கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான ஆரிப் முகமது கானை ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. ஆரிப் முகமது கான் ஆளுநராகப் பொறுப்பேற்றது முதலே கேரள அரசுடன் கருத்து மோதல்கள் நிலவி வருகிறது. கேரள அரசு அனுப்பும் முக்கிய கோப்புகளைத் திருப்பி அனுப்புவது, அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, பல்கலைக்கழக நியமன விவகாரங்களை விமர்சிப்பது என தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் வரிசை கட்டி நிற்கிறது. ஆளுநரின் இத்தகைய போக்கிற்கு முதல்வர் பினராயி விஜயன் நேரடியாகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தச்சூழலில், பல்கலைக்கழகங்களுக்குத் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.
இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, கேரளத்தில் மாநில அரசால் நியமிக்கப்பட்ட 9 பல்கலைக்கழக துணைவேந்தர்களைப் பதவி விலகுமாறு ஆளுநர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டார். ஆளுநரின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 9 துணைவேந்தர்களும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதுகுறித்து, கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "துணைவேந்தர்கள் யாரும் பதவி விலக வேண்டாம். பதவி விலகச்சொல்லும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. துணைவேந்தர்களை நியமித்தது ஆளுநரே. அந்த நியமனத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டிருந்தால் அதற்கும் ஆளுநர்தான் பொறுப்பு. மாநிலத்தில் பல்கலைக்கழகங்களை அழிக்கும் நோக்கத்துடன் ஆளுநர் போர் தொடுத்துள்ளார்" என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதேபோல், பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், "உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்குக் கேரள பல்கலைக்கழகத்தினை புரிந்து கொள்ள இயலாது" என்று கருத்து தெரிவித்தார்.
நிதியமைச்சரின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குழுவிற்கு ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முழு உரிமை உண்டு. ஆனால் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் தனிப்பட்ட அமைச்சர்களின் அறிக்கைகள், அவர்கள் மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில், ஆளுநர், முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பிய கடிதத்தில், "நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலின் பேச்சுகள், அவருக்கு நான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தபோது அவர் எடுத்த உறுதிமொழியை மீறுவதாக உள்ளது. உறுதிமொழியை வேண்டுமென்றே மீறுபவர்கள் அதனை சிறுமைப்படுத்துபவர்கள் பதவியில் இருக்கத் தகுதியானவர்கள் அல்ல. அவர் தேசத்தின் ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் பேசியிருக்கிறார். என் மீது கல்வி அமைச்சர், சட்ட அமைச்சர் என நிறைய பேர் தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை வைத்திருந்தாலும், அவை என்னைக் காயப்படுத்தவில்லை என்பதால் நான் அவற்றை கண்டு கொள்ளவில்லை.
ஆனால், இப்போது பாலகோபால் பேசியதை நான் கவனிக்கவில்லை என்றால், அது என் பதவிக்கான பொறுப்பைத் தட்டிக் கழித்ததாகிவிடும்" என்று அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், நிதியமைச்சரை பதவியிலிருந்து நீக்கக்கோரும் இந்த கடிதத்தின் கோரிக்கையை முதல்வர் பினராயி விஜயன் ஏற்கவில்லை. இதேபோல், ஆளுநரை கண்டித்து ராஜ்பவன் நோக்கி மாணவ அமைப்பினர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரையும், மத்திய அரசையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை கேரள கம்யூனிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். கேரள ஆளுநரின் ஒரு ரோமத்தை தொட்டால் கூட கேரள அரசைக் கலைக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன், "மாநில அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான மசோதாவைக் கேரள அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், இந்த மசோதாவைக் கிடப்பில் போட்டுவிட்டு ஆளுநர் துணைவேந்தர்கள் விஷயத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறார். நிதியமைச்சர் உத்தரப்பிரதேசத்தைப் பற்றி தான் பேசியுள்ளார். ஆனால், ஆளுநர் இந்த பிரச்னையை திசை திருப்பும் வகையில் செயல்படுகிறார். அமைச்சரையும், துணை வேந்தர்களையும் நீக்குவதற்கும், நியமிப்பதற்கும் முதல்வருக்கே அதிகாரமிருக்கிறது.
ஆளுநர் அதற்கான கோப்புகளில் கையெழுத்து மட்டுமே போட முடியும். இதுமட்டும் தான் ஆளுநரின் வேலை. அரசியல் சட்டப்படி ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பா.ஜ.க எந்தெந்த மாநிலங்களில் ஆட்சியில் இல்லையோ அந்த மாநிலங்களிலெல்லாம் ஆளுநர் மூலமாக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. மத்திய அரசின் ஏஜென்டுகளாக ஆளுநர்கள் நடந்துகொள்கிறார்கள். ஆளுநர்கள் அரசியல் சட்டப்படி நடக்காமல் பா.ஜ.கவின் அரசியல் திட்டப்படி நடந்துகொள்கிறார்கள்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/WarOUHJ
0 Comments