ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கிலிருந்து வேண்டுமென்றே விடுவிக்கப்பட்டாரா? - புதிய சர்ச்சை!

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டார். மூன்று வார சிறைக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஆர்யன் கான் இந்த ஆண்டு இவ்வழக்கிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த சிறப்பு குழு விசாரணைக்கு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் பெயர் இடம் பெறவில்லை. ஆர்யன் கான் வழக்கு விசாரணையை முதலில் கையாண்ட அதிகாரிகள் சரியாக விசாரிக்கவில்லை என்று சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்தது. ஆர்யன் கானை கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் விசாரணையில் சந்தேகம் எழுப்பப்பட்டதால் அவர் இவ்வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு, வழக்கு விசாரணையும் சிறப்பு விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பு விசாரணைக்குழுதான் ஆர்யன் கானை குற்றமற்றவர் என்று நற்சான்றிதழ் வழங்கி விடுவித்தது.

ஆனால் சிறப்பு விசாரணைக்குழு வேண்டுமென்றே ஆர்யன் கானை இவ்வழக்கிலிருந்து விடுவித்துவிட்டதாக இவ்வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த அதிகாரிகள் குற்றம்சாட்டியிருப்பதற்காக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆர்யன் கான் இருந்த கப்பலில் ரெய்டு நடத்திய குழுவில் இடம் பெற்றிருந்த அதிகாரி ஒருவர், ``ரெய்டு நடந்த இடத்தில் ஆதாரங்களை சேகரிக்க நடந்த போது ஆர்யன் கான் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகத் தெரிவித்து, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து கையெழுத்து போட்டுக்கொடுத்திருக்கிறார். ஆர்யன் கானுடன் கைதுசெய்யப்பட்ட அர்பாஸ் மெர்ச்சன்ட், அச்சித் குமார் ஆகியோர் தாங்களாக போதைப்பொருள் உட்கொண்டதாக வாக்குமூலம் கொடுத்திருக்கின்றனர். அதனை சாட்சியாக பயன்படுத்த முடியும். அதோடு ஆர்யன் கான் மொபைலில் போதைப்பொருள் தொடர்பாக சாட்டிங் விவரங்கள் இருந்தன. இது போன்ற மொபைல் சாட்டிங் விவரங்களை நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் ஆர்யன் கான் வழக்கில் ஆதாரமாக ஏற்கப்படவில்லை.

ஆர்யன் கானும், அவர் நண்பர்களும் தாங்கள் கொடுத்த வாக்குமூலத்தை கோர்ட்டில் மறுத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த உண்மைகளை சிறப்பு விசாரணைக்குழு மறைத்துவிட்டது. ஆர்யன் கான் போதைப்பொருள் கொண்டு சென்ற 7-8 நண்பர்களுடன் பயணம் செய்திருக்கிறார். ஆர்யன் கான் தனது நண்பர்கள் போதைப்பொருளுடன் வருவதை அவர் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கவேண்டும்" கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இதே குழுவில் இடம்பெற்ற மற்றொரு அதிகாரி, ``சர்வதேச போதைக்கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை. ஆர்யன் கான் போதைப்பொருள் தொடர்பாக வெளிநாட்டில் இருப்பவர்களுடன் சாட்டிங் செய்திருந்தார். அதனால் அது போன்று நினைக்க தோன்றியது. அது குறித்து விசாரிக்கவேண்டியிருந்தது. ஆனால் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காகத்தான் கைதுசெய்யப்பட்டார். சிறப்பு விசாரணைக்குழுவின் குற்றப்பத்திரிகையில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. இவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட சாஹிவிற்கு ஜாமீன் கொடுக்கப்படும்போது தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆர்யன் கான்

விசாரணைக்கு ஆஜராகும்படி கூறி சம்மன் அனுப்பியபோது ஒருபோதும் அவர் ஆஜராகவில்லை. இதனால் ஜாமீனை ரத்து செய்யும்படி கூறி சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக்குழு மனுத்தாக்கல் செய்யவில்லை. ஆர்யன் கான் கடந்த 4 ஆண்டுகளில் போதைப்பொருள் தொடர்பாக 25 முறை மொபைல் போனில் சாட்டிங் செய்திருக்கிறார்.

ஆனால் மற்றவர்கள் 3-4 முறை மட்டுமே போதைப்பொருள் தொடர்பாக சாட்டிங் செய்திருக்கின்றனர். ஆனால் ஆர்யன் கான் இவ்வழக்கிலிருந்து திட்டமிட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆர்யன் கான் நடிகை அனன்யா பாண்டேயுடன் போதைப்பொருள் வாங்குவது தொடர்பாக சாட்டிங் செய்திருக்கிறார். அனன்யா பாண்டேயிடம் சிறப்பு விசாரணைக்குழு வாக்குமூலம் பெறவில்லை. இதே போன்று ஆர்யன் கானுடன் போதைப்பொருள் தொடர்பாக சாட்டிங் செய்த அதிஷ் துக்கலிடம் வாக்குமூலம் வாங்கவில்லை" என்றும் குறைபட்டுக்கொண்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/uTXhgn9

Post a Comment

0 Comments