
தாவூத் இப்ராஹிமும், அவனது கூட்டாளி சோட்டாசகீலும் சேர்ந்து சூரத்தைச் சேர்ந்த ஹவாலா ஆபரேட்டர் மூலம் கடந்த ஓராண்டில் ரூ.25 லட்சத்தை அனுப்பியிருக்கிறனர். இந்தப் பணத்தில் ரூபாய் ஐந்து லட்சத்தை ஷபீர் ஷேக் தன் வசம் வைத்துக்கொண்டு, எஞ்சிய பணத்தை ஆரிஃப் ஷேக்கிடம் கொடுத்திருக்கிறான். ஷபீர் ஷேக் வீட்டில் கடந்த மே 22-ம் தேதி ரெய்டு நடத்தி தேசிய புலனாய்வு ஏஜென்சி ரூபாய் ஐந்து லட்சத்தை பறிமுதல் செய்தது.
சூரத் ஹவாலா ஆபரேட்டர் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.12-13 கோடியை தாவூத் இப்ராஹிம், சோட்டாசகீல் ஆகியோர் மும்பைக்கு அனுப்பியிருக்கின்றனர். அதனை ஷபீர் ஷேக், ஆரிஃப் ஷேக் பெற்றிருக்கின்றனர். இதற்கான வேலைகளை ரஷீத் பாய் என்பவர் செய்து கொடுத்திருக்கிறார். தாவூத்தும் அவன் கூட்டாளிகளும் அனுப்பிய பணம் தீவிரவாதத்துக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ரகசியத்தை பாதுகாக்க ஷபீர் ஷேக் தனது பேச்சை பதிவுசெய்து அதை வாட்ஸ்அப் மூலம் சோட்டாசகீல், தாவூத் இப்ராஹிம் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். இந்த வாய்ஸ் மெசேஜ் பலரை கடந்த பிறகுதான் சம்பந்தப்பட்ட இரண்டு பேரிடமும் சென்றடையும் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்திருக்கிறது. இது தவிர இந்தியாவிலிருந்தும் சாட்சி ஒருவரிடமிருந்து கடந்த 10 ஆண்டுகளில் ரூ.16 கோடியை மிரட்டிப் பறித்து அதனை ஆரிஃப் ஷேக், ஷபிர் ஷேக் ஆகியோர் சோட்டாசகீலுக்கு ஹவாலா முறையில் அனுப்பியிருக்கின்றனர்.
மும்பையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரை, 2 வீடுகளை சலீம் புரூட்டின் வேண்டப்பட்டவருக்கு விற்பனை செய்யும்படி கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். அதில் ரூ.2.7 கோடியை மிரட்டிப் பறித்திருக்கின்றனர். சட்டவிரோத பண தடுப்புச் சட்டம் மட்டுமல்லாது மொக்கா சட்டத்தின் கீழும் தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றவாளிகள் மீது வழக்குபதிவு செய்திருக்கிறது. சோட்டாசகீலுக்கு எதிராக தீவிரவாதம், மிரட்டிப் பணம் பறித்தல், ஒருங்கிணைந்த குற்றம், கொலை, மிரட்டல் உட்பட பல்வேறு பிரிவுகளில் 107 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதை தேசிய புலனாய்வு ஏஜென்சி தனது குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டியிருக்கிறது. மிரட்டிப் பணம் பறிப்பதற்காக ஷபீர் ஷேக் வீட்டில் உண்மையான துப்பாக்கி போன்று இருந்த போலி துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/8j93OcQ
0 Comments