தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு இன்று காலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சரத் பவார் மும்பையிலுள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வரும் நவம்பர் 2-ம் தேதி வரை தொடர்ந்து சரத் பவார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார். அதனைத் தொடர்ந்து நவம்பர் 4, 5-ம் தேதிகளில் ஷீரடியில் நடக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சரத் பவாருக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. ஆனால் சரத் பவாரை தொடர்பு கொண்டு அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் யாத்திரை மகாராஷ்டிராவுக்குள் நவம்பர் 8-ம் தேதி வரும்போது அந்த யாத்திரையில் சரத் பவார் பங்கேற்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். நாண்டெட்டில் ராகுல் காந்தியின் யாத்திரை மகாராஷ்டிராவுக்குள் நுழைகிறது. இதில் கலந்துகொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அசோக்சவானும், பாலாசாஹேப் தோரட்டும் சரத் பவாரை சந்தித்து கேட்டுக்கொண்டனர். உத்தவ் தாக்கரேயிடமும் காங்கிரஸ் தலைவர்கள் இதே கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். எனவே உத்தவ் தாக்கரே அல்லது அவர் மகன் ஆதித்ய தாக்கரே இந்த பேரணியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு சரத் பவார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறுநீரக கல் பிரச்னைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிறிய அளவில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அதே போன்று கடந்த ஆண்டு மார்ச் மாதமும் சரத் பவார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு எண்டோஸ்கோபிக் சிகிச்சை செய்யப்பட்டது. இந்திய அரசியலில் மூத்த அரசியல்வாதியாகக் கருதப்படும் சரத் பவார் வரும் மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/6H97ka2
0 Comments