வீட்டை விட்டு வெளியே வந்த குழந்தையை கவ்விச் சென்ற சிறுத்தை! தாய் கோயிலுக்கு சென்றபோது நடந்த சோகம்!

மும்பை கோரேகாவ் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இந்த வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் வசிக்கின்றன. இந்த சிறுத்தைகளோடு மக்கள் காடுகளில் வீடு கட்டி வசிக்கின்றனர்.

இதனால் அடிக்கடி சிறுத்தைகள் மனிதர்கள் நடமாடும் பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. அடிக்கடி மனிதர்களை சிறுத்தைகள் தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதில் பலர் உயிரிழந்திருக்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்திருக்கிறது. கோரேகாவ் ஆரே காலனியில் வசிப்பவர் அகிலேஷ்.

சிறுத்தை

இவருக்கு ஒன்றரை வயதில் ஒரு மகள் இருந்தார். அகிலேஷ் மனைவி பாரதி அதிகாலை நேரத்தில் வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு விளக்கேற்றி சாமி கும்பிட சென்றார். அவர் சாமி கும்பிட சென்ற நேரத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை எழுந்தது. அக்குழந்தை வீட்டில் தாய் இல்லாததை கண்டு மெதுவாக வீட்டை விட்டு வெளியில் வந்தது. அந்த நேரம் புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று குழந்தை எதிகாவின் கழுத்தை கடித்து தூக்கிக்கொண்டு ஓட முயன்றது. அந்நேரம் சாமி கும்பிட சென்ற குழந்தையின் தாய் வீட்டிற்கு திரும்பினார்.

சிறுத்தை குழந்தையுடன் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டு கத்தினார். அதற்குள் சிறுத்தை குழந்தையுடன் அடர்ந்த காட்டுக்குள் ஓடி மறைந்தது. குழந்தையின் பெற்றோர் பக்கத்து வீட்டுக்காரர்களின் துணையோடு குழந்தையை தேடி காட்டுக்குள் சென்றனர்.

காட்டுக்குள் குழந்தையுடன் நின்ற சிறுத்தை, பொதுமக்களை பார்த்தவுடன் குழந்தையை அப்படியே போட்டுவிட்டு காட்டுக்குள் ஓடிவிட்டது. உடனே கழுத்தில் பலத்த காயம் அடைந்த குழந்தை சிகிச்சைக்காக அந்தேரி செவன் ஹில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.

கடந்த ஒரு மாதத்தில் நான்காவது முறையாக சிறுத்தைகள் இப்படி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரி மல்லிகார்ஜுனா கூறுகையில், ``இரவு நேரத்தில் மக்கள் சிறுவர்களை வெளியில் அனுப்புவதை தவிர்க்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

சிறுத்தைக்கு கூண்டு

இச்சம்பவத்தை தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். அதோடு சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க 12 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை ஊழியர்கள் இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களோடு சேர்ந்து தன்னார்வலர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் இரவு நேரத்தில் மற்றும் அதிகாலை நேரங்களில் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியில் அனுப்பவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த செப்டம்பரில் இருந்து இது வரை 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிறுத்தைகள் பொதுமக்களை தாக்கி இருக்கிறது.

ஆரே காடுகள்

ஆரே வனப்பகுதியில் 10 சிறுத்தைகள் இருக்கும் என்று கண்காணிப்பு கேமரா மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இங்கு ஆதிவாசி மக்கள் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இது தவிர பொதுமக்கள் 12 ஆயிரம் பேர் வனப்பகுதியில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

இங்கு முதன் முதலில் அரசு பால் பண்ணை ஆரம்பித்த போது அதில் வேலை செய்தவர்களுக்கு ஆரே வனப்பகுதியில் வீடுகள் கட்டிக்கொள்ள அரசு அனுமதி கொடுத்தது. அதன் பிறகு படிப்படியாக வனப்பகுதியில் ஆக்கிரப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது ஆக்கிரமிப்புக்களை தடுக்க வனத்துறையினர் தனி குழுக்களை நியமித்து கண்காணித்து வருகின்றனர். ஆனாலும் ஆக்கிரமிப்புக்களை தடுக்க முடியவில்லை.



from தேசிய செய்திகள் https://ift.tt/oMTlDnm

Post a Comment

0 Comments