கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் ஊருட்டுஅம்பலம் பகுதியைச் சேர்ந்த 34 வயதாகும் பிரசாந்த் என்பவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் இளம்பெண் ஒருவருக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் இன்ஸ்டாகிராமிலேயே காதல் வார்த்தைகளை அள்ளிவீசி, மனதை பறிக்கொடுத்திருக்கிறார்கள். காதல் மீதான நம்பிக்கையில், அந்தப் பெண் கடந்த மாதம் திருவனந்தபுரம் அருகேயுள்ள பிரசாந்த் வீட்டுக்கே சென்றுவிட்டார். காதலனைச் சந்தித்த பின்னர் கடந்த மாதம் 5-ம் தேதி, அங்குள்ள மாசாணி அம்மன் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் செய்த 15 நாள்களிலேயே இருவருக்கும் இடையேயான காதல் கசந்துப் போய், கருத்து-வேறுபாடு ஏற்பட்டதால், கணவனைப் பிரிந்த அந்தப் பெண் கடந்த மாதம் 23-ம் தேதி, தனது தாய் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு கள்ளக்குறிச்சிக்குத் திரும்பியிருக்கிறார். அதன்பின்னர், காதல் கணவனை அவர் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், மனவேதனையடைந்த பிரசாந்த் மனைவியைத் தேடி தீபாவளி பண்டிகை நாளில் சங்கராபுரத்துக்கு வந்திருக்கிறார். மனைவியின் வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, அவர் அங்கு வரவில்லை என பெற்றோர் தெரிவித்திருக்கிறார்கள். மனைவியைப் பார்க்க முடியாமல் போனதால் வேதனையில் துடித்துப்போன பிரசாந்த் சொந்த ஊருக்குத் திரும்ப மனமில்லாமல், பெருந்துறைப்பட்டு அந்தோணியார்புரம் செல்லும் சாலையிலேயே சுற்றித்திரிந்தார். இதனிடையே திடீரென சுருண்டு விழுந்து மயக்கமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததாக சொல்லப்படுகிறது. முதலுதவி சிகிச்சை அளித்தப் பின்னர் தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, வாணாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் மரணத்துக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/ZKAbUOz
0 Comments